முகாலி
முகாலி (மொங்கோலியம்: Мухулай; 1170–1223) அல்லது முகுலை என்பவர் ஒரு மங்கோலிய அடிமை ஆவார். இவர் பிற்காலத்தில் செங்கிஸ் கானின் கீழ் நம்பகமான மற்றும் மதிப்பிற்குரிய தளபதி ஆனார். இவரது தந்தை கூன் உவா, ஜலைர் இனத் தலைவர் ஆவார். இவரது தந்தை மங்கோலியர்களுக்கு விசுவாசமாக இருப்பதென உறுதி எடுத்து இருந்தார். "முகாலி" என்பது உண்மையில் ஒரு அடைமொழி ஆகும். இதன் பொருள் "அன்பிற்குரியவர்". பெரிய கானுக்கும் மற்றும் மங்கோலியப் பேரரசுக்கும் செய்த சேவை காரணமாக இவர் இந்த அடைமொழியைப் பெற்றார். மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பின் போது முகாலி ஒரு படைத் தலைவராக செங்கிஸ் கானுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் மற்றும் சீனாவின் வைசிராயாகப் பதவி உயர்த்தப்பட்டார். செங்கிஸ் கான் மத்திய ஆசியாவை வெல்லப் புறப்பட்ட போது முகாலிக்கு பெரிய அளவிலான சுய அதிகாரத்தை வழங்கிவிட்டுச் சென்றார். போரில் எதிரிகளைக் கொல்வதற்குப் பதிலாக அவர்களை இணக்கமான முறையில் நண்பர்களாக மாற்றுவதற்கு முகாலி முயற்சித்தார். மங்கோலியர்கள் மீதான மற்றவர்களின் எண்ணத்தை மாற்ற முயற்சித்தார்.[1] ஒகோடியின் ஆட்சியின் போது (1229-1241) திறமையான மங்கோலியத் தளபதிகளுள் ஒருவராக இவர் கருதப்பட்டார்.[2] மிகச்சிறிய படையை வைத்துக் கொண்டு போர்புரிந்த இவர், தான் போர் புரிந்த எந்தப் போரிலும் தோற்கடிக்கப்படவில்லை. இதன் காரணமாக வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த போர்த் தளபதியாக இவர் கருதப்படுகிறார்.
முகாலி | |
---|---|
பிறப்பு | 1170 |
இறப்பு | 1223 (அகவை 52–53) |
சார்பு | மங்கோலியப் பேரரசு |
சேவைக்காலம் | 1206க்கு முன் – 1223 |
போர்கள்/யுத்தங்கள் | மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு |
முகாலி | |||||||
---|---|---|---|---|---|---|---|
சீன எழுத்துமுறை | 木華黎 | ||||||
எளிய சீனம் | 木华黎 | ||||||
|
வாழ்க்கை
தொகுமுகாலி தனது தந்தை கூன் உவாவிற்கு மூன்றாவது மகன் ஆவார். இவர் ஜலைர் பழங்குடி இனத்தின் 'வெள்ளை' பிரிவில் பிறந்தார். இவர்கள் போர்சிசின் மங்கோலியர்களுக்கு பரம்பரை அடிமைகளாக இருந்தனர். உண்மையில் இவர்கள் போர்சிசின் இனத்தின் சுர்கின் பிரிவுடன் தொடர்புடையவர்கள் ஆவர். 1197 ஆம் ஆண்டு செங்கிஸ் கான் சின் அரசமரபின் சுரசன்களைத் தோற்கடித்த போது முகாலியின் தந்தை மற்றும் உறவினர்கள் செங்கிஸ் கானுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி அளித்தனர். கூன் உவா தனது மகன் முகாலியை செங்கிஸ் கானிடம் ஒரு தனிநபர் அடிமையாக ஒப்படைத்தார்.[3] எதிர்மறையான முகாலியின் நேர்மை மற்றும் மெய்யறிவுக்கு செங்கிஸ் கான் பரிசளித்தார். முகாலி பிற்காலத்தில் செங்கிஸ் கானுக்கு ஒரு விசுவாசமான நண்பனாக இருந்தார்.
செங்கிஸ் கானின் முடிசூட்டு விழாவின்போது மூன்றாம் தியுமனைத் தலைமை தாங்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் கிழக்கில் இருந்த மிங்கன்களை கட்டுப்படுத்தும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. 1211 ஆம் ஆண்டு வடக்கு சீனாவில் சுரசன்கள் தலைமையிலான சின் அரசமரபை மங்கோலியர்கள் வென்றதன் முதலாம் கட்டத்தில் முக்கியமான யுத்தமான எகுலிங் போரில் இவர் முக்கியமான பொறுப்பை வகித்தார்.
குவாரசமிய அரசமரபுடன் போர் புரிய முடிவு செய்தபிறகு செங்கிஸ் கான் அனைத்து மங்கோலியப் படைகளின் கட்டுப்பாட்டையும் முகாலியிடம் வழங்கினார். அரசன் என்ற பட்டத்தைக் கொடுத்தார். எனினும் இப்பட்டம் ஒரு சம்பிரதாயத்திற்கான பட்டமேயாகும். முக்கியமான மங்கோலியப் படைகளை மேற்கு நோக்கி போர்புரிய செங்கிஸ் கான் கூட்டிச் சென்ற பொழுதும், முகாலி தன்னிடம் இருந்த சிறிய படையான சுமார் 20,000 மங்கோலியர்களைக் கொண்டு வடக்கு சீனா முழுவதையும் அடிபணிய வைத்தார். எனினும் சில வரலாற்றாளர்கள், அயல்நாட்டு துணைப் படைகளின் எண்ணிக்கையையும் சேர்க்கும் பொழுது, முகாலியின் கீழ் 40,000 முதல் 70,000 வீரர்கள் வரை இருந்தனர் என்று கூறுகின்றனர்.
1217 ஆம் ஆண்டு முகாலி சின் அரசமரபினரால் கட்டுப்படுத்தப்பட்ட தற்கால ஏபெய் மாகாணம், வடக்கு சாண்டோங் மாகாணம் மற்றும் வடக்கு சென்சி மாகாணம் ஆகியவற்றைத் தாக்கினார். இப்பகுதிகள் முக்கியமான விவசாயப் பகுதிகளாகும். இவற்றில் பெரும்பாலானவற்றை 1219 ஆம் ஆண்டு முகாலி அடிபணிய வைத்தார். 1220 ஆம் ஆண்டு முகாலி தனது கவனத்தை எஞ்சிய சாண்டோங் மாகாணத்தின் மீது திருப்பினார். நான்கு பட்டணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் விடாப்பிடியான சின் படைகள் மாகாணத்தின் மற்ற பகுதிகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. முகாலியிடம் போர்க்களத்தில் கடினமான தோல்விகளை சந்தித்த பிறகு, நகரத்தில் இருந்து போர் புரிந்தால் மட்டுமே முகாலியை எதிர்க்க முடியும் என்று சின் படையினர் கற்றுக்கொண்டனர். இதன் மூலம் முகாலியை நகரங்களுக்கு வெளிப்புறத்தில் காக்க வைத்தனர்.
முகாலியின் கடைசிப் படையெடுப்பு 1222 ஆம் ஆண்டு தொடங்கியது. வெயி ஆற்றைக் கடந்து தெற்குப் பகுதியை தாக்கினார். முந்தைய மங்கோலியத் தளபதி சமுகாவால் ஏற்கனவே சூறையாடப்பட்ட பட்டணங்களைக் கைப்பற்றினார். அதே நேரத்தில் சான்சி மாகாணத்தில் சின் படைகள் பதில் தாக்குதலைத் தொடங்கின. முகாலி உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்தார். போர் புரியாமலேயே சின் படைகள் தப்பி ஓடின. மற்றொரு பட்டணத்தை முற்றுகையிட்ட போது முகாலிக்கு கடினமான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறிது காலத்திலேயே 1223 ஆம் ஆண்டு முகாலி இறந்தார். தனது மரணப் படுக்கையில், தான் என்றுமே தோற்கடிக்கப்படவில்லை என பெருமை கொண்டார்.
முகாலியின் இறப்பிற்குப் பிறகு அவரது மகன் போலுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை செங்கிஸ் கான் கொடுத்தார். வடக்கு சீனாவில் 7 ஆண்டுகள் போர் புரிந்த அவர் சின் அரசமரபின் ஆட்சிப் பகுதிகளை ஹெனன் மாகாணத்திற்குள் மட்டும் இருக்குமாறு சுருக்கினார். அவரும் தான் ஒரு சிறந்த தளபதி என நிரூபித்தார். செங்கிஸ் கானுக்குச் சேவை புரியும் தனது முயற்சிகளில் சளைக்காதவராக இருந்தார். இவரது இறப்பிற்குப் பிறகு மற்ற மங்கோலிய தளபதிகளால் சீனாவிற்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதே இவரது சிறந்த சேவைக்கு சான்றாகும். 1229 ஆம் ஆண்டு ஒகோடி அரியணை ஏறியபோது சீனாவிலிருந்த மங்கோலியப் படைகள் பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தன. இதன் காரணமாக சின் அரசமரபினர் சிறிது முன்னேற்றம் அடைந்தனர். ஆனால் 1232 ஆம் ஆண்டு சுபுதை மற்றும் டொலுய் தலைமையிலான மங்கோலிய இராணுவமானது அதனை மாற்றியது.
மரபு
தொகுமுகாலியின் இறப்பிற்குப் பிறகு அவரது வழித்தோன்றல்கள் மங்கோலியக் ககான்களுக்குச் சேவை புரிந்தனர். முக்கியமாக டொலுய் வழிவந்தவர்களுக்கு அவர்கள் சேவை புரிந்தனர். அன்டோங் மற்றும் பைஜூ போன்ற இவரது சில வழித்தோன்றல்கள் செங்கிஸ் கானின் பேரன் குப்லாய் கான் நிறுவிய கன்பூசிய பாணி யுவான் அரசமரபில், பிற்காலத்தில் முக்கியமான அதிகாரிகளாகத் திகழ்ந்தனர்.
அப்போது மொல்லை என்று அழைக்கப்பட்ட ஈரான் மீதான டொலுய் வழிந்த ஹுலாகு கானின் படையெடுப்பின்போது இவரது வழித்தோன்றல்கள் அதில் பங்கெடுத்தனர். ஹுலாகுவின் வழிவந்த ஈல்கானரசு விழுந்ததற்கு பிறகு முகாலியின் வழித்தோன்றல்கள் பகுதாதுவிலிருந்து ஆட்சிசெய்த ஜலையிர் அரசமரபை நிறுவினர்.
உலான் பத்தூரில் உள்ள சிங்கிஸ் சதுக்கத்தில் செங்கிஸ் கானின் சிலைக்கு இரு பக்கங்களிலும் பூர்ச்சுவின் சிலையும், முகாலியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளன.