முத்துத் தோட்டுடனான சிறுமி (ஓவியம்)

முத்துத் தோட்டுடனான சிறுமி (Girl with a Pearl Earring, டச்சு: Het Meisje met de Parel) நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியரான ஜொஹான்னெஸ் வெர்மீர் என்பவரின் மிகச் சிறந்த ஓவியங்களுள் ஒன்று. இதன் பெயர் குறிப்பதுபோலவே இவர் ஒரு முத்துத் தோட்டை ஒரு குவியப்புள்ளியாகப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஓவியம் தற்போது, ஹேக் நகரில் உள்ள மோரித்சுயிஸ் எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ளது. இது சில வேளைகளில், "வடக்கின் மோனா லிசா" அல்லது "டச்சு மோனா லிசா" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது. [1]

முத்துத் தோட்டுடனான பெண்
ஜொஹான்னெஸ் வெர்மீர், ~1665
கான்வஸில் எண்ணெய் வண்ணம்
44.5 × 39 cm
மோரித்சுயிஸ், ஹேக் நகர்

பின்னணி

தொகு

பொதுவாக, வெர்மீரைப் பற்றியோ அவரது ஆக்கங்கள் பற்றியோ அதிக விபரங்கள் தெரியாது. இந்த ஓவியம், "IVMeer" என்று ஒப்பமிடப் பட்டுள்ளது. ஆனால், தேதியிடப்படவில்லை. இவ்வோவியத்தை வரைவதற்காக இவரை யாராவது அமர்த்தினார்களா? அப்படியானால் அது யார் போன்ற விபரங்கள் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், இது ஒரு வழமையான உருவப்படமாக (portrait) வரையப்படவில்லை என்றே தெரிகிறது. வெர்மீர், இந்தச் சிறுமி யாரையோ நோக்கித் திரும்பிய போதான கணத்தை வரைய முயன்றிருக்கலாம். இந்தச் சிறுமியின் அடையாளம் தெரியவில்லை. எனினும், இது வெர்மீருடைய மகள் மரியாவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

வெர்மீருடைய அரிய ஆக்கங்கள் வெளிநாட்டினருக்கு விலைபோய்விடுவதைத் தடுப்பதற்காகப் பல ஆண்டுகள் முயற்சித்த விக்டர் டி ஸ்ட்டூவர் என்பவரின் ஆலோசனைப்படி, ஏ. ஏ. டெஸ் தோம்பே (A.A. des Tombe) என்பவர், 1881 ஆம் ஆண்டில் ஹேக் நகரில் நடைபெற்ற ஏல விற்பனை ஒன்றில் இந்த ஓவியத்தை, இரண்டு கில்டரும் முப்பது சதங்களும் மட்டுமே கொடுத்து வாங்கினார். அந்த நேரத்தில் இந்த ஓவியம் மிகவும் பழுதான நிலையில் இருந்தது. டெஸ் தோம்பேக்கு வாரிசுகள் இல்லாததால், இதையும், வேறு ஓவியங்களையும், 1902 ஆம் ஆண்டில் மோரித்சுயிஸ் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

1937 ஆம் ஆண்டில், வெர்மீரால் வரையப்பட்டதாகக் கருதப்பட்ட இதே போன்ற இன்னொரு ஓவியம் சேகரிப்பாளரான அண்ட்ரூ டபிள்யூ. மெலொன் (Andrew W. Mellon) என்பவரால், வாஷிங்டனில் உள்ள தேசிய கலைக் காட்சியகத்திற்கு (National Gallery of Art) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தற்போது இது ஒரு போலி ஓவியம் எனப் பரவலாகக் கருதப்படுகின்றது.

வெளியிணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Vrij Nederland (சஞ்சிகை) (பெப்ரவரி 26 1996), ப. 35–69