லலித்பூர் மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
நேபாளத்திலும் ஒரு லலித்பூர் மாவட்டம் உள்ளது!

லலித்பூர் மாவட்டம் (Lalitpur District இந்தி: ललितपुर जिला) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது ஜான்சிக் கோட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. லலித்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5,039 கி.மீ.2 ஆகும். இம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.

லலித்பூர் மாவட்டம்

லலித்பூர் மாவட்டம் ஜான்சி பிரிவின் ஒரு பகுதியாகும். இது 1974-ஆம் ஆண்டில் ஒரு மாவட்டமாக நிறுவப்பட்டது. லலித்பூர் மாவட்டம் அட்சரேகை 24°11' மற்றும் 25°14' (வடக்கு) மற்றும் தீர்க்கரேகை 78°10' மற்றும் 79°0' (கிழக்கு) ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. மற்றும் வடக்கில் ஜான்சி மாவட்டமும், மத்திய பிரதேச மாநிலத்தின் சாகர் மற்றும் டிக்காம்கர் மாவட்டங்கள் கிழக்கிலும் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டம் மேற்கில் பெத்வா நதியால் பிரிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் 12,18,002 வசிக்கின்றனர்.

இந்த மாவட்டத்தில் தேவ்கர், சீரோன்ஜி, பாவகிரி, தேவமாதா, பாலியில் நீல்காந்தேஸ்வர்,  போன்ற வரலாற்று மற்றும் கலாச்சார இடங்கள் காணப்படுகின்றன. லலித்பூர் நகரத்தில் இந்து மற்றும் சமண கோவில்கள் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.  ரகுநாத்ஜி (பட மந்திர்), சிவாலே, பூதே பாபா (ஹனுமன்ஜி),  துவான் மந்திர் & பட மந்திர், சமார்களுக்கான அடா மந்திர் மற்றும் க்ஷேத்ரபால்ஜி ஆகியவை இந்துக்களுக்கான பிரபலமான கோயில்கள் ஆகும்.

புவியியல்

தொகு

இந்த மாவட்டத்தின் புந்தல்கன்ட் என்ற மலைநாட்டின் ஒரு பகுதியை தெற்கே விந்திய மலைத்தொடரின் வரம்புகளும், வடக்கே யமுனை ஆற்றின் கிளை நதிகளினாலும் உருவாக்கப்படுகிறது. பெத்வா ஆறு மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையை உருவாக்குகிறது. மேலும் மாவட்டத்தின் பெரும்பகுதி அதன் நீர்நிலைகளுக்குள் அமைந்துள்ளது. பெத்வாவின் துணை நதியான ஜம்னி நதி கிழக்கு எல்லையை உருவாக்குகிறது. தாசன் நதி மாவட்டத்தின் தென்கிழக்கு எல்லையை உருவாக்குகிறது. மேலும் மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதி அதன் நீர்நிலைக்குள் அமைந்துள்ளது.

காலநிலை

தொகு

லலித்பூர் மாவட்டம் துணை வெப்பமண்டல காலநிலையை கொண்டது. இது மிகவும் வெப்பமான வறண்ட கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலத்தால் வகைப்படுத்தப்படுகிறது. புந்தெல்கந்த் பிராந்தியத்தின் பிற மாவட்டங்களைப் போலவே, இந்த மாவட்டமும் ஒரு வருடத்தில் நான்கு தனித்துவமான பருவங்களைக் கொண்டுள்ளது. கோடை காலம் மார்ச் முதல் சூன் நடுப்பகுதி வரையும், தென்மேற்கு பருவமழை சூன் நடுப்பகுதி முதல் செப்டம்பர் வரை ஆகும். குளிர்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலும் நீடிக்கும்.

வரலாறு

தொகு

இன்றைய லலித்பூர் மாவட்டத்தின் பிரதேசம் சாந்தேரி மாநிலத்தின் ஒரு பகுதியாகும். இது 17 ஆம் நூற்றாண்டில் ஒரு புந்தேலா ராஜபுத்திரரால் நிறுவப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் சாந்தேரி, புந்தல்கண்டின் பெரும்பகுதியுடன் இணைந்து  மராத்திய மேலாதிக்கத்தின் கீழ் வந்தது. 1812 ஆம் ஆண்டில் அண்டை நாடான குவாலியரைச் சேர்ந்த தவ்லத் ராவ் சிந்தியா சாந்தேரி மாநிலத்தை இணைத்தார். 1844 ஆம் ஆண்டில் முன்னாள் சாந்தேரி மாநிலம் பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டு சாந்தேரி மாவட்டமாக மாறியது. லலித்பூர் நகரம் மாவட்ட தலைநகராக இருந்தது. 1857 ஆம் ஆண்டில் இந்திய கிளர்ச்சியில் ஆங்கிலேயர்கள் மாவட்டத்தை இழந்தனர். அது 1858 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை மீட்கப்படவில்லை. 1861 ஆம் ஆண்டில், சந்தேரி உட்பட பெத்வாவின் மேற்கே மாவட்டத்தின் பகுதி குவாலியர் மாநிலத்திற்குத் திரும்பியது. மீதமுள்ளவை லலித்பூர் மாவட்டம் என மறுபெயரிடப்பட்டது.[1] இது 1891 முதல் 1974 வரை ஜான்சி மாவட்டத்தின் பகுதியாக மாறியது. 1974 ஆம் ஆண்டில் இந்த மாவட்டம் ஜான்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

பொருளாதாரம்

தொகு

2006 ஆம் ஆண்டில் பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக லலித்பூரை பெயரிட்டது.[2] தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பி.ஆர்.ஜி.எஃப்) நிதி பெறும் உத்தரபிரதேசத்தின் 34 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[2]

பிரிவுகள்

தொகு

லலித்பூர் மாவட்டம் லலித்பூர், மெஹ்ரோனி, தல்பேஹாட், மடவாரா மற்றும் பாலி ஆகிய நான்கு தெஹ்சில்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நான்கு நகரங்களும் 754 கிராமங்களும் உள்ளன. இந்த மாவட்டத்தில் லலித்பூர் மற்றும் மெஹ்ரோனி ஆகிய இரண்டு உத்திரபிரதேச விதான் சபா தொகுதிகள் உள்ளன.

புள்ளி விபரங்கள்

தொகு

2011 ஆம் ஆண்டில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி உத்தர பிரதேச லலித்பூர் மாவட்டத்தில் 1,218,002 மக்கள் வாழ்கின்றனர்.[3] சனத்தொகை அடிப்படையில் இந்தியாவின் 640 மாவட்டங்களில் 391 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு (630 / சதுர மைல்) 242 மக்கள் அடர்த்தி உள்ளது.[3] 2001-2011 வரையான காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி வீதம் 24.57% ஆகும்.[3] மக்களின் கல்வியிறிவு விகிதம் 64.95% ஆகும். 2011 ஆம் ஆண்டு இந்திய சனத்தொகை கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் 99.18% மக்கள் இந்தி மொழியையும், 0.58% மக்கள் உருது மொழியையும் முதன்மை மொழியாக பேசினார்கள்.[4]

போக்குவரத்து

தொகு

ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து மூலம் நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி என்.எச் -44 லலித்பூர் வழியாக சென்று இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Imperial Gazetteer of India, (New ed.), Oxford: Clarendon Press, 1908-1909. Vol. 10.
  2. 2.0 2.1 "Wayback Machine" (PDF). web.archive.org. 2012-04-05. Archived from the original on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. 3.0 3.1 3.2 "Indian Districts by Population, Sex Ratio, Literacy 2011 Census". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.
  4. "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்பூர்_மாவட்டம்&oldid=3890817" இலிருந்து மீள்விக்கப்பட்டது