மூன்று நிலைய ஒளியமைப்பு
மூன்று நிலைய ஒளியமைப்பு (Three-point lighting) என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்ற காண்பிய ஊடகங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஒளியமைப்பு முறை ஆகும். ஒளி மூலங்களுக்கான மூன்று நிலையங்களைப் பயன்படுத்துவதன் மூலம், படம் எடுக்கப்படும் பொருளை எப்படி வேண்டுமானாலும் ஒளிர்விக்க முடியும். அத்துடன், நேரடி ஒளியினால் உருவாகக்கூடிய நிழல்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது முற்றாக இல்லாமலாக்கவோ முடியும்.
முதன்மை விளக்கு, பொருளின் மீது நேரடியாகப் பட்டு அதற்கு ஒளியூட்டும் முதன்மையாக விளக்காகும். சிறப்பாக, முதன்மை விளக்கொளியின் வலு, நிறம், கோணம் என்பவையே படப்பிடிப்பின் முழு ஒளியமைப்பு வடிவமைப்பையும் தீர்மானிக்கிறது. உள்ளகப் படப்பிடிப்பில் முதன்மை விளக்கு ஒரு சிறப்பு விளக்காகவோ அல்லது, படம்பிடி கருவியின் ஒளியாகவோ இருக்கலாம். பகல் நேரத்தின் வெளிப்புறத்தில் படம்பிடிக்கும்போது, சூரிய ஒளியே பெரும்பாலும் முதன்மை ஒளியாக இருக்கும். இவ்வேளைகளில், படப்பிடிப்பாளர், ஒளிமூலத்தை நகர்த்தமுடியாது. எனவே, சூரிய ஒளி தேவையான அளவு பொருளில் படும்படியாகப் பொருளின் நிலையைத் தெரிவு செய்யவேண்டி இருக்கும் அல்லது சூரியன் சரியான நிலைக்கு வரும்வரையில் பொறுத்திருக்க வேண்டியிருக்கும்.
நிரப்பு விளக்கும் பொருளின் மீது நேரடியாக ஒளியூட்டுவதே. எனினும், இது ஒரு பக்கத்தில் இருந்தே பொருளை ஒளியூட்டும். அத்துடன் முதன்மை விளக்கு உயரமான நிலையில் இருக்க, நிரப்பு விளக்கு அதிலும் குறைவான உயரத்தில் அமைந்திருக்கும். இது, முதன்மை விளக்கினால் ஒளியூட்டப்படாத பகுதிகளுக்கு ஒளி கொடுக்கும். அத்துடன் சியாரோஸ்கியூரோ விளைவு எனப்படும் ஒளி-நிழல் வேறுபாட்டளவைக் குறைக்க அல்லது இல்லாமலாக்க உதவுகிறது. நிரப்பு விளக்கு பொரும்பாலும், மெல்லொளியைக் கொடுப்பதாகவும், ஒளிர்வு குறைந்ததாகவும் இருக்கும்.