யோசபாத்து
புனித யோசபாத்து குன்ட்சேவிச் ([Язафат Кунцэвіч, Jazafat Kuncevič] error: {{lang-xx}}: text has italic markup (உதவி), போலிய: Jozafat Kuncewicz, உக்ரைனியன்: Йосафат Кунцевич, Josafat Kuntsevych) என்பவர் புனித பசிலியார் சபையைச் சார்ந்தவரும், உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் ஆயராக இருந்து திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்து மறைச்சாட்சியாக உயிர்துறந்தவரும் ஆவார். இவர் பிறந்த ஆண்டு 1580 அல்லது 1584 ஆகும். அவர் கிறித்தவ மறைநம்பிக்கைக்காகக் கொல்லப்பட்டது 1623, நவம்பர் 12ஆம் நாள்.
புனித யோசபாத்து குன்ட்சேவிச், புனித பெரிய பசிலியார் சபை | |
---|---|
போலோஸ்க் உயர் மறைமாவட்டம் | |
பேராயர், மறைச்சாட்சி | |
சபை | உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபை |
ஆட்சி பீடம் | போலோஸ்க் உயர் மறைமாவட்டம் |
நியமனம் | சனவரி 9, 1618 |
ஆட்சி முடிவு | நவம்பர் 12, 1623 |
முன்னிருந்தவர் | கெதெயோன் ப்ரோல்னிக்கி |
பின்வந்தவர் | ஆன்டின் சியேவாவா |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 1609 |
ஆயர்நிலை திருப்பொழிவு | நவம்பர் 12, 1617 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | யோவான் குன்ட்சேவிச் |
பிறப்பு | 1580 அல்லது 1584 வோலோடிமீர், போலிய-லித்துவானிய கூட்டமைப்பு |
இறப்பு | நவம்பர் 12, 1623 வித்தேப்ஸ்க், போலிய-லித்துவானிய கூட்டமைப்பு (இன்றைய பெலருஸ்) |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | நவம்பர் 12 (கத்தோலிக்கம்) நவம்பர் 25 (உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபை) |
முத்திப்பேறு | மே 16, 1643 உரோமை திருத்தந்தை எட்டாம் அர்பன்-ஆல் |
புனிதர் பட்டம் | சூன் 29, 1867 உரோமை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்-ஆல் |
இவருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டமும் மறைச்சாட்சி பட்டமும் அளித்துள்ளது.
வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்
தொகுஇன்றைய உக்ரேய்ன் நாட்டிலுள்ள வோல்னியா பகுதியில் 1580 அல்லது 1584இல் பிறந்த இவருக்கு திருமுழுக்கின்போது அளிக்கப்பட்ட பெயர் "யோவான் குன்ட்சேவிச்" ஆகும். வோல்னியா பகுதி இவர் வாழ்ந்த காலத்தில் போலிய-லித்துவானிய கூட்டமைப்பின்கீழ் இருந்தது. இவர் பிறந்த நகரின் பெயர் விளாடிமிர்
கத்தோலிக்க திருச்சபைக்கும் மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம் பிரெஸ்ட் உடன்பாடு (Union of Brest) என்று அழைக்கப்படுகிறது. இது 1596இல் நிகழ்ந்தது. இதன்படி, உக்ரேய்ன் கிரேக்க மரபுவழி சபையானது கத்தோலிக்க திருச்சபையோடு இணைய முன்வந்தது.
மரபுவழி திருச்சபையில் பிறந்த யோவான் குன்ட்சேவிச் முதலில் புனித பசிலியார் துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் கத்தோலிக்க திருச்சபையில் 1609இல் குருப்பட்டம் பெற்றார்.
திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்தல்
தொகுதுறவற சபையில் சேர்ந்தபோது அவர் யோவான் என்ற தம் பெயரை "யோசபாத்து" என்று மாற்றிக்கொண்டார். அவருடைய வாழ்க்கைக் குறிக்கோளே திருச்சபையில் ஒற்றுமையைக் கொணர்வதாக அமைந்தது. பண்டைக்காலத் திருச்சபையின் வழிபாட்டு முறைகள், திருச்சபைத் தந்தையர்களின் படிப்பினைகள் ஆகியவற்றையும் வரலாற்றையும் ஊன்றிப் பயின்ற யோசபாத்து, ஆண்டவர் இயேசு நிறுவிய திருச்சபையில் பேதுருவின் வாரிசாக வருகின்ற திருத்தந்தைக்கு ஒரு முக்கிய இடம் ஒன்று உண்டு என்றும், அவருடைய தலைமையின் கீழ் திருச்சபை முறையாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
1617இல் யோசபாத்துக்கு ஆயர் பட்டம் வழங்கப்பட்டது. 1618, மார்ச்சு மாதத்தில் அவர் போலோஸ்க் என்னும் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார்.[1]
உரோமைத் திருச்சபையோடு உக்ரேய்ன் மரபுவழி திருச்சபையை ஒன்றுபடுத்தும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். பலர் அவருடைய முயற்சியை எதிர்த்தனர்.
ஆயர் யோசபாத்து பல கோவில்களைப் புதுப்பித்தார். குருக்களின் கல்வியறிவை வளர்க்க அவர் ஒரு மறைக்கல்வி நூல் எழுதினார். குருக்களின் வாழ்வுக்கான நெறிகளை வழங்கினார். தமது மறைமாவட்டத்தைச் சார்ந்த நகரங்களில் மறை மன்றங்கள் நிறுவ ஏற்பாடு செய்தார். கீழை மரபுவழி சபைகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் வழங்கியது அவருக்கு விருப்பமாக இருக்கவில்லை.
அவருடைய ஆயர் பணிக்காலம் முழுவதிலும் அவர் ஒரு துறவிக்கான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தார். பல ஒறுத்தல் முயற்சிகள் செய்து கடவுள் மட்டில் தமது பக்தியையும் மக்கள் மட்டில் தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார். [2]
எதிர்ப்பு
தொகுகத்தோலிக்க திருச்சபைக்கும் உக்ரேனிய மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை கொணர யோசபாத்து உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. பலர் ஒற்றுமை வழியை ஆதரித்தனர். ஆனால் சிலர் அவர் மட்டில் காழ்ப்புணர்வு கொள்ளலாயினர். அவர் உக்ரேனிய சபையை முற்றிலுமாக உரோமை மயமாக்க முயற்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டினர்.
தம் ஆயர் பணியை நிறைவேற்றுவதற்காக அவர் மொகிலேவ் நகருக்குச் சென்றபோது அவருடைய எதிரிகள் அவரை எதிர்த்தனர். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
யோசபாத்துவின் மறைச்சாட்சி மரணம்
தொகு1623இல் யோசபாத்தின் எதிரிகளுள் ஒருவர் ஆயரின் இருப்பிடம் சென்று அவரை கடுமையான வார்த்தைகள் கூறி இகழ்ந்தார். இதனால் அக்குருவை அகற்றி ஓரிடத்தில் வைத்திருந்தனர். அதற்கு எதிர்வினையாக உடனே நகரத்தின் மணி ஒலிக்கப்பட்டது. மக்கள் கும்பல் ஒன்று திரண்டு வந்து, ஆயரின் இருப்பிடத்தை வன்முறையாகத் தாக்கியது. அவரை அரிவாளால் வெட்டினர். துப்பாக்கியால் சுட்டனர். அவருடைய உடல் ஆற்றில் வீசி எறியப்பட்டது.
பல நாட்களுக்குப் பின் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, உரோமைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. [2]
யோசபாத்தின் பக்தி வாழ்வு
தொகுயோசபாத்து சிறுவயதிலிருந்தே மிகுந்த இறைபக்தி கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்தமான இறைவேண்டல் கீழைத் திருச்சபையின் துறவற இல்லங்களில் வழக்கமாக பயன்பட்ட ஒரு வேண்டல் ஆகும். ஆண்டவராகிய இயேசு கிறித்துவே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்! என்னும் அந்த இறைவேண்டலை அவர் அடிக்கடி செபித்துவந்தார். அவர் மாமிச உணவு அருந்தியதில்லை. விரதம் இருப்பதும் உடலை ஒறுப்பதும் அவரது வழக்கம். வெறும் தரையில் உறங்கினார். ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தார்.
புனிதர் பட்டம்
தொகுயோசபாத்தை நோக்கி வேண்டியதன் விளைவாக பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதைத் தொடர்ந்து திருத்தந்தை எட்டாம் அர்பன் ஒரு குழுவை ஏற்படுத்தி, அவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கிவைத்தார். 116 சாட்சிகளின் வாக்குமூலம் பெறப்பட்டு, ஐந்து ஆண்டு ஆய்வுக்குப்பின், அவர் இறந்து 20 ஆண்டுகள் ஆனபோது, 1643இல் அவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் அளிக்கப்பட்டது.
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் யோசபாத்துக்கு 1867, சூன் 29ஆம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.[3]
திருவிழா
தொகுபுனித யோசபாத்தின் திருவிழா அவர் இறந்த நாளான நவம்பர் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபை, யூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி, அவருடைய திருவிழாவை நவம்பர் 25ஆம் நாள் கொண்டாடுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ "Archbishop St. Jozafat Kuncewicz, O.S.B.M." Catholic Hierarchy. பார்க்கப்பட்ட நாள் November 12, 2012.
- ↑ 2.0 2.1 "St. Josaphat". AmericanCatholic.org. Archived from the original on நவம்பர் 23, 2012. பார்க்கப்பட்ட நாள் November 12, 2012.
- ↑ Blazejowsky, Dmytro (1990). Hierarchy of the Kyivan Church (861-1990). Rome. p. 281.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)