மூதின் முல்லை

மூதின்முல்லை என்பது புறத்திணைக்குரிய ஒரு துறையாகும். புறத்திணையில் ஒன்றான வாகைத்திணையில் வரும் துறை. மூதில் என்பது மூத்தகுடி. மூத்த முல்லை குடி. அது மேம்பட்ட குடி.

  • புறநானூற்றுப் பாடல்கள் மூதில்லில் வாழும் குடும்பத் தலைவன் தலைவியரின் பெருமைகளை எடுத்துக் கூறுகின்றன.
  • மறவர்க்கு மட்டுமின்றி அந்த மறக்குடியில் வந்த மடப்பத்தினையுடைய மகளிர்க்கும் மறம் உண்டு என மிகுத்துக் கூறுவது மூதின் முல்லை எனப்படும். [1] என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.

இலக்கணம்

தொகு
தொல்காப்பியம்
தொல்காப்பியம் இல்லத்துக்குப் புகழ் தரும் கொடை, பிழை செய்வோரைத் தடுக்கும் காவல் ஆகியவை பற்றி வாகைத்திணையில் குறிப்பிடுகிறது. [2] இது மூதின்முல்லை துறையின் அடிக்கல்.
புறப்பொருள் வெண்பாமாலை
இல்லத்தரசிக்கு உள்ள வீரத்தைக் கூறுவது மூதின்முல்லை எனப் புறப்பொருருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.[3]
இதற்கு இலக்கியமாக அதன் உரையாசிரியர் தரும் பாடலின் செய்தி: முன்னாட்களில் நடந்த போரில் தந்தையும் கணவனும், தன்னையரும் மாண்டு கல்லில் நின்றார்கள். அக்குடியில் வந்த மறத்தி தன் மகனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது பகைவரது படை வந்தது எனப் பறை முழங்கியது. அது கேட்டுப் பொறாமல் தன் பிள்ளையின் வாயிலிருந்து முலையைப் பறித்தாள். எஃகம்(வாள்) ஒன்றின் வளைவைத் தானே நிமிர்த்தினாள். பிள்ளையின் கையில் கொடுத்தாள். தந்தை முதலியவர்களின் நடுகல்லைக் காண்பித்தாள். பின் தன் புதல்வனைப் போருக்குப் போ என விடுத்தாள். இதில் மூதில் மடவாளின் மறத்தின் மிகுதி கூறப்பட்டிருப்பதால் இது மூதின்முல்லை எனும் துறையாகும்.[4]

இலக்கியம்

தொகு

புறநானூற்றில் மூதின்முல்லை என்னும் துறைப் பாடல்கள் 15 உள்ளன.

  1. முதல் நாள் போரில் அவள் தந்தை பகைவரின் யானையைக் கொன்று தானும் மாண்டுபோனான். இரண்டாம் நாள் போரில் அவள் கணவன் குதிரைகளைக் கொன்று முன்னேறுகையில் மாண்டுபோனான். மூன்றாம் நாள் போர்ப்பறை கேட்டவுடன் தன் ஒரே மகனுக்குப் போராடை அணிவித்துப் போருக்கு அனுப்புகிறாள். (இவள் சிந்தை கெடுக- என்கிறார் புலவர்) [5]
  2. மகனைப் பெற்று வளர்த்தல் என் கடமை. அவனைச் சான்றோன் ஆக்குதல் தந்தை கடமை. அவனுக்கு வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லன் கடமை. அவனை நல்லவனாகவும் வீரனாகவும் ஆக்குதல் வேந்தன் கடமை. போர்க்களத்தில் களிற்றை வென்று மீளல் காளையாகிய என் மகன் கடமை. – தாய் சொல்கிறாள். [6]
  3. நெஞ்சில் வேல் பாய்ந்து கிடந்தவனின் குருதியைக் கண்டு பருந்துகளும் அஞ்சின. [7]
  4. தன் கணவன் பகை நாட்டைக் கைப்பற்றட்டும் என்று ஒருத்தி தன் முன்னோரின் நடுகல்லை வழிபட்டாள். [8]
  5. அவன் பகையரசன் யானைமேல் வேல் வீசினான். பகையரசன் அவன் மார்பில் வேல் எறிந்தான். அவனோ அந்த வேலைப் பிடுங்கி ஓங்கினான். அது கண்ட பகையரசன் யானைகள் புறங்கொடுத்து ஓடின. [9]
  6. அவளுக்குப் பாணர்க்கு விருந்தோம்புதலில் வேட்கை. அவனுக்கோ பகைவனின் பட்டத்துயானையைக் கொன்று அதன் நெற்றியணிகலனாகிய ஓடையைத் தன் அரசனிடமிருந்து பரிசாகப் பெறும் வேட்கை. [10]
  7. மாடு கட்டிப் பிணையல் அடிக்காமல் தானே காலால் துவட்டி எடுத்த வரகைக் கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தான் பிறரிடம் இரக்கும் வறுமையாளன்தான் என்றாலும், பகையரசன் வந்தால் தான் ஒருவனாகவே தாங்கும் வலிமை உடையவன் அவன். [11]
  8. அவன் ஊர் நெல் விளையாத புன்புலம். தன் வயலில் விளைந்த வரகு, தினை ஆகியவற்றையெல்லாம் அவன் இரவலர்களுக்கே வழங்குவான். [12]
  9. தன்னைப் பேணுவோரின் துன்பத்தை எண்ணிப் பார்க்காமல், தன்னிடமுள்ள அனைத்தையும் இரவலர்க்கு ஈயும் பண்பினன் அவன். [13]
  10. கடலுக்குக் கடற்கரை ஆழி. படைக்கடல் அலைக்கும் இவன் ஒருவனே ஆழி போன்றவன். அத்துடன் பாடிச் சென்றோரை மட்டுமல்லாமல் எல்லாரையும் கட்டிக்காக்கும் வள்ளல் அவன். [14]
  11. அரசன் பெருஞ்சோறு வழங்குவது போலப் பந்தல் போட்டு உணவு வழங்குவதில் அவள் சிறுதீ ஞெலி போன்வள். [15]
  12. அவன் வேல் மற்றவரின் வேல் போன்றது அன்று. கூரை இறவானத்தில் செருகப்பட்டுக் கிடந்தாலும் கிடக்கும். மங்கல மகளிர் சூட்டிய மாலையுடன் அவர்களின் யாழிசையுடன் நீராடச் செல்லினும் செல்லும். பகை வேந்தர் பட்டத்துயானை முகத்தில் பாயினும் பாயும். [16]
  13. அவள் விதைத் தினையையும் குற்றி விருந்து படைப்பாள். [17]
  14. அவள் முற்றத்தில் விளையாடும் முயலுக்கும் உணவிடுவாள். பாணர்க்கும் விருந்தளிப்பாள். அவன் பரிசிலர்க்கு வேண்டியவை அனைத்தும் கொடுப்பான். [18]
  15. போர்களத்தில் களிறு எறிந்து பட்ட வீரனுக்கு நடப்பட்ட கல்லைத் தவிர நெல் தூவி வணங்கும் வேறு கடவுள் இல்லவே இல்லை. [19]

உசாத்துணை

தொகு

தா. ம. வெள்ளைவாரணம், புறப்பொருள்வெண்பாமாலை, திருப்பனந்தாள் மட வெளியீடு.1967.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. மூது இல்-பழைமையான குடியில் வந்த இல்லாளின்; முல்லை- இயல்புமிகுதி.
  2. இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்
    பிழைத்தோர்த் தாங்கும் காவலானும் (தொல்காப்பியம், புறத்திணையாயல் 17)
  3. அடல் வேல் ஆடவர்க்கு அன்றியும் , அவ் இல்
    மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 175)
  4. புறப்பொருள் வெண்பாமாலையில் தரப்பட்டுள்ள இத்துறை விளக்கப் பாடல்
    "வந்த படைகோனாள் வயின் முலைமறித்து
    வெந்திறல் எஃகம் மிறைகொளீஇ-முந்தை
    முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள்
    புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு.
  5. புறநானூறு 279,
  6. புறநானூறு 312,
  7. புறநானூறு 288.
  8. புறநானூறு 306,
  9. புறநானூறு 308,
  10. புறநானூறு 326,
  11. புறநானூறு 327,
  12. புறநானூறு 328,
  13. புறநானூறு 329,
  14. புறநானூறு 330,
  15. புறநானூறு 331,
  16. புறநானூறு 332,
  17. புறநானூறு 333,
  18. புறநானூறு 334,
  19. புறநானூறு 335
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூதின்_முல்லை&oldid=3317112" இலிருந்து மீள்விக்கப்பட்டது