மெந்தகாப் தோட்ட மாரியம்மன் ஆலயம்

மெந்தகாப் தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் (Kuil Sri Maha Mariamman Ladang Mentakab) மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள தெமர்லோ ( Temerloh ) மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் சுமார் முக்கால் (3/4) ஏக்கர் நிலப் பரப்பளவில் மெந்தகாப் தோட்டப்புரத்தில் எழுப்பப்பட்டிருக்கின்றது. மெந்தகாப் தோட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசித்து வரும் இந்து மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான இவ்வாலயம் 85 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மாரியம்மனை மூல தெய்வமாகக் கொண்ட இந்த ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் நாடி வந்தோர் வினை தீர்க்கும் ஆலயமாக அனைத்து பக்தர்களாலும் நம்பப்படுகிறது.

ஆலய வரலாறு

தொகு

1925-ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 100 குடும்பங்கள் இயற்கை எழில் மிக்க இந்தத் தோட்டப்புறத்தில் வசித்து வந்தனர். இந்த தோட்டத்தில் வசித்து வந்த அதிகமானோர் பால் மரம் சீவுவராகவும் தோட்டத் தொழிலாளிகளாகவும் பணி புரிந்து வந்தனர். அப்படியாக தோட்டத் தொழிலாளியாக பணி புரிந்து வந்தவர்களிள் ஒருவர் அண்ணாமலை என்பவர். ஒரு முறை அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தப் போது தற்செயலாக ஒரு பெரிய நாக பாம்புப் புற்றினைக் கண்டார். அப்புற்றில் அம்மனின் திருவுருவத்தைக் கண்டு திகைப்பும் ஆச்சிரியமும் அடைந்தார். இந்த விடயம் தோட்டத்து மக்களிடையே பரவத் தொடங்கியது. அனைவரும் அந்த அபூர்வத்தைக் கண்டு வியந்தனர். அன்றிரவே அண்ணாமலையின் கனவில் அம்மன் காட்சி அளித்து தான் அந்த புற்றில் வாசம் செய்வதாக அருளி சென்றாள். மறுநாள் தான் கனவில் கண்டதையும் அம்மனின் வாக்கினையும் தோட்டத்து மக்களிடம் தெரிவித்தார். அன்று முதல் தோட்டத்து மக்கள் அணைவரும் அந்த புற்று அமைந்திருக்கும் இடத்தை தூய்மையாகவும் புனிதமாகவும் பராமரித்து வந்தனர். பக்தியோடு அங்கு செல்லும் பக்தர்கள் பால், பழங்கள், முட்டை போன்றவற்றைப் படைத்து வழிபட்டனர்.

அம்மன் பல முறை நாக வடிவில் வந்து பலருக்கு காட்சியும் அருளினையும் தந்து வந்தாள். பலர் தங்கள் மனக்குறைகளை அம்மனிடம் கூறி வேண்டி, அவை யாவும் சில நாட்களிலேயே முழுமையாக தீர்வுப் பெற்றதும் இந்த தோட்டது மக்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் பெருகியது. கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்பது முன்னோர்களின் வாக்கு. அதற்கேற்ப ஆரம்ப கால கட்டத்தில் வெறும் புற்றாக மட்டும் இருந்த இவ்விடத்தில் பலகையால் ஆன சிறு ஆலயத்தை அமைக்க இந்த தோட்டது மக்கள் முடிவெடுத்தனர். இதற்கான முயற்சிகளின் ஒன்றாக 1963-ஆம் ஆண்டு முதலாவது ஆலய நிர்வாக குழுவை அமைத்தனர். அன்றைய ஆண்டே ஆலய நிர்வாக குழுவில் முக்கிய பொருப்புகள் வகித்த எல்லன், முனியாண்டி, மற்றும் சின்னபையன் ஆகியோரின் கூட்டு முயற்சியில் பலகையால் ஆன ஆலயம் அமைக்கப்பட்டது.

அதன் பின்பு அம்மனின் திருவுருவச் சிலையினை வைத்து அனைவராலும் வழிபாடு செய்து வரப்பட்டது. ஆலய வளாகத்திலேயே காவல் தெய்வமான முனீசுவரர் சிலையையும் வைத்து வழிபட்டனர். இந்த தோட்டத்து மக்கள் மூலவரான மாரியம்மனையே தங்களின் இஷ்ட தேவியாகவும் குல தேவியாக கொண்டு தொழுதனர். அன்றாடம் சிறப்புப் பூஜைகளும் ஆராதனைகளும் செய்து வழிபட்டனர். இக்கோவிலின் சிறப்புகள் சுற்று வட்டார மக்களிடையே பரவி நாளுக்கு நாள் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைப் பெறுகியது.

பல ஆண்டுகள் சென்றதால் பலகையால் ஆன இந்த ஆலயம் வலுவிழந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. பொது மக்களின் நிதி உதவியாலும் நிர்வாகத்தினரின் முழு முயற்சியாலும் 1980-ஆம் ஆண்டு இந்த ஆலயம் கற்களால் புதுப்பிக்கப்பட்டது. அன்றைய ஆண்டே இந்த ஆலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆலயத்தில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ஆலய அருகிலேயே உணவு சமைக்கும் கூடம் மற்றும் உணவு உட்கொள்ளும் இடமும் அமைக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டு மீண்டும் இந்த ஆலயம் மறு சிரமைப்பு செய்யப்பட்டது. ஆலயத்தின் தரம் உயர்தும் வகையில் ஆலய உட்புறம் முழுதும் வண்ணக் கற்கள் (mosaic) பதிக்கப்பட்டது. ஆலயம் முளுமையும் மறுசாயம் பூசி புது பொலிவுப்பெற்றது. கழிவறை, நிகழ்வு மேடை போன்ற இதர வசதிகளும் உருவாக்கித்தந்தனர். அவ்வாண்டு மத்திய காலகட்டத்திலேயே இந்த ஆலயம் மூன்றாவது கும்பாபிஷேகமும் கண்டது. சுமார் 2000-திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அதில் கலந்துக் கொண்டனர். அன்று துவங்கி இன்று வரை மெந்தகாப் தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் பல பக்தர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அமைந்துக் கொண்டு வருகிறது.

ஆலய சிறப்பு நிகழ்வுகள்

தொகு

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பல சிறப்பு நிகழ்வுகளும் பூசைகளும் நடந்து வருகிறது. அவற்றுள் முதன்மை வகிப்பது தைப்பொங்கல். அதைத் தொடர்ந்து தைப்பூசம் இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு மத்தியில் ஆலய உற்சவம் நடத்தப்படுகிறது. தொடர்ந்தாற்போல் பத்தர்கள் பால்குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தும் விழாவாக கொண்டாடப்படும் திருவிழா ஆலயத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. முழுமுதற் கடவுளான விநாயகனுக்கு உகந்தத் தினமான விநாயகர் சதுர்த்தியும் இந்த ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது. ஆண்டிறுதி வாக்கில் இந்த ஆலயத்தில் தீபாவளி மற்றும் கார்த்திகைத் திருநாள் அன்று சிறப்புப் பூசைகள் செய்யப்படுகிறது. இதை தவிர இளைய தலைமுறையினரிடையே சமயப் பற்று வளர்க்கும் வண்ணம் ஆலயத்தில் சமய சொற்பொழிவும் திருமுறை வகுப்புக்களும் நடத்தி வருகின்றனர்.

ஆலயத்தில் உள்ள வசதிகள்

தொகு
  • உணவுத் தயரிக்கும் கூடம்
  • உணவு உட்கொள்ளும் கூடம்
  • தேர் நிறுத்தும் கூடம்
  • நிகழ்வு மேடை