மீரான் ஷா

தைமூரிய இளவரசர்

மிர்சா ஜலாலுதீன்[1] மீரான் ஷா பெக் (1366 – 20 ஏப்ரல் 1408) என்பவர் நடு ஆசியாவைச் சேர்ந்த படையெடுப்பாளரும் மற்றும் தைமூரிய பேரரசைத் தோற்றுவித்தவருமான தைமூரின் மகன் ஆவார். இவர் மீரான் ஷா (பாரசீக மொழி: میران شاہ‎) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

முகலாய ஒவியத்தில் மீரான் ஷா

தன்னுடைய தந்தையின் ஆட்சிக் காலத்தின்போது மீரான் ஷா ஆரம்பத்தில் ஒரு சக்திவாய்ந்த மாகாண ஆளுநராகவும் மற்றும் முக்கியமான ராணுவ தளபதியாகவும் இருந்தார். தனது தந்தை தைமூருக்காக அவரின் படையெடுப்புகளில் உதவி செய்தல் மற்றும் கிளர்ச்சிகளை ஒடுக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டார். எனினும் அழிவு ஏற்படுத்துதல் மற்றும் களியாட்டங்களில் ஈடுபடும் குணம் ஆகியவற்றின் காரணமாக இத்தகைய பதவிகளிலிருந்து தைமூரால் நீக்கப்பட்டார். 1405 ஆம் ஆண்டு தைமூரின் இறப்பிற்குப் பிறகு யார் அடுத்த அரசன் என்கிற போரில் மீரான் ஷா சிக்கிக்கொண்டார். அத்தகைய போரில் தனது மகன் கலில் சுல்தானை ஆதரித்தார். தைமூரிய வழித்தோன்றல்களின் பாரம்பரிய எதிரிகளான காரா கோயின்லுக்களுடன் யுத்தம் புரியும் போது மீரான் ஷா கொல்லப்பட்டார்.

மீரான் ஷா தனது வாழ்நாளில் எக்காலத்திலும் ஆட்சி புரியாத போதிலும், தைமூரிய பேரரசின் வரலாற்றில் முக்கியமான பங்காற்றினார். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திரான்சாக்சியானாவின் பெரும்பாலான பகுதிகளை இவரது பேரன் அபு சயித் மிர்சா ஆட்சி செய்தார். அபு சயித்தின் பேரனான பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை தோற்றுவித்தார்.[2]

உசாத்துணை

தொகு
  1. Dasti, Humaira Faiz (1998). Multan, a province of the Mughal Empire, 1525-1751. Royal Book Company. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789694072265.
  2. Bonnie C. Wade (1998). Imaging Sound: An Ethnomusicological Study of Music, Art, and Culture in Mughal India. University of Chicago Press. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-86840-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரான்_ஷா&oldid=3154751" இலிருந்து மீள்விக்கப்பட்டது