லகுனா செப்பேடு
லகுனா செப்பேடு, 1989 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவிலுள்ள லகுனா டி பே ஏரிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி 900 ஏப்ரல் 21 ஆம் தேதிக்குச் சரியான, சக ஆண்டு 822 ஐச் சேர்ந்த ஒரு தேதியும் பொறிக்கப்பட்டுள்ள இச் செப்பேடு சமஸ்கிருதம், ஜாவா மொழி, மலே மொழி, பழைய தகாலாக் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இச் செப்பேடு இதை வைத்திருப்பவரான நம்வாரன் என்பவரை அவர் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்கும் ஒரு ஆவணம் ஆகும். இது, மணிலா குடா, இந்தோனீசியாவிலுள்ள மெடான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொண்டோ, பிலா, புலிலான் ஆகிய இடங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. இது அக்காலத்தில் தகாலாக் மொழி பேசிய மக்களுக்கும், ஜாவாவின் ஸ்ரீ விஜயப் பேரரசுக்கும் இடையில் வலுவான தொடர்புகள் இருந்ததைக் காட்டுகிறது. இச் செப்பேடு இப்பொழுது பிலிப்பைன்ஸ் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.