ராஜி என் கண்மணி

ராஜி என் கண்மணி1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஜே. மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீராம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் சார்லி சாப்ளின் படமான சிட்டி லைட்சு (1931) படத்தின் தழுவல் ஆகும்.[1]

ராஜி என் கண்மணி
திரைப்படப் பதாகை
இயக்கம்கே. ஜே. மகாதேவன்
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி ஸ்டூடியோஸ்
இசைஎ. எஸ். ஹனுமந்த ராவ்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
ஸ்ரீராம்
எஸ். வி. ரங்கராவ்
சந்திரபாபு
ஸ்ரீரஞ்சனி
சுசீலா
டி. பி. முத்துலட்சுமி
கே. ஆர். செல்லம்
வெளியீடுசனவரி 29, 1954
நீளம்14,059 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

"யாதும் ஊரே: யாவரும் உறவே" என்ற எண்ணத்தோடு ஊர் ஊராகச் சுற்றுபவன் நாடோடி ராமு.

மேனியழகு மிகுந்திருந்தும், கண்பார்வை மட்டும் இல்லாதவளாகி, பூ விற்று ஜீவனம் செய்து வந்தாள் ஏழை ராஜி. நாடோடி ராமுவையும் ஏழை ராஜியையும் சேர்த்து வைக்கிறது ஒரு மோட்டார் விபத்து. மோட்டாரில் சிக்கிக் கொள்ள இருந்த ராஜியை ராமு காப்பாற்றுகிறான். ராமுவின் வடிவத்தை ராஜியால் கண்டுகொள்ள முடியவில்லையென்றாலும் அவனுடைய அன்புமிக்க உள்ளத்தை ராஜி கண்டு கொண்டாள். இருவரும் சேர்ந்தே பிறகு பூ விற்கும் தொழிலைச் செய்கின்றனர். அவர்களின் ஒருவர் மீதான ஒருவரின் அன்பும் வளர்ந்து வருகிறது.

ஒரு நாள் ராமு யதேச்சையாக மருத்துவர் ரகுவைச் சந்திக்கிறான். அந்த மருத்துவர் கண் வைத்தியத்தில் கை அழைத்துச் சென்று அவள் கண்களைப் பரிசோதிக்கச் சொல்கிறான். மருத்துவர் தேர்ந்தவர். அவரிடம் ராஜியை பார்த்துவிட்டு கண்களை சொஸ்தம் செய்ய இயலுமென்றும் ஆனால் அறுவைச் சிகிச்சைக்கு ஆயிரம் ரூபாய் செலவாகுமென்றும் கூறுகிறார்.

ராமுவிடம் ஆயிரம் தம்பிடி கூடக் கிடையாது. அந்த ஆயிரம் ரூபாயை அடைவதற்காக பகீரதப் பிரயத்தனங்கள் செய்கிறான். ஆயிரம் ரூபாய் பந்தயம் வைத்திருக்கிறார்களென்று கேள்விப்பட்டு ஒரு பெரிய வீரனோடு குத்துச்சண்டை போடக்கூடத் துணிந்து விடுகிறான். ராஜிக்குக் கண் தெரிவதென்றால் அதற்காகத் தன் உயிரையும் பணயம் வைக்கத் தயாராயிருக்கிறான் ராமு. அந்தக் குத்துப் பந்தயத்தில் அகஸ்மாத்தாக ராமுவே வென்ற போதிலும் அவனுக்குக் கிடைத்த பரிசு ரூபாய் ஆயிரமும் பறிபோய் விடுகிறது.

பட்டணத்திலே ஒரு பணக்காரக் குடிகாரர் எதிர்பாராத விதமாக ராமுவிடம் உறவு கொண்டாடுகிறார். ஒரு நாள் அவரிடம் தனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டுமென்று ராமு கோருகிறான். அவரும் தருவதற்கு இசையவே ராமு அந்த ஆயிரம் ரூபாயோடு அவர் பங்களாவினின்றும் வெளியேறுகிறான்.

ராமு அந்த ஆயிரம் ரூபாயை மருத்துவரிடம் கொடுக்கவே ராஜிக்கு சிகிச்சையும் ஆரம்பமாகிவிடுகிறது. தன்னிடம் இவ்வளவு அன்பு காட்டிய ராமு என்ற நடமாடும் தெய்வத்தை தனக்குக் கண் பார்வை வந்தவுடனே முதன் முதலில் காண வேண்டுமென்பதே ராஜியின் பேரவா. அவள் கண்கள் சொஸ்தமாகி விடுகின்றன. ஆனால் ராமுவைக் காணவில்லை.

“குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு." ராமுவின் மீது திருட்டுக் குற்றம் சாட்டுகிறார் அந்தக் குடிகாரப் பணக்காரர். ராமு சிறையில் வைக்கப்படுகிறான். ராமு சிறையில் இருப்பதை ராஜி எவ்வாறு அறிவாள், பாவம் !

ராமுவை ராஜி தேடாத இடமில்லை. அவளுக்குத் துணையாயிருந்த அத்தையம்மாளும் இறந்து விடுகிறாள். கற்பைக் கெடுக்க ஒரு போக்கிரி முயற்சிக்கிறான். அதிர்ஷ்டவசமாக ராஜி தப்பிச் செல்கிறாள்.

தன் அன்பனைப் பிரிந்து தனியாய் இருப்பதை விட இறப்பதே மேலென நினைத்து ராஜி உயிரை மாய்த்துக் கொள்ள கடலில் வீழ்கிறாள், சாகவொட்டாமல் விதி அவளைத் தடுத்துவிடுகிறது. கடற்கரைக்கு காற்று வாங்க வந்திருந்த டாக்டர் ரகுவின் தங்கையும் தாயாரும் ராஜியின் உயிரைக் காத்து விடுகின்றனர். தன் வீட்டில் வந்து அமைதியாக வாழலாமென்று ராஜியிடம் அந்த அன்னை சொல்லி தம் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். நாளடைவில் ராஜி மருத்துவர் ரகுவின் மருத்துவமனையிலேயே பயிற்சி பெற்று ஒரு செவிலியாக பணியாற்றி வருகிறாள்.

மருத்துவர் ரகு கண்ணியம் மிகுந்தவர். ரூபா என்ற பெயருடைய ஒரு பணக்காரப் பெண் ரகுவை வெகுநாளாகக் காதலித்து வருகிறாள். ஆனால் ரகுவின் மனம் அவளை நாடவில்லை. நாளடைவில் தன்னிடம் செவிலியாக பணியாற்றி வரும் ராஜியை அவர் மனம் நாடுகிறது. ராஜியின் மனமோ இன்னமும் நாடோடி ராமுவையே நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆயினும், மருத்துவர் ரகு தமது ஆவலை ஒரு நாள் ராஜியிடம் சொல்லியே தீர்க்கிறார்.

மருத்துவருடைய மனவேதனைக்குத் தான்தான் காரணமென்று அறிந்த ராஜி இனி அவர் ஆதரவில் வாழ்ந்திருப்பது சரியல்ல என்று வீட்டை விட்டுப் புறப்பட்டு விடுகிறாள். ஆனால் டாக்டரின் தாயார் ராஜியைத் தடுத்து தன் மகனை அவள் திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டுமென்றும் இல்லாவிடில் அவன் வாழ்வே பாழாகி விடுமென்றும், தன் மகனுக்கு உயிர்ப் பிச்சை தரவேண்டுமென்றும் கெஞ்சுகிறாள். கனவுபோல மறைந்து போன ராமுவையே இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது சரியா என்ற பிரச்சினையில் ராஜி தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.

கடைசியாக ராஜி மருத்துவரை மணக்கிறாள். ஒரு புத்திரனையும் பெற்று அவனுக்கு 'ராமு' என்று பெயர் சூட்டுகிறாள்.

தண்டனைக் காலம் தீர்ந்து போகவே ராமு சிறையினின்றும் விடுதலையடைகிறான். ராஜியை தேடிக் கொண்டு பட்டணத்துக்கு வருகிறான். ராஜி இப்போது டாக்டரின் மனைவி என்பதை அறிந்து திகைக்கிறான்.

ராஜி வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரனைப் போல வந்து நிற்கிறான். ராஜியின் குழந்தையுடைய உயிரையும் மோட்டார் விபத்தினின்று காத்துத் தருகிறான். தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியவர் தன்னையே ஒருகாலத்தில் காத்த ராமு என்பதை ராஜி அறியவில்லை. ஆண்டுகள் எவ்வளவோ ஆகியும் ராஜியின் மனோபீடத்தில் தான் வீற்றிருப்பதை ராமு அறிந்து கொள்கிறான். அவளிடமிருந்து அன்புக் காணிக்கையாக ஒரே ஒரு பூவை மட்டும் பெற்றுக்கொண்டு தான் யாரென்பதை ராஜியிடம் தெரிவிக்காமலே ராமு போய்விடுகிறான்.

மேற்கோள்கள்

தொகு
  1. "மறக்கப்பட்ட நடிகர்கள் 7: ஸ்ரீரஞ்சனி- அக்காவின் பெயரில் கலக்கிய தங்கை!". கட்டுரை. தி இந்து. 15 சூலை 2016. Retrieved 27 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜி_என்_கண்மணி&oldid=4271523" இலிருந்து மீள்விக்கப்பட்டது