மோகனா அன்சாரி
மோகனா அன்சாரி (Mohna Ansari) (நேபாளி: मोहना अन्सारी) நேபாளத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஆவார். இந்தப் பொறுப்பில் இவர் அக்டோபர் 2014 இல் நியமிக்கப்பட்டார்.[1] இவர் நன்கறியப்பட்ட வலதுசாரி செயற்பாட்டாளரும், இசுலாமிய சமுதாயத்திலிருந்து வந்த நேபாளத்தின் ஒரே பெண் வழக்கறிஞரும் ஆவார்.[2] இவர் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை நேபாளத்தின் மகளிர் ஆணையத்தின் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், இவர் ஐடிய சர்வதேச அமைப்பின் மூத்த ஆலோசகரும் ஆனார்.[3]
மோகனா அன்சாரி | |
---|---|
நேபாளத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நேபாள்கஞ்ச், பான்கே. நேபாளம். |
தேசியம் | நேபாளி |
முன்னாள் கல்லூரி | திருபுவன் பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | வலதுசாரி செயற்பாட்டாளர் |
தொடக்க கால வாழ்க்கை
தொகுமோகனா அன்சாரி பாங்கேயில் நேபாள்கஞ்ச் எனுமிடத்தில் ஒரு இசுலாமிய கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் அய்லணி நிலத்தில் (முறைசாரா வகையில் சொந்தம் கொள்ளப்பட்ட பொது நிலம்) வாழ்ந்து வந்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது, நிலச்சீர்திருத்தத் திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இவரின் தந்தை நிலுவையில் உள்ள வரிகளை எல்லாம் செலுத்தி உரிமை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும், அதே நிலமானது மற்றுமொரு நபராலும் தனக்கு உரிமையானது என நீதிமன்றத்தில் கோரப்பட்டு அவரது தந்தையால் இழக்கப்பட்டது. இதன் காரணமாகவே அன்சாரி தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் வழக்குரைஞராக மாறுவதற்குத் தூண்டுகோலாக அமைந்ததாகக் கூறுகிறார். [4] மோகனா அன்சாரியின் குடும்பத்தின் வருமானத்திற்கான ஒரே மூலம் அவரது தந்தையின் தச்சுத்தொழிலில் கிடைத்த வருமானமேயாகும். மோகனா அன்சாரியின் பெற்றோர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் குழந்தைகளை கல்வியறிவு பெற்றவர்களாகச் செய்ய வேண்டும் எனவும், வெவ்வேறு துறைகளில் பணியாற்ற வேண்டும் எனவும் விரும்பினர். இவரது சகோதரர்கள் ஆங்கில வழியில் உறைவிடப் பள்ளியில் படித்தனர். ஆனால், அன்சாரி அரசுப் பள்ளிக்குச் சென்றார். அங்கு அவரது கூற்றுப்படி தனது பெற்றோர் தன்னைப் பள்ளிக்கு அனுப்பியதே மிகவும் மகிழ்ச்சிக்குரியதென்றும் அதனால் தான் இசுலாமியக் கல்வியைத் தவிர்த்து நவீனக் கல்வியையும் தன்னால் பெற முடிந்ததெனவும் தெரிவிக்கிறார்.
நிதிச் சிக்கல்கள் அவரது கல்லூரிக் கல்வியை பாதித்த காரணத்தால், தனது முதல் வருடம் கல்வி முடிந்த நிலையில் கல்லூரியை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். பின்னர் கல்வி உதவித்தொகை ஒன்று கிடைத்த பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார். அவர் மகேந்திரா பல்நிலைக் கல்லூரியில் இளங்கலை சட்டம் பயில சேர்ந்தார். இந்தக் கல்லூரியே நேபாள்கஞ்சில் உள்ள ஒரே அரசுக்கல்லூரியாகும். இவர் 2003 ஆம் ஆண்டில் தனது பட்டத்தைப் பெற்றார். அவர் தான் கல்வி பயின்ற காலத்தில் பள்ளிகளில் ஒரு தனியார் ஆசிரியராக கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு பணம் ஈட்டித் தன்னைத் தானே காத்துக்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் உள்ளூர் செய்தித்தாள்களில் பெண்கள் மற்றும் குழந்ைதகள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எழுதுவதற்காகவும் தனது நேரத்தைச் செலவிட்டார். பின்னர் சமூகவியலில் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 2004 ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான தெற்காசிய அமைப்பினால் நடத்தப்பட்ட "மனித உரிமைகளும் அமைதிக்கான கல்வியும்" என்ற படிப்பையும் முடித்தார்.
தொழில் வாழ்க்கை
தொகுமோகனா அன்சாரி தனது இளமைக் காலத்தில் தனது வாழ்க்கையை பத்திரிக்கையாளராகவே தொடங்கினார். தொடக்கத்தில் இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து எழுதினார். மேலும், பன்னாட்டு மன்னிப்பு அவையின் வேலைகளில் பகுதி நேரமாகவும் ஈடுபட்டார். 1994 ஆம் ஆண்டில் நேபாளத்தின் மத்திய மேற்குப் பகுதியின் மண்டல விளையாட்டு மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக அரசால் நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ National Human Rights Commission-Nepal, Members & Secretary, http://www.nhrcnepal.org/nhrc_members.html பரணிடப்பட்டது 2018-10-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Meet Mohna Ansari: Nepal's first female Muslim lawyer, Aljazeera, 13 APRIL 2016, http://www.aljazeera.com/indepth/features/2016/04/meet-mohna-ansari-nepal-female-muslim-lawyer-160412141331055.html
- ↑ National Human Rights Commission-Nepal, Brief resume of NHRC Hon'ble Member Mohna Ansari, http://www.nhrcnepal.org/nhrc_members.html பரணிடப்பட்டது 2018-10-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "We may have come a long way, but there is much to achieve" (in en). http://kathmandupost.ekantipur.com/printedition/news/2017-02-18/we-may-have-come-a-long-way-but-there-is-much-to-achieve.html.