முதலாம் உருத்திரசேனன் (வாகாடக மன்னன்)

வாகாடக மன்னன்

முதலாம் உருத்ரசேனன் (Rudrasena I ஆட்சி சுமார் 335 – 360 பொ.ச.CE [1] ) வாகடக வம்சத்தின் நந்திவர்தன-பிரவரபுர கிளையின் ஆட்சியாளராவார். இவர் முதலாம் பிரவரசேனனின் பேரனும் வாரிசுகளில் ஒருவருமாவார்.

முதலாம் உருத்திரசேனன்
மகாராஜா
ஆட்சிக்காலம்ஆட்சி சுமார் 335 - 360 பொ.ச.
முன்னையவர்முதலாம் பிரவரசேனன்
பின்னையவர்முதலாம் பிரிதிவிசேனன்
மரபுவாகாடகப் பேரரசு
தந்தைஇளவரசர் கௌதமிபுத்ரன்
தாய்பத்மாவதி நாக மன்னன் பாவ நாகனின் மகள்

வரலாறு தொகு

உருத்ரசேனனின் வாழ்க்கைப் பற்றியும் ஆட்சி பற்றியும் அதிகம் அறியப்படவில்லை. இவரது தந்தை இளவரசர் கௌதமிபுத்ரன் என்பவராவார் இவரது தாயார் ஒருவேளை பத்மாவதி நாக மன்னன் பாவ நாகனின் மகளாக இருக்கலாம். பிற்கால வாகாடகக் கல்வெட்டுகள் இவரை பாவ நாகனின் பேரன் என்று விவரிக்கின்றன. [2] இவர் சிவனின் கடுமையான வடிவமான மகாபைரவரின் பக்தி கொண்டவராகவும் விவரிக்கப்பட்டுள்ளார். இவரது சைவ சார்புகள் சிவ பக்திக்காக குறிப்பிடப்பட்ட இவரது தாய்வழி உறவினர்களால் தாக்கம் பெற்றிருக்கலாம். [3]

- பின்னணி தொகு

கடந்த காலத்தில் சில அறிஞர்கள் அலகாபாத் தூண் கல்வெட்டில் உருத்ரசேனன் என்ற அரசருடன் இவரை அடையாளம் கண்டுள்ளனர். அங்கு இவர் சமுத்திரகுப்தனால் அழிக்கப்பட்ட ஆரியவர்த்தத்தின் ஆட்சியாளர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார். இந்த அடையாளம் பெயர்களின் மேலோட்டமான ஒற்றுமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் பல காரணங்களுக்காக இது சாத்தியமில்லை என்றும் ஏ.எஸ்.அல்தேக்கர் குறிப்பிடுகிறார். முதலாவதாக, ஆரியவர்த்தம் பகுதி வட இந்தியாவைச் சார்ந்தது. அதேசமயம் வாகாடகர்களின் ஆதிக்கம் கண்டிப்பாக தட்சிணபதம் அல்லது தக்காணத்தில் அமைந்திருந்தது. இரண்டாவதாக, குப்தர்கள் மற்றும் வாகாடகர்களுக்கு இடையே போட்டிக்கு அதிக சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில் அவர்களின் செல்வாக்கு மண்டலங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டவை. உண்மையில், சமுத்திரகுப்தரின் புகழ்பெற்ற தெற்குப் பயணத்தின் போது கூட, குப்தர்களுக்கும் வாகாடகர்களுக்கும் இடையே நேரடி மோதல் இல்லை. இறுதியாக, சமுத்திரகுப்தனால் உருத்ரசேனன் கொல்லப்பட்டிருந்தால், இவரது மகன் பிருதிவிசேனன் ஒரு குப்த இளவரசியை ( பிரபாவதிகுப்தா ) மருமகளாக ஏற்றுக்கொள்வது மிகவும் சாத்தியமில்லை. [4]

வாரிசுகள் தொகு

இவரது புகழ்பெற்ற தந்தை பிரவரசேனரைப் போலல்லாமல், உருத்ரசேனன் ஒருபோதும் "சாம்ராட்" என்ற பேரரசு பட்டத்தை ஏற்கவில்லை, அதற்கு பதிலாக "மகாராஜா" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டார். பிரவரசேனன் இறப்பிற்குப் பிறகு அவரது பேரரசு பிளவுபட்டதால், அவரது வாரிசுகள் எவரும் ஏகாதிபத்திய பட்டத்தை கோர முடியவில்லை. இருப்பினும், உருத்ரசேனன் தன் சுதந்திரத்தை இழந்துவிட்டார் என்றோ அல்லது வேறு சில சக்திவாய்ந்த ஆட்சியாளரின் ஆட்சியின் கீழ் இருந்தார் என்றோ இது அர்த்தப்படுத்துவதில்லை. குறிப்பாக தக்காணத்தில், 'மகாராஜா' என்ற பட்டம் சக்திவாய்ந்த மற்றும் சுதந்திரமான அரசர்களால் பயன்படுத்தப்பட்டது. [5]

உருத்ரசேனனின் இராச்சியத்தின் தலைநகரம் நந்திவர்தனம் ஆகும், இது நாக்பூருக்கு வடக்கே சுமார் 13 மைல் தொலைவில் உள்ள ராம்டெக் அருகே உள்ள நாகர்தனைப் போலவே இருக்கலாம். [6] இந்த நகரம் பல நூற்றாண்டுகளாக விதர்பா பிராந்தியத்தில் ஒரு முக்கியமான அரசியல் மையமாக இருந்தது. நாக்பூருக்கு தென்கிழக்கே 50 மைல் தொலைவில் உள்ள தியோடெக் என்ற இடத்தில் இவர் ஒரு சிவன் கோவிலைக் கட்டியதாகவும் அறியப்படுகிறது. [7] முதலாம் பிருத்விசேனன் (உருத்ரசேனனின் மகனும் வாரிசுமாவார்) அரியணை ஏறிய சமயத்தில், அவர்களது குடும்பத்தின் கருவூலம், இராணுவம் மற்றும் கௌரவம் 100 ஆண்டுகளாக "தொடர்ந்து அதிகரித்தன" என்று வாகாடக வம்சத்தின் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன. உருத்ரசேனன் வாகாடக அதிகாரத்தையும் செல்வாக்கையும் தொடர்ந்து பராமரித்து வந்துள்ளார். [8]

சான்றுகள் தொகு

  1. A.S. Altekar (2007). Majumdar, R.C.; Altekar, A.S.. eds. The Vakataka-Gupta Age. Motilal Banarsi Dass. பக். 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120800434. 
  2. Singh, Upinder (2016). A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century. Pearson India Education Services. பக். 482. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131716779. 
  3. D.C. Sircar (1997). The Classical Age. Bharatiya Vidya Bhavan. பக். 178. 
  4. A.S. Altekar (1960). Yazdani, Ghulam. ed. The Early History of the Deccan. Oxford University Press. பக். 167-168. https://archive.org/details/in.ernet.dli.2015.63303. 
  5. Altekar (2007), pp. 97-99
  6. Altekar (2007), p. 105
  7. Altekar (1960), p. 171
  8. Altekar (1960), pp. 99-100