யஷ் சோப்ரா
யஷ்ராஜ் சோப்ரா (Yash Raj Chopra, இந்தி: यश चोपड़ा, செப்டம்பர் 27,1932 - அக்டோபர் 21, 2012[1]) ஓர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்கியவர். பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்த யஷ் சோப்ரா தனது திரை வாழ்க்கையை துணை இயக்குநராக ஐ. எசு. ஜோகரிடமும் தனது அண்ணன் பி.ஆர் சோப்ராவிடமும் துவங்கினார். பெரும்பாலும் இந்தித் திரைப்படத்துறையில் பணியாற்றி உள்ளார். 1959ஆம் ஆண்டில் இயக்குநராக அவரது முதல் திரைப்படம் தூல் கா பூல் வெளியானது. தொடர்ந்து 1961இல் சமூக நாடகமாக தர்ம்புத்திரா என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் சோப்ரா சகோதரர்கள் பல திரைப்படங்களை உருவாக்கினர். பாலிவுட்டில் ஒரே படத்தில் பல முன்னணித் திரைப்பட நடிகர்களை வைத்து படமெடுக்கும் பாணியை துவக்கி வணிக ரீதியாக வெற்றிபெற்ற வக்த் (1965) இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
யஷ் சோப்ரா | |
---|---|
பிறப்பு | லாகூர்,(தற்போது பாக்கித்தான்) | 27 செப்டம்பர் 1932
இறப்பு | 21 அக்டோபர் 2012மும்பை | (அகவை 80)
பணி | இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1959 - 2012 |
வாழ்க்கைத் துணை | பமேலா சோப்ரா (1970 - 2012) |
பிள்ளைகள் | ஆதித்யா சோப்ரா உதய் சோப்ரா |
உறவினர்கள் | பி.ஆர் சோப்ரா (உடன்பிறப்பு) தரம் சோப்ரா (உடன்பிறப்பு) |
1973ஆம் ஆண்டில் தமது சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தாக் (1973), தீவார் (1975), கபி கபி (1976), திரிசூல் (1978), சில்சிலா (1981) போன்ற வெற்றித் திரைப்படங்களை வெளியிட்டார். இவற்றில் காதல் உணர்வை நுட்பமாக வெளிப்படுத்தியதால் இவருக்கு காதல் சோப்ரா என்ற பெயரொட்டு ஏற்பட்டது.
சோப்ராவின் திரைப்பணி ஐம்பதாண்டுகளாக ஐம்பது திரைப்படங்களுக்கும் மேலாக தொடர்ந்துள்ளது. இந்தித் திரைப்படத்துறையில் பெரும் சாதனையாளர்களில் ஒருவராக சோப்ரா கருதப்படுகிறார். ஆறு தேசிய திரைப்பட விருதுகளும் பதினோரு பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார். சிறந்த திரைப்பட இயக்குநராக நான்கு முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். 2001ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 2005ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கி இந்திய அரசு பெருமைபடுத்தி உள்ளது. சோப்ராவின் திரைப்பணிக்காக பிரித்தானிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாதமி (BAFTA) இவருக்கு வாழ்நாள் உறுப்புரிமையை வழங்கியுள்ளது.
யஷ் சோப்ரா அக்டோபர் 13, 2012 அன்று டெங்கு காய்ச்சலுக்காக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிட்சை பயனளிக்காது அக்டோபர் 21, 2012 அன்று உயிரிழந்தார்.[1]
சான்றுகோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Veteran filmmaker Yash Chopra dies at 80". IBN Live. 2012-10-21 இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023213419/http://ibnlive.in.com/news/veteran-filmmaker-yash-chopra-dies-at-80/301546-8-66.html. பார்த்த நாள்: 2012-10-21.