மியாவோ மக்கள்

மியாவோ மக்கள் (Miao people) என்பவர்கள் தெற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வாழும் மொழிரீதியாகத் தொடர்புடைய ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் அதிகாரப்பூர்வ இனக்குழுக்களில் ஒன்றாக சீன அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மியாவோ மக்கள் பெரும்பாலும் தெற்கு சீனாவின் மலைகளில் வாழ்கின்றனர். இவர்களின் தாயகம் குயிசூ, யுன்னான், சிச்சுவான், ஊபேய், ஹுனான், குவாங்ஷி, குவாங்டொங் மற்றும் ஆய்னான் ஆகிய மாகாணங்களை உள்ளடக்கியது . மியாவோவின் சில துணைக்குழுக்கள், குறிப்பாக உமாங்கு மக்கள், சீனாவிலிருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கு (மியான்மர், வடக்கு வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து) இடம்பெயர்ந்துள்ளனர். 1975 இல் லாவோஸை கம்யூனிஸ்ட் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உமாங்கு அகதிகளின் ஒரு பெரிய குழு பல மேற்கத்திய நாடுகளில், முக்கியமாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்பட்டது.

மியாவோ என்பது ஒரு சீன மொழிச் சொல்லாகும். வெவ்வேறு மக்கள் குழுக்கள் சில மருவல் எழுத்துக்களுடன் தங்கள் சொந்த மொழிச் சொற்களைக் கொண்டுள்ளனர். இந்த மக்கள் (ஆய்னானானில் உள்ளவர்கள் தவிர) ஆமோங்கிக் மொழிகளைப் பேசுகிறார்கள், இவற்றில் பல பரஸ்பரம் புரியாத மொழிகள் அடங்கும்.[1]

பெயரிடல்

தொகு

"மியாவோ" என்ற சொல் 1949 ஆம் ஆண்டில் தென்மேற்கு சீனாவில் வசிக்கும் மொழி ரீதியாக தொடர்புடைய இன சிறுபான்மையினரைக் குறிக்கும் அதிகாரப்பூர்வப் பெயராக அந்தஸ்தைப் பெற்றது. தன்னாட்சி நிர்வாகப் பிரிவுகளை நிறுவுதல் மற்றும் மாகாண மற்றும் தேசிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்தல் உட்பட தேசிய அரசாங்கத்தில் சிறுபான்மை குழுக்களை அடையாளம் கண்டு வகைப்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பெயரிடல் இருந்தது.[2] வரலாற்று ரீதியாக, "மியாவோ" என்ற சொல்லை பல்வேறு ஹான் அல்லாத மக்களுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆரம்பகால சீன அடிப்படையிலான பெயர்களில் மியோ, மியோ-டிசே, மியோ-டிஜே, மியு, மியோ, மோ, மியோ-டிசு போன்ற எழுத்துபெயர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சொல் தென்கிழக்கு ஆசிய சூழல்களில், அப்பகுதி மக்களால் இழிவான பொருளில் பயன்படுத்தப்பட்ட சீன மொழி சொல்லான "மியாவோ" என்பதிருந்து உருவாகியுள்ளது. இந்த வார்த்தை மிங் வம்சத்தில் (1368-1644) "காட்டுமிராண்டித்தனம்" என்ற பொருளில் மீண்டும் வழக்கில் பயன்படுத்தப்பட்டது. தென் சீனாவில் ஹான் கலாச்சாரத்தில் ஒருங்கிணைக்கப்படாத பல பழங்குடி மக்களைக் குறிக்க இது பயன்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் "பச்சை" (生 ஷெங்) மற்றும் "சமைத்த" (熟 ஷு) மியாவோ என்ற இரு வழக்குகள் தோன்றுகின்றன. அவை இரு குழுக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்பின் அளவைச் சுட்டிக்காட்டுகின்றன, மேலும் வகைப்படுத்துவதையும் எளிதாக்குகின்றன. குயிங் வம்சத்தின் (1644-1911) காலம் வரை இவற்றிற்கிடையே எழுத்து முறைகளில் அதிக வேறுபாடுகள் தோன்றவில்லை. அதன் பிறகு, பல்வேறு வகை இனக்குழுக்களை அடையாளம் காண்பது சிக்கலானதாக இருந்திருக்கலாம். வரலாற்றுரீதியாகக் அனைத்து மியாவோ மக்களையும் உமாங் மக்களுடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு இருந்துள்ளது. இதற்கு காரணம், முன்னொருகாலத்தில் மியாவோ என்ற வார்த்தை இழிவான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நவீன சீனாவில், இந்த வார்த்தை அங்குள்ள மியாவோ மக்களைக் குறிக்க தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.[3]

வரலாறு

தொகு

டாங் வம்சத்தின் சீன புராணத்தின் படி, மியாவோ மக்கள் சியூ தலைமையிலான சியூலி பழங்குடியினரின் வழிவந்தவர்களாவர். சான் மியாவோ புராணத்தின் படி, சியூலி மக்கள் பண்டைய காலத்து பழங்குடியினரின் வழித்தோன்றல்கள் ஆவர். டோங்டிங் ஏரியைச் சுற்றி சான் மியாவோ (三苗, மூன்று மியாவோ) இராச்சியம் இருந்ததாக சீன பதிவுகள் பதிவு செய்கின்றன. கிமு 704 இல் யுனானில் மற்றொரு மியாவோ இராச்சியம் தோன்றியிருக்கலாம் மற்றும் இது கிமு 3 ஆம் நூற்றாண்டில் சீனர்களால் கைப்பற்றப்பட்டது.[4] டாங் வம்சம் (618-907) வரை சீனப் பதிவுகளில் ஒன்றாக மியாவோ மீண்டும் குறிப்பிடப்படவில்லை. அடுத்த காலகட்டத்தில், மியாவோ தெற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இடம்பெயர்ந்தனர். இவர்கள் பொதுவாக மலைப்பகுதி அல்லது தரிசு நிலங்களில் வசித்து, அவற்றை விவசாயத்திற்கேற்ப மாற்றம் செய்து கொண்டனர். மிங் வம்சத்தின் கிளர்ச்சியின் போது, ஏகாதிபத்தியப் படைகளால் ஆயிரக்கணக்கான மியாவோக்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ratliff, Martha. "Hmong-Mien Languages". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Archived from the original on 2021-04-17. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  2. Schein, Louisa (1986). "The Miao in Contemporary China". In Hendricks, Glenn L. (ed.). The Hmong in Transition (PDF). Staten Island, New York: Center for Migration Studies of New York. pp. 73–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-913256-94-3.
  3. Tapp, Nicholas (2002). "Cultural Accommodations in Southwest China: The "Han Miao" and Problems in the Ethnography of the Hmong". Asian Folklore Studies 61 (1): 77–104. doi:10.2307/1178678. 
  4. Chu Language Rhymes at University of Massachusetts Amherst
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியாவோ_மக்கள்&oldid=3898904" இலிருந்து மீள்விக்கப்பட்டது