நிணநீர்க் குழியம்
(லிம்போசைத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிணநீர்க் குழியங்கள் (Lymphocytes) அல்லது நிணநீர்க் கலங்கள் அல்லது நிணநீர்ச் செல்கள் அல்லது நிணநீர் உயிரணுக்கள் என்று அழைக்கப்படுபவை முதுகெலும்பிகளின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் பங்கெடுக்கும் முக்கியமான மூன்று வகை வெண்குருதியணுக்கள் ஆகும். 20-30% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. நிணநீர்க்கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சுரப்பிகள் எனும் தொண்டை முளை, தைமஸ் சுரப்பி போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.
வகைகள்
தொகுஇவற்றில் மூன்று முக்கியமான உயிரணு வகைகள் காணப்படும்.
- இயற்கையாக கொல்லும் கலங்கள்: பெரிய அணுக்கள் இயற்கையாக கொல்லும் கலங்கள் (natural killer cells - NK cells) எனப்படும். இவை கட்டிகள், வைரசு தொற்றுக்குட்பட்ட கலங்களை எதிர்க்கும். இவை நாம் எதிர்க்கும் கலங்களை கொல்லும் தன்மை கொண்ட பதார்த்தத்தை உருவாக்கி அவற்றைக் கொல்லும்[1].
- இவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை;
- B கலங்கள்: B கலங்கள் எனப்படும் லிம்போசைட்டுகள் என்பு மச்சையில் (Bone marrow) உருவாகும். இவை பிறபொருளெதிரிகள் எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை பாக்டீரியாக்கள் போன்ற பிறபொருளெதிரியாக்கிகளுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை.
- T கலங்கள்: T கலங்களின் முன்னோடி (precursor) என்பு மச்சையில் உருவாகினாலும், அதன் முதிர்ச்சி தைமஸ் சுரப்பியில் (Thymus) நிகழும். இவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இவை கேடுவிளைவிக்கும் உயிரினங்களுக்கு எதிராகத் தொழிற்பட்டு, தொற்றுநோய் குணப்படுத்தலில் உதவுவதுடன், புற்றுநோய் உயிரணுக்களுக்கான எதிர் விளைவை உருவாக்கும். வேறு அனைத்து வெளிப் பொருட்களை எதிர்த்தும் தொழிலாற்றும் தன்மை கொண்டது. இவ்வகை நிணநீர்க் கலங்கள் வைரசுக்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரசுக்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Janeway, Charles (2001). Immunobiology; Fifth Edition. New York and London: Garland Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-4101-6.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help).