ராயல் பவிலியன்
ராயல் பவிலியன் அல்லது பிரைட்டன் பவிலியன் என அறியப்படும் கட்டிடம், இங்கிலாந்தின் பிரைட்டனில் உள்ள முன்னாள் அரச மாளிகை ஆகும். 1787ல் தொடங்கி மூன்று கட்டங்களில் இது கட்டப்படது. 1811ல் பதில் அரசரான வேல்சு இளவரசர் ஜார்ச் தனக்கான ஒரு கடற்கரை வதிவிடமாக இதைக் கட்டினார். இந்தியாவில் 19ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த இந்திய-சரசனியக் கட்டிடக்கலைப் பாணியில் இது வடிவமைத்துக் கட்டப்பட்டது. குவிமாடங்கள், மினராக்களுடன் கூடிய இதன் தற்போதைய தோற்றம், கட்டிடக்கலைஞர் ஜோன் நாசு, 1815ல் விரிவாக்க வேலைகளைச் செய்தபோது உருவானது.[1]
ராயல் பவிலியன் | |
---|---|
ராயல் பவிலியனின் தோற்றம் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | அரச மாளிகை |
கட்டிடக்கலை பாணி | இந்திய-சரசனிய மறுமலர்ச்சி |
நகரம் | பிரைட்டன் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
ஆள்கூற்று | 50°49′23″N 0°08′15″W / 50.82306°N 0.13750°W |
கட்டுமான ஆரம்பம் | 1787 |
நிறைவுற்றது | 1823 |
உரிமையாளர் | பிரைட்டன் & ஓவ் மாநகர சபை |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஜான் நாசு |
வரலாறு
தொகுபிற்காலத்தில் நான்காம் ஜார்ச் என்னும் பெயருடன் அரசனான அப்போதைய வேல்சு இளவரசர் 1783ல் முதன் முறையாகத் தனது 21வது வயதில் பிரைட்டனுக்கு வந்திருந்தார். அக்காலத்தில் இந்நகரம் முதுமை நாட்டம் கொண்டவர்கள் விரும்பும் இடமாக இருந்தது. வேல்சு இளவரசரின் உறவினர் கம்பர்லாந்தின் டியூக் ஆன இளவரசர் என்றியின் மாளிகையிலேயே அவர் தங்கியிருந்தார். உணவு, வேட்டை, நாடகம், வேகமான வாழ்க்கை போன்ற விடயங்களில் என்றிக்கு இருந்த ஆர்வம் இவரையும் கவர்ந்தது. 1786ல் மிதமான அளவு கொண்ட பண்ணை வீடொன்றை வேல்சு இளவரசர் வாடகைக்குப் பெற்றார். 1787ல் இந்த இல்லத்தை விரிவுபடுத்தும் பணியைக் கட்டடக்கலைஞர் என்றி ஓலன்ட்டிடம் இளவரசர் ஒப்படைத்தார். இவரது வடிவமைப்பு பிரான்சின் செல்வாக்குக்கு உட்பட்ட புதிய செந்நெறிப் பாணியில் அமைந்திருந்தது. இளவரசர் இந்த நிலத்தைச் சுற்றியிருந்த நிலங்களையும் வாங்கி ஒரு குதிரெய்ந்ந்ற்றப் பள்ளியையும், 60 குதிரைகளைப் பேணக்கூடிய லாயங்களையும் அமைத்தார்.
1815க்கும் 1822க்கும் இடையில் ஜான் நாசு இந்த "பவிலியனை" மீளவும் வடிவமைத்து விரிவாக்கினார். இவர் இக்காலத்தில் செய்த வடிவமைப்பே இன்றும் காணக்கூடியதாக உள்ளது. இதன் உள்ளக வடிவமைப்பு பிரெடெரிக் கிரேசு, ராபர்ட் ஜான்சு ஆகியோரின் கைவண்ணத்தில் உருவானது. இது சீன, இந்தியப் பாணிகளைத் தழுவியது.
விற்பனை
தொகு1830 நான்காம் ஜார்ச்சின் மறைவுக்குப் பின்னர் அரசர் நான்காம் வில்லியம் அடிக்கடி பிரைட்டனுக்கு வரும்போது இங்கேயே தங்குவது வழக்கம். விக்டோரியா அரசி பதவியேற்ற பின்னர் பிரைட்டனை அவர் விரும்பவில்லை. 1841ல்பி ரைட்டனுக்கு இலண்டனில் இருந்து தொடர்வண்டிச் சேவை தொடங்கிய பின்னர் பிரைட்டனுக்குப் பெருமளவில் மக்கள் வரத் தொடங்கினர். அத்துடன், ராயல் பவிலியன் அவரது குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லாமல் இருந்ததுடன், போதிய தனிமையை வழங்ககூடிய இடமாகவும் இருக்கவில்லை. பிரைட்டனில் தான் தொடர்ந்து கவனத்துக்கு உள்ளாவதை விக்டோரியா அரசி விரும்பவில்லை. ஒருமுறை "இங்குள்ளவர்கள் தகவறியாதவர்களாகவும், பிரச்சினை கொடுப்பவர்களாகவும் உள்ளனர்" எனக் குறிப்பிட்டார். அதனால், அவர் வைட் தீவில் நிலமொன்றை வாங்கி அரச குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக அங்கே ஒசுபோர்ண் இல்லத்தை உருவாக்கினார். 1845ல் விக்டோரியா அரசி கடைசியாக பிரைட்டனுக்கு வந்து திரும்பிய பின்னர், 1850ல் அரசாங்கம் ராயல் பவிலியனை பிரைட்டன் நகரத்துக்கு £53,000 விற்றது. இந்தப்பணம் ஒசுபோர்ண் இல்லத்துக்குத் தளபாடங்களை வாங்குவதற்குப் பயன்பட்டது.
1860ல் அருகில் இருந்த அரச குதிரை லாயங்கள் இசை நிகழ்ச்சிகளுக்கான மண்டபமாக மாற்றப்பட்டன. நகர நிர்வாகம் மாளிகைக் கட்டிடத்தைக் கூட்டங்களை நடத்துவதற்கும் பயன்படுத்தியது. இக்கட்டிடம் விற்கப்பட்ட காலத்தில் இங்கிருந்த தளவாடங்களும், பொருத்தியிருந்த பொருட்களும் இங்கிருந்து அகற்றப்பட்டன. இவற்றுட் பெரும்பாலானவை பக்கிங்காம் மாளிகையிலும், வின்ட்சர் அரண்மனையிலும் பயன்படுத்தப்பட்டன. 1860 களில் எஞ்சியிருந்த ஏராளமான பயன்படுத்தப்பாடாத பொருட்களை விக்டோரியா அரசி பிரைட்டன் நகரத்துக்கே வழங்கினார். முதலாம் உலகப் போருக்குப் பின்னர் மேலும் பல பொருட்களை ஐந்தாம் ஜார்ச் மன்னரும், அரசி மேரியும் பிரைட்டனுக்குத் திருப்பிக் கொடுத்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரைட்டன் மாநகரசபை மாளிகையை அரசர் நான்காம் ஜார்ச்சின் காலத்தில் இருந்த நிலைக்குக் கொண்டுவருவதற்காகப் பெருமளவு பணத்தையும் நேரத்தையும் செலவு செய்தது. 1950ல் அரசி இரண்டாம் எலிசபெத் நிரந்தரக் கடனாக 100 தளபாடங்களை வழங்கியது பெரும் ஊக்குவிப்பாக அமைந்தது. அறைகளை மீளமைப்புச் செய்தல், அகற்றப்பட்ட சுவர்களை மீளமைத்தல், தொடக்கத்தில் இருந்த பொருட்களின் நேர்ப்படிகளை உருவாக்குதல் போன்றவற்றில் நகர நிர்வாகம் ஈடுபட்டது.
முதல் உலகப்போர்க் காலம்
தொகுமுதலாவது உலகப் போர்க் காலத்தில் இக்கட்டிடமும் ஒரு இராணுவ மருத்துவ நிலையமாக மாற்றப்பட்டது. டிசம்பர் 1914 முதல் சனவரி 1916 வரை இந்திய இராணுவத்திலிருந்து சுகவீனம் உற்றோரும் காயமடைந்தோருமான படை வீரர்களுக்கு இந்த முன்னாள் அரச மாளிகையில் மருத்துவம் செய்யப்பட்டது. இக்கட்டிடத்தின் அயலில் முன்னர் குதிரை லாயக் கட்டிடங்களாக இருந்து பின்னர் திருத்தியமைக்கப்பட்ட கட்டிடங்களும் பவிலியன் மருத்துவ நிலையத்தின் பகுதிகளாகச் செயற்பட்டன. இது இரண்டு அறுவை மருத்துவக் கூடங்களுடன் 720 படுக்கைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருந்தது. இதில் 2,300 வீரர்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுள்ளனர். நோயாளிகளின் பல்வேறுபட்ட மத, பண்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் விரிவான ஒழுங்குகளும் இங்கே செய்யப்பட்டிருந்தன. சிகிச்சை பெறும் போர் வீரர்களுக்கு அவர்களுடைய சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களே சமைத்துப் பரிமாறும் வகையில் வேறு வேறான ஒன்பது சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முசுலிம்களுக்கு மக்காவை நோக்கித் தொழுவதற்கான இடவசதியும், சீக்கியர்களுக்கு கூடாரம் ஒன்றில் குருத்துவாராவும் இருந்தன.[2]
இந்தியாவைச் சேர்ந்த காயமடைந்த படைவீரர்கள் நல்ல முறையில் பேணப்படுவதை எடுத்துக்காட்ட இந்தப் பவிலியன் மருத்துவமனையைப் பிரித்தானிய அரசு பயன்படுத்தியது. அரசின் அனுமதியுடன், இந்த மாளிகையின் பளபளப்பான அறைகள் நோயாளர் அறைகளாக மாற்றப்பட்டு உள்ளதைக் காட்ட பல படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. யூலை 1915 கிச்சினர் பிரபு இம்மருத்துவமனைக்கு வந்தார். ஆகத்தில் அரசர் ஐந்தாம் ஜார்ச் வந்து நோயாளிகளைப் பார்த்ததோடு பலருக்கு இராணுவ மதிப்புகளும் வழங்கப்பட்டன.
பெரும்பாலான இந்தியப் படைவீரர்கள் மேற்குப் போர்க் களங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்டதால், சனவரி 1916ல் இங்கிருந்த இந்திய மருத்துவமனை மூடப்பட்டது. ஏப்ரல் 1916ல், கால் கைகளை இழந்த பிரித்தானியப் படை வீரர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இந்த மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டது. சிகிச்சை மட்டுமன்றி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகத் திறன் பயிற்சிகளை வழங்கும் வசதிகளும் இங்கு இருந்தன. இந்தப் பவிலியன் மருத்துவ மனை 1920 கோடைகாலம் வரை இயங்கியது. பின்னர் அது திரும்பவும் பிரைட்டன் நகர நிர்வாகத்திடம் மீளளிக்கப்பட்டது.
தற்போதைய நிலை
தொகுபிரைட்டன் நகரம் இம்மாளிகையை வாங்கியபின் இது ஒரு சுற்றுலாத் தலமாக மாறியது. தற்போது இம்மாளிகை பெருமளவு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு இடமாக உள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 400,000 பேர் இவ்விடத்தைப் பார்க்க வருகின்றனர்.[3]
மேற்கோள்
தொகு- ↑ "History of the Royal Pavilion - Brighton Museums website". Archived from the original on 2015-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
- ↑ "Indian & Sikh Soldiers World War I | Brighton Royal Pavilion Hospital". www.sikhmuseum.com. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
- ↑ "The Royal Pavilion, Brighton, Sussex : Southern". Southernrailway.com. Archived from the original on 19 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 10 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)