முகமாற்றுப் பொருத்து

முகமாற்றுப் பொருத்து (Face transplant) அல்லது முகமாற்று அறுவைச்சிகிச்சை என்றால் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒருவரது முகத்தை வேறோருவருடைய முகம் கொண்டு மாற்றம் செய்யும் அறுவை மருத்துவம் ஆகும். ஒருவரது முகம் விபத்தில் வெட்டப்பட்டு துண்டாகிய பின்னர் அவரது முகத்தையே அவருக்குப் பொருத்துதல் முகமீளப் பொருத்து எனப்படும். இச்சிகிச்சை தோலை மட்டும் எடுத்துப் பொருத்துவதன்று; தசைகள், என்புகள் போன்றவை கூட இச்சிகிச்சையில் மாற்றீடு செய்யப்படலாம். மூளை இறந்து இறக்கும் தருவாயில் உள்ள நபரே முகத்தை வழங்குபவராக உள்ளார்.[1]

முகமாற்றுப் பொருத்தால் பலன் பெறுவோர் தொகு

வெட்டுக்காயம், துப்பாக்கிக் குண்டுக்காயம், எரிகாயம் போன்ற காயங்களால் அல்லது பிறப்பிலேயே முகம் உருக்குலைந்தவர்கள் இம்மாற்றுப் பொருத்து அறுவைச் சிகிச்சையால் பலனடையலாம். இதுவரை நான்கு பேரே (28/03/2012) முழுமையான முகமாற்றுப் பொருத்துக்குட்பட்டவர் ஆவர்.

வரலாறு தொகு

முகமாற்றுப் பொருத்து நடைபெறாத முன்னைய காலங்களில் காயமுற்றவரின் பிட்டப்பகுதியில் அல்லது தொடைப்பகுதியில் இருந்து தோல் எடுக்கப்பட்டு முகத்தில் பதிகை செய்யப்படுவதே சிகிச்சையாக இருந்தது, ஆனால் பாதிக்கப்பட்டவரின் முகம் முகமூடி போன்று தோற்றம் அளிக்கக் காணப்பட்டது; அவர்களது முக அசைவு குன்றிப்போனது; மொத்தத்தில் மனித முகம் ஒன்றை மீளப்பெற முடியா நிலை இருந்தது.

உலகின் முதல் முகமீளப் பொருத்து தொகு

1994இல் வட இந்தியாவில் ஒன்பது வயது நிரம்பிய சந்தீப் கவுர் எனும் சிறுமியின் தலைமுடி சூடடிக்கும் இயந்திரத்தில் அகப்பட்டுப்போகவே முகம் முற்று முழுதாக தலைத்தோலுடன் வெட்டி அகற்றப்பட்டது. சந்தீப்புடைய குடும்பத்தினர் நினைவிழந்த நிலையில் இருந்த சந்தீப் கவுரையும், அச்சிறுமியின் முகத்தையும் தலைத்தோலையும் ஒரு பையில் வைத்துக்கொண்டு அருகில் இருந்த பெரிய வைத்தியசாலைக்குச் சென்றனர். இந்தியாவின் சிறந்த அறுவைச்சிகிச்சை நிபுணர்களுள் ஒருவரான ஆபிரகாம் தோமசு என்பவரால் உலகின் முதல் முகமீளப் பொருத்துச் சிகிச்சை செய்யப்பட்டது.[2] 1996இல் இதேபோன்று அவுத்தேரேலியா மாநிலம் விக்டோரியாவில் ஒரு பெண்ணுக்கு முகமீளப் பொருத்துச் சிகிச்சை செய்யப்பட்டது.[3]

பகுதி முகமாற்றுப் பொருத்து தொகு

உலகின் முதல் பகுதி முகமாற்றுப்பொருத்து 27 நவம்பர் 2005[4][5] இல் நடைபெற்றது. இசபெல்லா டினுவா (Isabelle Dinoire) எனும் பிரான்சு நாட்டைச்சேர்ந்த பெண் தூக்கமாத்திரையை அதிகளவு உண்ட சமயத்தில் அவரது வளர்ப்பு நாய் முகத்தைக் கடித்துக் குதறியது. பெர்னார்ட் டிவுசெல் (Bernard Devauchelle) எனும் பிரான்சிய முக அறுவைச்சிகிச்சை நிபுணரால் மூளை இறந்தவர் ஒருவரது மூக்கு, வாய்ப்பகுதி முக்கோண வடிவில் எடுக்கப்பட்டு இசபெல்லாவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் உலகிற்கு இந்தச் செய்தி 13 டிசம்பர் 2007இல் வெளியான மருத்துவ சஞ்சிகை ஒன்று ( New England Journal of Medicine) மூலம் வெளியிடப்பட்டது; இசபெல்லா தற்போது மகிழ்வுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். கடந்த காலப்பகுதிகளில் ஒவ்வாமை உடல் எதிர்ப்புத்தன்மையால் அவர் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.[6][7]

ஏப்ரல் 2006இல் கரடியால் குதறப்பட்ட சீனாவைச் சேர்ந்த லீ குவோக்சிங் என்பவரது கன்னம், மேற்சொண்டு, மூக்கு என்பன மாற்றம் செய்யப்பட்டது,[8][9] ஆனால் லீ 21 டிசம்பர் 2008இல் இறந்துவிட்டார். அவர் இறந்ததுக்குரிய காரணம் அவர் உடல் எதிர்ப்புத்தன்மையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி மூலிகைகளை நாடியதே என்று டிசுகவரி சனல் மூலம் அறியவந்தது.

பிரான்சில் 2007இல் முகத்தில் மாபெரும் புற்றுநோய்க்கட்டி உடையவருக்கு பகுதி முக மாற்றுப்பொருத்து செய்யப்பட்டது. மார்ச் 2008இலும் பிரான்சில் ஏறத்தாழ முழுமையான முக மாற்றுப்பொருத்தை ஒத்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.[10][11]

முழுமையான முகமாற்றுப் பொருத்து தொகு

பகுதி முகமாற்றுப்பொருத்தின் வெற்றி மருத்துவர்கள் முழுமையான முகம் மாற்ற சிகிச்சை செய்ய உந்துதலாக இருந்தது. முழுமையான முக மாற்றச் சிகிச்சையில் முடியுடன் கூடிய தலைத்தோல், காது என்பவற்றுடன் முழுமுகமும் மாற்றப்படும்.

20 மார்ச் 2010இல் 30 பேரைக்கொண்ட இசுப்பானிய மருத்துவக்குழாம் உலகின் முதலாவது முழுமையான முகமாற்றுப் பொருத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது, ஒரு துப்பாக்கிச்சூட்டு விபத்தில் முகம் சின்னாபின்னமாக்கப்பட்ட ஒருவரது முகம் மாற்றப்பட்டது.[12][13]

8 சூலை 2010இல் கண் இமை, கண்ணீர்ச் சுரப்பிகள் உட்பட முழுமையான முக மாற்ற அறுவைச்சிகிச்சை பிரான்சு நாட்டு மருத்துவர்களால் நடாத்தப்பட்டது.[14] மார்ச் 2011இல் டல்லசு வீன்சு (Dallas Wiens) என்பவருக்கு பொசுடனில் முகமாற்றம் செய்யப்பட்டது, மின்சார விபத்தால் பாதிக்கப்பட்ட இவரது கண்பார்வை மீளத்திரும்பவில்லை.[15]

மிட்ச் கண்டர் என்பவர் தனது 20 வயதில், பயணம் செய்துகொண்டிருந்த மகிழுந்து 10,000 வோல்ட் வலுக்கொண்ட மின்கம்பத்துடன் மோதிய போது அதற்குள் இருக்கும் அனைவரையும் காப்பாற்றி வெளியே எடுக்கும் சமயத்தில் மின்வடக்கம்பி முகத்தருகே வெடித்தது, இதனால் முகம் எரிந்து கால் ஒன்றையும் இழந்தார். அன்று இவரது முகத்தில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முகம் பார்ப்பதற்கு விகாரமாகக் காணப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் ஏப்ரல் 2011இல் முழுமையான முகமாற்றுப் பொருத்து செய்யப்பட்டது, தற்போது பார்ப்பதற்கு மிகவும் பொலிவுடன் காணப்படுகின்றார்.[16]

துப்பாக்கி குண்டு முகத்தைத் துளைத்ததால் முகத்தில் மிக அதிகமான சேதங்களைக் கொண்டிருந்த 37வயதுடைய ரிச்சர்ட் லீ நோரிஸ் எனும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு அமெரிக்காவில் உள்ள மேரிலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் மார்ச் மாதம் 2012இல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.[17][18]

அறுவைச்சிகிச்சை தொகு

முகமாற்றுப் பொருத்து செய்யப்பட முன்னர் உகந்த முகவழங்கி ஒருவரைத் தேடல் நடைபெறும். முகவழங்குனர் இறக்கும் தருவாயில் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். வழங்குபவரதும், முகத்தை ஏற்பவரதும் இழையங்கள் பொருத்தம் பார்க்கப்படும். எச்.எல்.ஏ (HLA) எனப்படும் மனித வெள்ளணு பிறபொருளெதிரியாக்கி மனிதர்களுக்கு வெவ்வேறாக உள்ளது; ஒத்த இரட்டைக்குழந்தைகளில் மட்டும் ஒரே மாதிரியாக உள்ளது. வெவ்வேறு எச்.எல்.ஏ உடையவர்களில் உறுப்பு மாற்றம் நடக்குமாயின் உடலின் எதிர்ப்புத்தன்மை, பதிக்கப்பட்ட உறுப்பை அல்லது எந்தவொரு இழையத்தையும் பிறபொருள் எனக் கருதி அழித்துவிடலாம். இதைத் தவிர்க்கவே வழங்குபவரதும் வேண்டுபவரதும் எச்.எல்.ஏ கிட்டத்தட்ட ஒத்திருக்கவேண்டியது அவசியமாகின்றது.[19] மறுகட்டமாக, வழங்குனரின் மூளை இறப்பு அடைந்ததும், உடனடியாக முகம் வெட்டப்பட்டு பனிக்கட்டிகளுள் பாதுகாப்பாக முகமேற்பவர் இருக்கும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும். தேவையைப் பொறுத்து குருதிக்குழாய்கள், தசைகள், எலும்புகள் என்பனவும் எடுக்கப்படும். அறுவைச்சிகிச்சை 8 தொடக்கம் 15 மணித்தியாலங்கள் நீடிக்கலாம்.

அறுவைச்சிகிச்சையின் பின்னர், ஆயுட்காலம் முழுவதும் முகமேற்றவர் உடல் எதிர்ப்புத்தன்மையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தவேண்டியது மிகவும் அவசியமாகின்றது. ஆனால் மிக நீண்ட நாட்களுக்கு இவ்வகை மருந்துகளின் பயன்பாடு தொற்றுநோய்கள், சிறுநீரகக்கோளாறு, புற்றுநோய் என்பனவற்றை உண்டாக்கலாம்.

அறுவை மருத்துவத்தின் பின்னர் முகம் வழங்கியவரின் முகத்துக்கும் முகமேற்றவரின் முகத்துக்கும் இடையேயுள்ள தோற்றம் போல முகத்தோற்றம் காணப்படும், இவற்றை எலும்புகளும் தசைகளும் தீர்மானிக்கின்றன.

கதை, திரைப்படங்களில் முகமாற்றச் சிகிச்சை தொகு

 • 1960இல் சோர்சசு பிரான்சூ எனும் இயக்குனரின் “முகமில்லாக் கண்கள்” (French: Les yeux sans visage) எனும் பிரான்சியத் திரைப்படத்தில் மகிழுந்து வீதி விபத்தில் முகம் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு மருத்துவர் முகமாற்றம் செய்வது தொடர்பான காட்சிகள் காட்டப்படுகின்றன.
 • 1964இல் யப்பானிய “இன்னொருவரின் முகம்” (The Face of Another) எனும் புதினத்திலும் முகமாற்றம் தொடர்பான காட்சிகள் உள்ளன. இப்புதினம் 1966இல் அதே பெயர் கொண்டு, திரைப்படமாக எடுக்கப்பட்டது.
 • தமிழில் சுரேஷ்மேனன் இயக்கத்தில் வினீத், ரேவதி நடித்த “புதிய முகம்” எனும் படம் 1993இல் முகம் மாற்றும் காட்சியுடன் வெளிவந்தது.
 • 1997இல் அமெரிக்கத் திரைப்படம் “பேஸ் ஓஃப்” (Face/Off) இலும் முழுமையாக மனித முகத்தை மாற்றம் செய்வது காட்டப்படுகின்றது, இப்படத்தின் திரைக்கதை 1990இல் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.[20]

வெளியிணைப்புகள் தொகு

உசாத்துணைகள் தொகு

 1. "Face transplants 'on the horizon'". BBC News. 27 November 2002. பார்க்கப்பட்ட நாள் 10 May 2011.
 2. Radford, Tim (27 May 2004). "Scientists prepare to turn fiction into fact with first full-face transplant". The Guardian (London). http://www.guardian.co.uk/medicine/story/0,11381,1225537,00.html. பார்த்த நாள்: 25 November 2007. 
 3. "Excerpted: WhiteBoard News". 22 September 1997. Archived from the original on 13 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 25 November 2007.
 4. Austin, Naomi (17 October 2006). "'My face transplant saved me'". BBC News. http://news.bbc.co.uk/1/hi/health/6058696.stm. பார்த்த நாள்: 25 November 2007. 
 5. "Woman has first face transplant". BBC News. 30 November 2005. பார்க்கப்பட்ட நாள் 10 May 2011.
 6. Outcomes 18 Months after the First Human Partial Face Transplantation, New England Journal of Medicine, 13 December 2007
 7. Face-Transplant Patient 'Satisfied': Some Who Criticized Procedure Are Impressed With Results, By Rick Weiss, Washington Post, Thursday, 13 December 2007; Page A22
 8. "China's first human face transplant successful". Xinhua. 15 April 2006. பார்க்கப்பட்ட நாள் 25 November 2007.
 9. "'First face transplant' for China". BBC News. 14 April 2006. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4910372.stm. பார்த்த நாள்: 25 November 2007. 
 10. Watt, Nick (25 March 2008). "World's First Full Face Transplant Hailed". abcnews.go.com. பார்க்கப்பட்ட நாள் 25 March 2008.
 11. Franklin, Katie (25 March 2008). "Man has first full-face transplant". The Daily Telegraph (UK) இம் மூலத்தில் இருந்து 25 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080325061807/http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=%2Fnews%2F2008%2F03%2F23%2Fwface123.xml. பார்த்த நாள்: 25 March 2008. 
 12. Briggs, Helen (23 April 2010). "Full face transplant 'a success'". BBC News. http://news.bbc.co.uk/2/hi/health/8639437.stm. 
 13. "Woman mauled by chimp shows new face in first photo". யாகூ!. 11 August 2011. பார்க்கப்பட்ட நாள் 11 August 2011.
 14. "French doctors carry out world's first full-face transplant". RFI. 8 July 2010. http://www.english.rfi.fr/france/20100708-french-doctors-carry-out-worlds-first-full-face-transplant. பார்த்த நாள்: 11 October 2010. 
 15. "Boston hospital performs full face transplant". USA Today. 21 March 2011. Archived from the original on 23 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 16. "Meeting face transplant patient, Mitch Hunter". BBC. 28 November 2011. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011.
 17. "Face transplants are not the only solution to disfigurement". TheGuardian. 28 March 2012. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
 18. "அமெரிக்காவில் முழுமையான முகமாற்று சிகிச்சை". BBC Tamil. 28 March 2012. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
 19. "How Face Transplants Work". Stephanie Watson. 15 November 2007. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011.
 20. Christopher Heard. Ten thousand bullets: the cinema of John Woo. Los Angeles: Lone Eagle Publ, 2000. ISBN 158065021X
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமாற்றுப்_பொருத்து&oldid=3567897" இலிருந்து மீள்விக்கப்பட்டது