முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு

இந்திய ஆட்சி மொழி கொள்கைக்கான ஒரு ஒப்பந்தம்

முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு அல்லது முன்ஷி-அய்யங்கார் வாய்ப்பாடு (Munshi-Ayyangar Formula) இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுத்த ஒரு ஒப்பந்தமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய முதலாம் நாடாளுமன்றத்தில் இந்தி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இரு தரப்பினரும் தங்கள் கொள்கைகளை சிறிது விட்டு கொடுத்து சமரசம் செய்து கொண்டனர். கே. எம். முன்ஷிகோபாலசாமி அய்யங்கார் ஆகியோரால் வடிவமைக்கப் பட்ட இவ்வொப்பந்தத்தால் இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகளாயின.

பின்புலம்தொகு

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது, ஆங்கிலம் நாட்டின் ஆட்சிமொழியாக பயன்படுத்தப்பட்டது. அரசு எந்திரத்தின் மொழியும், சட்டங்கள் இயற்றும் மொழியும் ஆங்கிலமே. இந்திய விடுதலைப் போராட்டம் சூடு பிடித்த போது, இந்திய மக்களை ஒருங்கிணைக்க ஒரு பொது மொழி தேவை என காந்தி கருதினார். அதற்கு பெரும்பாலோனோர் பேசும் இந்துஸ்தானி (உருது மற்றும் இந்தி க்கு பொதுவான மொழி) தேர்ந்தெடுக்கப்பட்டு, தென்னிந்தியர்களிடையே அதை பரப்ப ஹிந்தி பிரச்சார் சபா தோற்றுவிக்கப்பட்டது. 1925 இல் இந்திய தேசிய காங்கிரசின் அலுவலக மொழியாக இந்துஸ்தானி அங்கீகரிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே தேசிய மொழியாக இருக்க வேண்டுமென நேருவும் காந்தியும் கருதினர்.[1][2][3][4]

முதலாம் நாடாளுமன்றம்தொகு

ஆகஸ்ட் 1947 இல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க பிரிட்டன் ஒப்புக் கொண்டது. புதிய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க, இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றம் (இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்) 1946 டிசம்பரில் கூட்டப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணங்களின் சட்ட மன்றங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி 1949 வரை மூன்றாண்டுகள் நடைபெற்றது. ராஜேந்திர பிரசாத் இந்த அவையின் தலைவராக செயல்பட்டார்.[5]

மொழிப் பிரச்சனைதொகு

 
இந்திய நாடாளுமன்றத்தில் முதல் நாள் (டிசம்பர் 11, 1946). வலமிருந்து : பி. ஜி. கேர் மற்றும் சர்தார் படேல். முன்ஷி படேலுக்கு பின்னால் அமர்ந்திருக்கிறார்

புதிய நாடாளுமன்றம் கூடிய முதல் நாளே மொழிப் பிரச்சனை எழுந்தது. பம்பாய், ஐக்கிய மற்றும் மத்திய மாகாணங்களின் உறுப்பினர்கள், அரசியலமைப்புச் சட்டம் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று கூச்சலிட்டனர். ஐக்கிய மாகாணங்கள் உறுப்பினர் துலேக்கர் “இந்துஸ்தானி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடலாம். இம்மன்றத்தை விட்டும் வெளியேறி விடலாம்” என்று கூச்சலிட்டார். பிரதமர் நேருவின் தலையீட்டால், ஆங்கிலத்தில் விவாதங்கள் நடத்தவும், சட்டங்கள் இயற்றவும் பின்னர் அவற்றை இந்துஸ்தானியில் மொழி பெயர்க்கவும் முடிவானது.[6][7][8][9]

துலேக்கர், அல்குராய் சாஸ்திரி, பால்கிருஷ்ண ஷர்மா, புருஷோத்தம் தாஸ் டாண்டன், பாபுநாத் குப்தா, ஹரி விநாயக் படாஸ்கர், சேத் கோவிந்த் தாஸ் ஆகிய வட இந்திய உறுப்பினர்கள் இந்துஸ்தானி சுதந்திர இந்தியாவின் தனி தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டுமெனக் கோரினர். இந்தி ஆதரவாளர்களிடையே இரு கோஷ்டிகள் இருந்தன – சுத்த இந்தி வேண்டுமென விரும்பியோர் (டாண்டன், கோவிந்த தாஸ், சம்பூர்னாந்த், ரவிஷங்கர் சுக்லா, கே. எம். முன்ஷி) மற்றும் இந்துஸ்தானி தேசிய மொழியாக வேண்டுமென விரும்பியோர் (நேரு, அபுல் கலாம் ஆசாத்). இந்துஸ்தானி உருது பேசும் மக்களும் எளிதில் பயன்படுத்தக் கூடிய மொழி என்பது இரண்டாவது கோஷ்டியினரின் வாதம்.[10][11]

இவர்களுக்கு எதிர்ப்பு தென்னிந்திய, குறிப்பாக சென்னை மாகாணத்தின் தமிழ் உறுப்பினர்களிடம் இருந்து வந்தது. டி. டி. கிருஷ்ணமாச்சாரி, துர்காபாய், என். ஜி. ரங்கா, கோபலசாமி அய்யங்கார் இந்தி எதிர்ப்பு கோஷ்டியுள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் ஆட்சி மொழியாக ஆங்கிலமே தொடர்ந்து நீடிக்க வேண்டுமென விரும்பினர். 1947 இல் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூடி மன்றத்தில் இந்தியை ஆதரிப்பது என்று முடிவு செய்தது. காங்கிரசு அவையில் தனிப்பெரும்பான்மை பெற்றிருந்ததாலும், பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்தி/இந்துஸ்தானியை ஆதரித்ததாலும், இந்தி/இந்துஸ்தானியே தேசிய மொழியாகத் தேர்ந்தெடுக்கப் படுமென்ற நிலை நிலவியது. மொழிப் பிரச்சனை அவ்வப்போது வாதிக்கப் பட்டாலும், தீர்வு ஏற்படாமல் இழுத்துக் கொண்டே போனது. 1949 இன் தொடக்கத்தில் அதுவரை இயற்றப்பட்ட சட்டங்களின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியானது. சமசுகிருத தாக்கம் மிகுந்த இந்தியில் அது மொழிபெயர்க்கப்பட்டிருந்ததைக் கண்டு இந்துஸ்தானி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தி/இந்துஸ்தானி கோஷ்டியில் பிளவு ஏற்பட்டு, அவர்களது பெரும்பான்மை பறிபோனது.[6][12]

வங்காள மொழி உறுப்பினர்களும், தென்னிந்திய உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டதால், எந்த கோஷ்டிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. யார், எந்த புதுத் திட்டத்தை கொண்டு வந்தாலும், அது மற்ற இரு கோஷ்டிகளுக்கும் ஏற்புடையதாக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை சமர்பிக்க இறுதி காலக்கெடு நெருங்க நெருங்க குழப்பம் மேலும் அதிகமாகியது.[13]

சமரசம்தொகு

இந்நிலையில் அக்டோபர் 1949 இல், இந்திக் குழுவின் பிரதிநிதி கே. எம் முன்ஷியும், தென்னிந்தியக் குழுவின் பிரதிநிதி கோபாலசாமி அய்யங்காரும், பேச்சுவார்த்தை நடத்தி இரு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு சமரச உடன்பாட்டை உருவாக்கினர். இது முன்ஷி அய்யங்கார் வாய்ப்பாடு என்று வழங்கப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு திருப்தி அளித்ததால், இவ்வாய்ப்பாடே புதிய இந்தியக் குடியரசின் மொழிக் கொள்கைக்கு அடிப்படையாக மாறியது.[3][14][15][16]

விளைவுகள்தொகு

முன்ஷி-அய்யங்கார் உடன்பாட்டின்படி அரசியலமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பிரிவு இயற்றப் பட்டது. இந்தியக் குடியரசுக்கு தனியாக தேசிய மொழி எதுவும் குறிப்பிடப் படவில்லை. மாறாக ஆட்சி/அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப் பட்டன. புதிய ஆட்சி மொழிக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் (பதினேழாம் பிரிவின் உட்பிரிவுகள்):

உட்பிரிவு உள்ளடக்கம்
343 தேவநாகரி எழுத்தில் எழுதப்படும் இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி. ஆனால் பதினைந்தாண்டுகளுக்கு ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும்.
344 ஐந்தாண்டுகள் கழித்து, இந்தியை தனிப்பெரும் ஆட்சி மொழியாக்க ஒரு ஆட்சி மொழிக் குழு அமைக்கப்பட வேண்டும்.
345 மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஆட்சி மொழியில் மட்டும் தகவல் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.
348 சட்டமொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும்.
351 இந்தி மொழியைப் பரப்புவது மத்திய அரசின் கடமை.

343 ஆம் உட்பிரிவில் குறிப்பிட்டபடி 1965 இல் இந்தியை தனி ஆட்சி மொழியாக்க நடுவண் அரசு முயன்ற போது தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் ஏற்பட்டன. அதனால் இன்றுவரை இந்தி, ஆங்கிலம் இரண்டுமே இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகளாக இருந்து வருகின்றன.[11][17][18]

மேற்கோள்கள்தொகு

 1. Ramaswamy, Sumathy (1997). Passions of the tongue: language devotion in Tamil India, 1891-1970. University of Chicago Press. பக். ch.4.21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520208056. இணையக் கணினி நூலக மையம்:36084635. http://www.escholarship.org/editions/view?docId=ft5199n9v7;brand=ucpress. 
 2. Jawaharlal Nehru; Gandhi, Mohandas (1937). The question of language: Issue 6 of Congress political and economic studies. K. M. Ashraf. http://books.google.com/books?id=R5upQgAACAAJ. 
 3. 3.0 3.1 Ramachandra Guha (2008). India after Gandhi: the history of the world's largest democracy. Harper Perennial. பக். 128-131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0060958588, ISBN 978-0-06-095858-9. இணையக் கணினி நூலக மையம்:76961156. http://books.google.com/books?id=EcSoIAAACAAJ. 
 4. Ghose, Sankar (1993). Jawaharlal Nehru, a biography. Allied Publishers. பக். 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170233690, ISBN 978-81-7023-369-5. http://books.google.com/books?id=MUeyUhVGIDMC&pg=PA216. 
 5. FIRST DAY IN THE CONSTITUENT ASSEMBLY, Parliament of India Secretriat
 6. 6.0 6.1 Ramachandra Guha (2004-01-18). "Hindi chauvinism". தி இந்து (The Hindu Group). http://www.hinduonnet.com/thehindu/mag/2004/01/18/stories/2004011800040300.htm. பார்த்த நாள்: 2009-11-26. 
 7. Granville Austin (1966). The Indian constitution: cornerstone of a nation. Clarendon. பக். 277. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0195649591, ISBN 978-0-19-564959-8. http://books.google.com/books?id=0y6OAAAAMAAJ. 
 8. Rajendra Prasad (1984). Dr. Rajendra Prasad, correspondence and select documents, Volume 4. Allied Publishers. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170230020, ISBN 978-81-7023-002-1. http://books.google.com/books?id=EcSoIAAACAAJ. 
 9. Constitution Assembly Debates-Official Report (New Delhi: Lok Sabha Secretariat, 1988), Volume 1, p 26-27
 10. Annamalai, E (1979). "Language Movements Against Hindi as An Official Language". Language movements in India. Central Institute of Indian Languages. http://www.ciil-ebooks.net/html/langMove/hinoff.html. 
 11. 11.0 11.1 S. Viswanathan (2009-12-07). "Language issue again: the need for a clear-headed policy". தி இந்து (The Hindu Group). http://beta.thehindu.com/opinion/Readers-Editor/article61129.ece. பார்த்த நாள்: 2009-12-08. 
 12. Constitution Assembly Debates-Official Report (New Delhi: Lok Sabha Secretariat, 1988), Volume 7, p235
 13. Kanchan Chandra, “Ethnic Bargains, Group Instability, and Social Choice Theory,” Politics and Society 29, 3: 337-62. (For the national language debate in Indian Constituent Assembly)
 14. Brass, Paul R. (1994). The politics of India since independence. Cambridge University Press. பக். 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521459702, ISBN 978-0-521-45970-9. http://books.google.com/books?id=dtKe6XV8z7wC. 
 15. "Constituent Assembly Debate Proceeding (Volume IX) -Tuesday, the 13th September 1949". Ministry of Parliamentary Affairs, Government of India. பார்த்த நாள் 2009-11-26.
 16. Rai, Alok (2001). Hindi nationalism. Orient Blackswan. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8125019790, ISBN 978-81-250-1979-4. http://books.google.com/books?id=fmnpssOM_3kC. 
 17. Kodanda Rao, Pandu Rangi (1969). Language issue in the Indian Constituent Assembly: 1946-1950: rational support for English and non-rational support for Hindi. International Book House. பக். 44–46. ISBN, ISBN. http://books.google.com/books?id=GPksAAAAIAAJ. 
 18. Simpson, Andrew (2007). Language and national identity in Asia. Oxford University Press. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0199267480, ISBN 978-0-19-926748-4. http://books.google.com/books?id=F3XvBbdWCKYC.