வடமராட்சி கிழக்கு

யாழ் குடா நாட்டின் வடமுனையின் தென் கிழக்கே எழில் வனப்பு மிக்க வயல் வெளிகளையும், கடலையும் கொண்டுள்ள வடமராட்சி கிழக்கானது மருத நிலமும, நெய்தல் நிலமும் ஒருங்கே சேரப்பட்டுள்ளது. இது மணற்காடு கிராம அலுவலர் பிரிவு தொடக்கம் சுன்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவு வரையான பதினெட்டு கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கியது ஆகும். வடமராட்சி கிழக்கானது வடமேற்கே வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவினையும் வடகிழக்கே சமுத்திரத்த்தினையும் தென்கிழக்கே முல்லைக்தீவு மாவட்டத்தையும் தென்மேற்கே பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப்பிரிவு மற்றும் தென்மராட்சி பிரதேச செயலகப்பிரிவு ஆகியவற்றினையும் எல்லையாக கொண்டது. வடமராட்சிப்பிரதேச செயலக பிரிவில் அடங்கும் கிராமங்களாக மணற்காடு,குடத்தனை, குடத்தனை வடக்கு, பொற்பதி, அம்பன், நாகர்கோயில் கிழக்கு, நாகர் கோயில் மேற்கு, நாகர்கோயில் தெற்கு, செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று தெற்கு, மருதங்கேனி, வத்திராயன், உடுத்துறை, அழியவளை, வெற்றிலைக்கேனி,போக்கறுப்பு, சுண்டிக்குளம் என்பனவாகும்.


வடமராட்சிப்பிரதேசமானது பறவைகளின் சுவர்க்க பூமியாகவும் மணல் மண் வளம் நிறைந்த பகுதியாகவும் வரலாற்றுக்காலத்தில் பூர்வீகக் குடிகளாகிய நாகர்கள் வாழ்ந்த பிரதேசமாகவும் இது சிறப்பு பெறுகின்றது. இப் பிரதேசமக்களின் வழிபாட்டிற்குரிய ஆலயங்களில் நாகர் கோவில், நாகதம்பிரான் ஆலயம் வரலாற்றுத் தொடர்போடு கூடிய ஆலயமாக விளங்குகின்றது. மேலும் கப்பல் ஏந்திய மாதாகோவில், மண்டலாய்ப்பிள்ளையார் ஆலயம் என்பனவும் பிரசித்தி பெற்ற ஆலயமாய் விளங்குகின்றது.

புவியியல் அமைப்பு தொகு

இலங்கையின் வட மாகாணமானது ஐந்து மாவட்டங்களைக்கொண்டது. இதில் யாழ்ப்பாண மாவட்டமானது 15 பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கியதாகவும் அமையப் பெற்றிருக்கிறது. இதில் வடமராட்சி கிழக்கு பிரதேசமானது தனித்துவமான புவியியல் அமைப்பினைக்கொண்டு விளங்குகின்றது. புவியியல் அமைவு ரீதியில் வடமராட்சி கிழக்கு பிரதேசமானது யாழ் மாவட்டத்தில் ஒர் ஒடுக்கிய நீண்ட வடிவத்தில் அமைவுற்றுள்ளது. வடக்கே வல்லிபுரத்தில் தொடங்கி தெற்கே சுண்டடிக்குளம் வரை ஏறத்தாழ 53 கீ.மீ நீளமும் 2.5 கீ.மீ அகலமும் கொண்டதாக காணப்படிகின்றது. வடக்கே இந்து சமுத்திர பெருங்கடலாலும் தெற்கே தொண்டமானாறு கடல்நீரேரியினாலும் கிழக்கே நன்நீர்தொடுவாயினாலும் சூழப்பட்ட ஒர் பிரதேசமாகக் காணப்படுகின்து.

இப்பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவகர் எல்லைகள் பெருமளவாக இப்பிரதேசத்தின் பௌதீக மற்றும் பண்பாட்டு விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளன. இக்கிராம அலுவலர் பிரிவுகளில் குடத்தனை, குடத்தனை வடக்கு, செம்பியன்பற்று தெற்கு ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் குடத்தனை குடத்தனை வடக்கு, செம்பியன் பற்று தெற்கு ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை தவிர ஏனையவை இந்துமா சமுத்துடத்துடன் நேரடியாக தொடர்புபட்டவையாகவும் காணப்படுகின்றது.

பௌதீக பின்னணி தொகு

தரைத்தோற்றமும் மண்ணும் தொகு

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் பாறைத்தொகுதிகள் சுண்ணாம்புக்கற்பாறைத்தொகுதியாகக் காணப்படுகின்றது. இவை மயோசின் கால இறுதிப் பகுதியை சேர்தவை. புவியசைவுகள் காரணமாக கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்ட அடையல் பாறை வகையைச் சார்ந்தவையாகும். இப்பாறைப்படைகளின் மேல் பல மீற்றர் தடிப்புடைய மண் படை மூடிக்காணப்படுகின்றது. இங்கு காணப்படும் சுண்ணாம்புக்கற்பாறைகளை கட்டடத்தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். மண அமைப்பை நோக்கின் கடற்கரை சார்ந்து மணல் மண்ணும் தொண்டமனாறு கடல் நீரேரீ சார்ந்து களி மண்ணும் காணப்படுகின்றது. மணல் மண்ணானது சிலிக்கா படிவுகளாக காணப்படுகின்றது. மணற்காடு தொடக்கம் நாகர் கோவிலை அண்டிய சிலிக்கா படிக மணல் கண்ணாடி உற்பத்திக்கு மிகவும் சிறந்தது. இப்பகுதியில் உள்ள மண்ணானது கண்ணாடித்தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும் சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ளும் சூரிய கலங்களைத் தயாரிப்பதற்கும் ஏற்ற கணிமமாக இது காணப்படுகின்றது. மணற்காட்டிலுள்ள மணலில் இரும்பு அதிகம் கலந்துள்ளமையால் இது இலகுவில் கட்டியாகும் தன்மை கொண்டதாகும். மேலும் இது கட்டடத்தேவைகளுக்கு பொருத்தமானதாகவும் காணப்படுகின்றது.

காலநிலை தொகு

வடமராட்சி கிழக்கு பிரதேசமானது அயன் வலயப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. மேலும் இதன் தரைத்தோற்றமும் அதனைச்சூழவுள்ள கடல் மற்றும் கடல் மற்றும் சார் நீரேரிஇ கண்டல் தாவரங்கள் சவுக்கு மரக்காடுகள் சிறிய நீர் நிலைகள் என்பனவும் இப்பிரதேசத்தின் காலநிலையில் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. இப்பிரதேசமானது நவம்பர் - பிப்ரவரி மாதத்தில் வட கீழ் பருவக்காற்றின் செல்வாக்குக்குட்பட்ட பகுதியாக உள்ளது. மேலும் பிரதேசத்தின் வருட சராசரி வெப்பநிலையானது 280ஊ ஆக காணப்படுகின்றது. அத்துடன் தென்மேல் பருவக்காற்றின் செல்வாக்கும் ஓரளவு காணப்படுகின்றன. முழை வீழ்ச்சியானது பருவப்பெய்ச்சிக் காற்றின் செல்வாக்கினால் தீர்மானிக்கப்படுகின்றது. அதிக மழை வீழ்ச்சி பெறும் மாதங்களாக அக்டோபர் தொடக்கம் பிப்ரவரி வரை காணப்படுகின்றது. இவற்றினைத் தவிர மார்ச் - ஏப்ரல் மாதங்களில் மேற்காவுகை மழையும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் சூறாவளியுடன் கூடிய மழை வீழ்ச்சியையும் இப்பிரதேசம் பெறுகின்றது. காலநிலையின் சீரற்ற தன்மையினால் இங்கு ஆண்டு ரீதியாக மட்டுமின்றி பருவக்கால ரீதியாகவும் மழை வீழ்ச்சி தளம்பல்கள் ஏற்படுகின்றன. இதனால் பருவந்தவறிய வெள்ளப்பெருக்கு பயிர் அழிவுகள் என்பன வருடாவருடப் ஏற்படுகின்றன. ஏனைய மழை வீழ்ச்சி குறைந்த காலப்பகுதியில் சில பகுதிகளில் அதீத வரட்சியுடன் குடி நீர் தட்டுப்பாடும் காணப்படுகின்றது.

நீர் வளம் தொகு

இப்பிரதேசமானது மூன்று பக்கங்களும் கடல் மற்றும் கடல்நீரேரியால் சூழப்பட்டாலும் அதன் நீர் வளமானது அனேகமான பகுதிகளில் நன்னீராகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் மழை நீர் பாறைப்படைகளின் மேல் தேங்கி காணப்படுவதனல் ஆகும். மேலும் நிலத்தடி நீரானது குறைந்த ஆழத்திலேயே காணப்படுவதும் இதில் ஒரு சிறப்பம்சமாகும். மேலும் சிலிக்கா தன்மை கொண்ட சேர்ப்பதும் இந்நீர்ப்படையானது நன்னீராகக் காணப்படுவதற்கு ஒரு காரணமாகவும அமைந்துள்ளது. அத்துடன் மேற்பரப்பிலுள்ள குளங்கள் மற்றும் தாவரங்களும் நீர்ப்படையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

அனர்த்தம் தொகு

உலகின் பல பகுதிகளில் இயற்கை அனர்த்தங்களினாலும் மனிதனால் ஏற்படும் அனர்த்தங்களினாலும் பௌதீக சமூக பொருளாதார அரசியல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் புவியியல் அமைவு காரணமாக பல அனர்த்தங்கள் தாக்ககூடிய ஏது நிலை காணப்படுகின்றது. கடலினைலும் கடல் நீரேரியினையும் இரண்டு பக்கங்களிலும் எல்லையாக கொண்டு இவற்றின் மத்தியில் ஒடுங்கிய நிலப்பரப்பாக அமைந்திருப்பதனால் பாரிய அனர்த்த தாக்கத்திற்கு உள்ளாக கூடிய பிரதேசமாக இது காணப்படுகின்றது.

வாழ்கைத்தரம் தொகு

யாழ் மாவட்டத்தில் கேந்திர முக்கியத்துவமாக வாய்ந்ததாக விளங்கும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரதான வாழ்க்கைத்தரமாக மீன் பிடித்தொழில் விளங்குகின்றது.

இடப்பெயர்வுகள் தொகு

வடமராட்சி மக்கள் பரம்பரை பரம்பரையாகத் தொன்று தொடக்கம் வாழ்ந்து வந்த அந்த மண்ணில் 1940,1956,1965 காலப்பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் சில ஏற்பட்ட சமயம் சில உயிர் இழப்புக்களுடன் உடமை இழப்புக்களையும் சந்தித்த மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்தும் சில இடப்பெயர்வுக்கு ஆழாகியிருந்த போதிலும் அதற்கு பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட யுத்த அனர்த்தங்கள், சுனாமி அனர்த்தம் என்பனவற்றில் பாரிய உயிர் இழப்புக்கள் தனது சொந்த உழைப்பின் மூலம் சேமித்து தேடிய சொத்துக்களின் இழப்புக்கள் என்பனவற்றுடன் அவர்கள் வசித்து வந்த இடத்தில் இருந்து நகர்ந்து வேறு இடங்களில் சென்று வசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் ஆளாகியிருந்தனர். வடமராட்சி கிழக்குப்பகுதி மக்கள் தங்களுடைய பிரதான தொழிலாக கடற்றொழில், விவசாயம், சீவல்தொழில், வியாபாரம் ஏனைய கைத்தொழில்களுடன் சிலர் அரச உத்தியோகங்களையும் மேற்கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய வாழ்வில் யுத்த அனர்த்தம், இயற்கை அனர்த்தம்என்பன மாறி மாறி பேரிடியாக வந்தமையால் பாரிய உயிரிழப்புக்கள், தமது சொந்த உழைப்பின் மூலம் சேமித்து தேடிய சொத்துக்களின் இழப்புக்கள் என்பவற்றுடன் அவர்கள் வசித்து வந்த இடத்திலிருந்தும் நகர்ந்து வேறு இடங்களில் சென்று வசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருந்தனர்.

மக்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அமைந்திருந்த சேவை நிலையங்களான உதவி அரசாங்க அதிபர் அலுவலகம், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பிரதேச சபை, கமநல சேவை நிலையம், கூட்டுறவு நிலையங்கள், தபால் நிலையங்கள் மற்றும் பிரதேச மட்டத்திலான பொது அமைப்புக்கள் என்பன காலத்திற்குக் காலம் மக்களின் இடப்பெயர்வுகளிற்கு ஏற்ப நகர்ந்து தமது இருப்பிடங்களை அமைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டன. இதனால் பல உடமைகள், சொத்துக்கள் என்பவற்றையும்அவை காலத்திற்குக் காலம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1987ம் ஆண்டு மக்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியிருந்த போதிலும் 14.07.1991இல் வெற்றிலைக்கேணியில் இடம்பெற்ற அனர்த்த இழப்புக்களுடன் இருப்பிடங்களையும் விட்டு நகரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதுவே இப்பிரதேச மக்களின் முதல் இடப்பெயர்வு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும். தமது உடமைகள் அனைத்தையும் விட்டு தமது உயிரை மட்டும் பாதுகாக்கும் நோக்கில் ஓடிச்சென்றவர்களுள் சிலர் உயிரிழந்தனர். சிலர் காயங்களுடன் அயல் கிராமங்களைச் சென்றடைந்தனர். இந்த இடப்பெயர்வில் முழுமையான பாதிப்பைப் பெற்ற கிராமம் வெற்றிலைக்கேணி ஆகும்.அடுத்தபடியாக கட்டைக்காட்டில் ஒரு பகுதியும் ஆழியவளையில் ஒரு பகுதியும் பாதிப்படைந்தன.

இந்த இடப்பெயர்வின் விளைவால் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் போக்கறுப்பு, முள்ளியான், வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, வத்திராயன் கிராம அலுவலர் பிரிவுகள் மக்கள் எவரும் வசிக்காத சூனியப் பிரதேசங்களாக மாறின. செம்பியன்பற்று, நாகர்கோவில் பகுதிகளில் தற்காலிகக் குடிசைகளிலும், உறவினர் நண்பர் வீடுகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் வசித்து வந்தனர். உதவி அரசாங்க அதிபர் பணிமனையினால் வழங்கப்பட்டு வந்த இடம்பெயர்ந்தோருக்கான உலர் உணவு நிவாரண உதவியுடன் இந்த மக்களுக்கான தற்காலிகக் குடிசைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ்கிளையின் வடமராட்சி கிழக்கு பிரிவினர் ஒழுங்கமைத்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். தனிப்பனை, செம்பியன்பற்று வடக்கு, நயினாமுனை, மாமுனை, நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு ஆகிய பகுதிகளில் சுமார் 925 தற்காலிக குடிசைகள் அமைத்து தங்கவிடப்பட்டனர். இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தில் வடமராட்சி கிழக்குப்பிரிவின் ஆரம்பகாலத் தலைவர் அமரர்.கொ.அ.ஸ்ரனிஸ்லா... அவர்களின் தலைமையிலான நிர்வாகத்தினர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தனர். இந்த அனர்த்தம் காரணமாக நித்தியவெட்டையில் இயங்கி வந்த முள்ளியான் மருந்தகம் முற்றாகச் சேதமடைந்ததுடன், அப்பகுதி மக்களின் இடப்பெயர்வுடன் இந்த நிலையத்தின் சேவையானது நிறுத்தப்பட்டது.

மேலும்,வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலை, ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் செம்பியன்பற்று வடக்கு கிராமத்தில் தற்காலிகக் கொட்டகைகள் அமைத்து இயங்கத் தொடங்கின. உடுத்துறை ம.வி, மருதங்கேணி இ.த.க. பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களும், ஆசிரியர்களும் மேற்படி பாடசாலைகளிலும் செம்பியன்பற்று அ.த.க பாடசாலையிலும் இணைக்கப்பட்டிருந்தனர். இந்த இடப்பெயர்வின் இறுதிக்காலத்தில் யாஃஉடுத்துறை ம.வித்தியாலயம்,யாஃமருதங்கேணி இ.த.க. பாடசாலையிலேயே இணைந்து செயற்பட்டு வந்தது. கல்வி நிர்வாகச் செயற்பாட்டு மையமான வடமராட்சி கிழக்கு கோட்டக் கல்விப்பணிமனை 1993 பிற்பகுதியில்; செம்பியன்பற்று தெற்கில் தனியார் வீடு ஒன்றில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வந்தது. இப்பிரதேசத்தின் முதல் கோட்டக்கல்வி அதிகாரியாக திரு.வை.செல்வராசா அவர்கள் நியமிக்கப்பட்டு இப்பணிமனையில் கடமையாற்றி வந்தார். இவ்வாறு மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிலும் இந்த இடப்பெயர்வு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தபோதிலும், இத்தகைய கஸ்டமான சூழலில் கல்வி கற்ற மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முன்னணியில் திகழ்ந்திருந்தமை வரவேற்கக்கூடிய விடயமாகும்.

1995 ஐப்பசி, 1996 வைகாசி ஆகிய காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த அனர்த்தங்கள் காரணமாக இப்பிரதேசத்தில் அடுத்த இடப்பெயர்வுகள் ஏற்பட்டன. 1991 இல் இடம்பெயர்ந்து தற்காலிகக் குடிசைகளிலும், நண்பர் உறவினர் வீடுகளிலும் வசித்து வந்த குடும்பங்களுள் பெரும்பாலானோரும், ஏனைய கிராமங்களில் நிரந்தரமாக வசித்து வந்த குடும்பங்களுள் ஒரு பகுதியினரும் இந்த இடப்பெயர்வுக்கு ஆளாகி இருந்தனர். 1991 இடப்பெயர்வின் போது வசித்த மக்களுடன் இந்த இடப்பெயர்வுகளின் போது வந்த குடும்பமுமாக சுமார் 2000 குடும்பங்கள் வரையில் இப்பகுதியில் வசித்து வந்ததாக அறியமுடிகின்றது. இப்பகுதியானது பூனைத்தொடுவாய், கற்பாடு, நல்ல தண்ணீர் தொடுவாய் என உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிரவகிக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் 3 பாடசாலைகள், 3 முன்பள்ளிகள் இயங்கி வந்தன.

அத்துடன் இங்கே கிராமமட்ட அமைப்புக்களும் தெரிவு செய்யப்பட்டு செயற்பட்டு வந்தன. இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தற்காலிக வைத்தியசாலையும், நடமாடும் மருத்துவ சேவையும் இயங்கி இப்பிரதேச மக்களுக்கான சுகாதாரசேவையினை வழங்கி வந்தன. இங்கே வசித்து வந்த மக்களுக்கானஇடம்பெயர்ந்தோர் நிவாரணம் கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் பணிமனையினால் வழங்கப்பட்டு வந்தது. மக்கள் தமது அத்தியாவசிய தேவைக்காக சுண்டிக்குளம் கடனீரேரியைக் கடந்து சென்றே நகர்ப்புறத்தை அடைய முடிந்தது. இதற்கென 3 இறங்குதுறைகள் இந்த நீரேரிப் பகுதியில் அமைக்கப்பட்டு அவர்களுக்கான படகுச் சேவைகள் சுண்டிக்குளம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்று வந்தது.

அதன்பின்னர், 2000 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 26ம் திகதி குடாரப்பு பகுதியில் ஏற்பட்ட யுத்த அனர்த்தம் காரணமாக இப்பிரதேச மக்கள் 4வது தடவையாக இடம்பெயர்ந்தனர். இதன்போது நாகர்கோவில் கிழக்கு, மேற்கு, தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளில் வசித்து வந்த மக்களும், அம்பன் கிழக்குப்பகுதி மக்களும் மேற்குப்பக்கமாக அமைந்த கிராமங்களிற்கும், பருத்தித்துறைப் பகுதிக்கும் இடம்பெயர்ந்து சென்றனர். செம்பியன்பற்று பகுதியில் வசித்துவந்த மக்களில் ஒரு பகுதியினர் மேற்குப்பக்கமாக நகர்ந்து பருத்தித்துறைப் பகுதிக்கும், பெரும்பாலான மிகுதிப் பகுதியினர் கிழக்குப்பக்கமாக நகர்ந்து சுண்டிக்குளத்திற்கும், அப்பகுதியினூடாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதேசங்களிற்கும் இடம்பெயர்ந்து சென்றனர்.

இந்த இடப்பெயர்வுடன் உதவி அரசாங்க அதிபர் பணிமனை, அம்பன் மருந்தகம் பிரதேச சபையின் உப அலுவலகங்கள், பதிவாளர் சேவை அலுவலகங்கள், கமநலசேவை நிலையம், பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தலைமைப் பணிமனை, உப தபாலகங்கள் என்பன மேற்குப்பக்கமாக நகர்ந்து பருத்தித்துறைப் பகுதியில் இயங்கத் தொடங்கின. வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குரிய அரச, அரச சார்பற்ற சேவை நிலையங்களின் அமைவிடங்கள் யாவும் இப்பிரதேசத்தை விட்டு முற்றாக இடம்பெயர்ந்த சம்பவம் இந்த 2000 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போதே ஏற்பட்டது என அறியமுடிகின்றது. இந்த 4வது இடப்பெயர்வுடன் சுமார் 2500 குடும்பங்கள் வரை வசித்து வந்தனர்.

2002ஆம் ஆண்டு மாசி மாதம் நாட்டில் ஏற்பட்ட சமாதானச்சூழலைத் தொடர்ந்து இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு வந்து மீளக்குடியேறினர். ஆனால் நாகர்கோவில் கிழக்கு, மேற்கு, தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளில் வசித்து வந்த மக்களும், அம்பன் கிழக்குப்பகுதி மக்களும் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இப்பகுதிகள் மட்டும் மக்கள் குடியமரமுடியாத சூனியப்பிரதேசமாகவே தொடர்ந்தும் இருந்து வந்தன. இதனால் இப்பிரதேசம் துண்டாடப்பட்ட நிலையில் மேற்குப்பகுதியில் மணற்காடு தொடக்கம் அம்பன் வரை ஒரு பகுதியாகவும், கிழக்குப்பகுதியில் செம்பியன்பற்று வடக்கு தொடக்கம் சுண்டிக்குளம் வரை இன்னொரு பகுதியாகவும் இருந்து வந்தன. மேற்குப் பகுதியில் 5 கிராம அலுவலர் பிரிவுகளும் கிழக்குப் பகுதியில் 10 கிராம அலுவலர் பிரிவுகளும் இயங்கி வந்தன. பருத்தித்துறை – மருதங்கேணி பிரதான வீதி அம்பன் கிராமத்துடன் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் இருந்தமையால் பருத்தித்துறையிலிருந்து யு9 பாதையை அடைந்து புதுக்காட்டுச் சந்தி மற்றும் இயக்கச்சி சந்தி என்பவற்றினூடாகவே இப்பிரதேச மக்கள் போக்குவரத்து செய்யக்கூடியதாக இருந்தது.

மக்களின் மீள்குடியமர்வைத் தொடர்ந்து நிர்வாகச் செயற்பாட்டு மையங்களும் அவற்றிற்குரிய இடங்களில் வந்து இயங்கத் தொடங்கின. மீள்குடியமர்வு இடம்பெற்ற இடங்களில் வைத்தியசேவையானது நடமாடும் சேவையாக சிலகாலம் நடைபெற்ற பின்பு மருதங்கேணி கிராமிய வைத்தியசாலை நெக்கோட் திட்டத்தில் புனரமைக்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டு இயங்கத் தொடங்கியது. அத்துடன் சுண்டிக்குளம் துஃ145 கிராம அலுவலர் பிரிவு மீண்டும் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுடன் இணைக்கப்பட்டது. இங்கே வசித்து வந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்ந்தமையால் குடும்ப எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. சுமார் 150 குடும்பங்கள் வரையே அங்கே வசித்து வந்தனர் என அறியமுடிகின்றது.

மீள்குடியமர அனுமதிக்கப்படாத நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் தெற்கு, அம்பன் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையில் வடமராட்சி கிழக்கின் ஏனைய கிராமங்களிலும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிலும், வன்னிப்பகுதியிலும் நண்பர் உறவினர் வீடுகளில் தங்கி வாழ்ந்து வந்தனர். மீள்குடியமர்வு நடைபெற்ற பகுதிகளில் இதுவரை காலமும் தொடர்ந்து வந்த யுத்த அனர்த்தங்கள், இடப்பெயர்வுகள் ஆகியவற்றால் சிதைந்து போன பொருளாதார வசதிகள், உட்கட்டுமானங்கள் யாவும் படிப்படியாக மீளுருவாக்கம் செய்யப்பட அந்த மக்களின் மனங்களும் ஓரளவு ஆறுதலடைந்து வந்தன.

மக்கள் சமாதான சூழலில் நிம்மதியாகத் தங்களின் வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருந்த வேளையில் இயற்கை அனர்த்தம் தனது கோரத்தாண்டவத்தை நடாத்திக்காட்டியது. 26.12.2004 அன்று காலைநேரம் சுனாமிப்பேரலை எழுந்து கரையோரக்கிராமங்கள் அனைத்தையும் சில விநாடி நேரத்திலே சின்னாபின்னமாக்கியது. ஏராளமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டு, பலர் அங்கவீனமாக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதுடன் சொத்துக்கள், உடமைகள் யாவும் அந்த சொற்ப நேரத்திலே அழித்து துடைக்கப்பட்ட கோரச்சம்பவத்திற்கு ஆளாகினர். இவர்கள் குடியிருந்த நிலம் எல்லாம் வெறும் வெற்று நிலமாகவே காட்சியளித்தது.

இந்த அனர்த்தத்தில் உயிர் மீண்டவர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக மனிதநேயமுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல இப்பிரதேசத்தை நாடி வந்தன. கடலிலிருந்து 300 மீற்றர் வரை சுனாமி வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் இடைத்தங்கல் வதிவிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த வதிவிடங்களில் வசித்த மக்களுக்கான அத்pயாவசிய தேவைகளை அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் பணியிலே ஈடுபட்டன.

சுனாமி வலயத்தினுள் உள்ள காணியினுள் உரித்துடையோருக்கான காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா இருபது பேட்ஸ் அரசகாணிகள் வழங்கப்பட்டு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. வெற்றிலைக்கேணி, முள்ளியான் கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் 180 வீடுகள் வரை மக்களுக்குக் கையளிக்கப்பட்ட நிலையிலும், ஏனைய கிராமங்களில் கட்டுமாணப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலும் 2006 ஆவணி 11 ஆம் திகதி மீண்டும் இப்பிரதேசத்தில் யுத்த அனர்த்தம் ஏற்பட்டது. இதன்போது யு9 பாதை தடைப்பட்டதுடன், இப்பிரதேச மக்களை மீண்டும் இடம்பெயர வைத்தது. 2000 ஆம் ஆண்டு அனர்த்தத்தைத் தொடர்ந்து இப்பிரதேசம் துண்டாடப்பட்டிருந்த போதிலும் யு9 பாதையூடாக இணைந்திருந்தது. 2006 ஆம் ஆண்டு அனர்த்தத்தில் முகமாலையுடன் யு9 பாதை தடைப்பட்டதால் இப்பிரதேசம் நிரந்தரமாகவே துண்டாடப்பட்டது.

பலத்த யுத்தச் செயற்பாடுகளினால் உதவி அரசாங்க அதிபர் பணிமனை மற்றும் சமுர்த்தி வங்கி என்பன கண்டாவளையில் இயங்கி வந்த நிலையில் உத்தியோகத்தர்களின் முயற்சியினால் பழைய பணிமனையிலிருந்த தளபாடங்கள், ஆவணங்கள், ஏனைய பொருட்கள் என்பன கொண்டு வரப்பட்டு கண்டாவளையில் இயங்கிய அலுவலகத்தில் சேர்க்கப்பட்டது. உடுத்துறை தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான 6 கிராம அலுவலர் பிரிவுகள் இயங்கியதுடன் கணக்கெடுப்பின்படி சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வந்ததாக அறியப்படுகின்றது. இந்த மக்களுக்கான உதவிகளும் கொடுப்பனவுகளும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தனதும், யாழ் மாவட்டச் செயலகத்தினதும் நெருங்கிய தொடர்பின் காரணமாக வழங்கப்பட்டிருந்தது.

யுத்த அனர்த்தங்களுக்கு மத்தியிலும் மக்கள் நலனில் அக்கறையோடு சேவையாற்றிய பதில் உதவி அரசாங்க அதிபரினதும், கிராம சேவகர்களினதும், சமுர்த்தி உத்தியோகத்தரிகளினதும், வெளிக்கள உத்தியோகத்தர்களினதும், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் அனைவரினதும் தன்னலமற்ற சேவையானது இந்த மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கின்றது. அத்துடன் இப்பகுதியில் கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்களும் தமது சேவையை இப்பிரதேச மக்களுக்கு பாரிய அனர்த்தங்களின் போதும் ஆற்றியமையானது குறிப்பிடத்தக்கது. மேலும், மருதங்கேணி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர்.ளு.சூரியகுமார் அவர்களுடன் இவ்வைத்தியசாலையில் பணியாற்றிய தாதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அனர்த்த காலத்திலும் தங்களது உயிர்களைத் துச்சமென மதித்து மக்களது உயிர்காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதை எவருமே மறக்க முடியாது.

இதேபோல் அக்காலகட்டத்தில் சேவையாற்றிய சேவை நிலையங்களின் உத்தியோகத்தர்கள், பிரதேச, கிராமமட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவருமே தமது நலனிலும் பார்க்க இப்பிரதேச மக்களின் நலனில் கூடிய அக்கறைசெலுத்தி சேவையாற்றியிருந்தனர். எனினும் இந்த இடப்பெயர்வில் இப்பிரதேச மக்கள் சந்தித்த துன்ப,துயரங்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை. தமது உயிர்களைப் பாதுகாப்பதற்கு அவர்கள் சந்தித்த அவலங்களை எழுத்து வரிகளில் எவராலும் குறிப்பிடமுடியாது. இடம்பெயர்ந்து சென்றவர்களில் முள்ளிவாய்க்காலில் வசித்த மக்கள் 2009 வைகாசி மாதம் யுத்தம் நிறைவடைந்த பின் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர், யுத்தத்தால் இடம்பெயர்ந்து நண்பர் உறவினர் வீடுகளில் வசித்து வந்த நாகர்கோவில், அம்பன பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அரசகாணி பகிர்ந்தளிக்கப்பட்டு வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டன. இந்த மக்களுக்கான புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது. சுண்டிக்குளம் பிரிவும், நாகர்கோவில் தெற்கில் ஒரு பகுதியும் மக்கள் குடியமர்வதற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை. பருத்தித்துறை – மருதங்கேணி வீதி 10 வருடங்களின் பின்னர் 2010 புரட்டாதி மாதம் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பாதையூடாக மக்கள் போக்குவரத்தினை மேற்கொள்கின்றனர். வடமராட்சி கிழக்கில் வரலாற்றில் இல்லாத மின்சார வசதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.முதல் இடப்பெயர்வின் போது நிறுத்தப்பட்ட முள்ளியான் மருந்தகம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மருத்துவசேவையானது30 வருடங்களின் பின் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு பல்நோக்குக் கூட்டுறவுச்சங்கம், சமுர்த்தி வங்கி, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை, பிரதேச சபை உபஅலுவலகம், அம்பன் கமநலசேவை நிலையம், பாடசாலைகள், பனை தொன்னை வள அபிவிருத்தி சங்கம், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சமாசம், அரச கால்நடை வைத்தியநிலையம், தாளையடி உபதபால் நிலையம், கோட்டக்கல்வி அலுவலகம், எரிபொருள் நிரப்பு நிலையம், உப்பு ஆலை, குளிரூட்டும் நிலையம், பொலிஸ் நிலையம் மற்றும் இலங்கை வங்கி கிளையொன்றும் செயற்பட்டு வருகின்றது. இப்பிரதேச மக்கள் நீண்டகால போராட்டங்களின் பின்னர் துயரங்கள் பல இருப்பினும் அந்த நிலையிலிருந்து விடுபடும் நோக்கில் மீள்கட்டுமானப்பணிகளில் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் மீண்டெழுந்து நிற்கின்றனர்.

உள்ளுராட்சிக் கட்டமைப்பு தொகு

இப்பிரதேசத்தினுள் குடத்தனை கிராம சபை, செம்பியன் பற்று கிராம சபை, என்னும் இரண்டு கிராம சபைகளும், முள்ளிப்பற்று கிராம சபையின் நான்கு வட்டாரங்களும் அமைந்திருந்தன.

குடத்தனை கிராமசபை தொகு

குடத்தனை, மணற்காடு தொடக்கம் குராரப்பு வரையான பிரதேசத்தினை நிர்வாகப்பரம்பெல்லையாக கொண்ட குடத்தனை கிராம சபை 1928 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்யது. ஆரம்பிக்கபட்ட காலத்தில் இக்கிராமசபைப் பிரதேசம் பத்து வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பத்து வட்டாரங்களும் பின்வரும் பெயரினைக்கொண்டிருந்தன.

  1. குடத்தனை கரையூர்
  2. மணற்காடு
  3. விளாங்காடு
  4. குலான்
  5. அம்பன் மேற்கு
  6. அம்பன் கிழக்கு
  7. நாகர் கோயில்
  8. நாகர் கோயில் வடக்கு
  9. நாகர் கோயில் வடமேற்கு
  10. குடாரப்பு

1967 காலப்பகுதியினுள் குடத்தனைக்கரையூர் வட்டாரமானது குடத்தனைக்கரையூர் கரையூர், பொற்பத்தை என இரண்டு வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு குடத்தனை கிராம சபை பதினொரு வட்டாரங்களைக்கொண்ட கிராம சபையாக இயங்கியது.

செம்பியன்பற்று கிராமசபை தொகு

குடாரப்பு செம்பியன் பற்று ஊர் எல்லை தொடக்கம் கிழக்கு நோக்கி ஆரியவளை – உலாந்தாக்காடு தென்னந்தோட்டம் கிழக்கு வேலி வரையான பிரதேசத்தை நிர்வாகப்பரப்பெல்லயாகக் கொண்ட செம்பியன்பற்று கிராமசபை 1928 ஆம் ஆரம்பிக்கபட்டது. ஆரம்ப காலத்தில் 09 வட்டாரங்களாக கொண்ட இக்கிராம சபையானது 1967ல் இருந்து 11 வட்டாரங்களைக் கொண்டுள்ளது. அவையாவன

  1. செம்பியன்பற்று தரவை
  2. செம்பியன்பற்று கடலோரம்
  3. தாளையடி
  4. மருதங்கேனி தரவை
  5. மருதங்கேனி கடலோரம்
  6. வந்திராயன் தரவை
  7. வந்திராயன் கடலோரம்
  8. உடுத்துறை தரவை
  9. உடுத்துறை வடமேற்கு
  10. உடுத்துறை வடகிழக்கு
  11. ஆழியவளை

ஓன்பது வட்டாரங்கள் இருந்த போதும் உடுத்துறை வட்டாரம் மூன்று வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

முள்ளிப்பற்று கிராமசபை தொகு

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தினுள் அமையாத முள்ளிப்பற்று கிராமசபையின் நான்கு வட்டாரங்கள் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தினுள் அமைந்திருந்தன. அவையாவன

  1. வெற்றிலைக்கேனி
  2. கட்டைக்காடு
  3. முள்ளியான்
  4. சுண்டிக்குளம்

பாடசாலைகள் தொகு

மருதங்கேணிப்பிரதேச சுகாதார சேவைகள் தொகு

அறிமுகம் தொகு

வடகிழக்கு பிரதேசங்களில் நிலவிய யுத்த சூழலுக்கு முந்திய காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் சுகாதார சேவைகள் மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்து இருந்தன. அந்த அடிப்படையில் மருதங்கேணி பிரதேசத்திலும் சுகாதார சேவைக் கட்டமைப்புக்கள் வளமாக இருந்ததை காணக்கூடியதாக உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த முப்பது வருட காலப்போர்ச்சூழலில் இப்பிரதேசத்தின் சுகாதாரக் கட்டமைப்புக்கள் யாவும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இவற்றை மீளக்கட்டியெழுப்பி இப்பிரதேசத்தின் சுகாதார சேவைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலைத்தேய மருத்துவ சேவைகள் மற்றும் சித்த மருத்துவ சேவைகள் தொகு

வடமராட்சி கிழக்கில் இரு தரப்பட்ட மருத்துவ சேவைகள் மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக மேலத்தேய மருத்துவ சேவை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வைத்திய சாலையின் கீழ் இயங்கி வருகின்றன.

  1. பிரசே வைத்திய சாலை – மருதங்கேனி
  2. பிரசே வைத்திய சாலை – அம்பன்
  3. ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு – முள்ளியான்

மேலும் இவ்வைத்தியசாலைகளின் மூலம் பல தரப்பட்ட சேவைகளை மக்களிற்கு வளங்கி வருகின்றன.

பிரதேச மக்களிற்கு வழங்கப்படும் மற்றுமொரு சேவையாக சுதேச மருத்துவம் விளங்குகின்றது. இப்பிரதேசத்தில் சுதேச மருத்துவ சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வளங்கப்பட்டு வந்துள்ளன. 1999ம் ஆண்டு வரை பருத்தித்துறை பிரதேச சபையின் நிர்வாகத்தின் இலவச ஆயுள்வேத மருந்தகம் நாகர்கோவிலில் இயங்கி வந்தது. இங்கிருந்து மருதங்கேனியில் நடபாடும் சேவைகள் வழங்கப்பட்டன. 2011ம் ஆண்டில் இருந்து பருத்தித்துறை இலவச ஆயுள்வேத மருந்தகத்தில் இருந்து அம்பன் குடத்தனை ஆகிய இடங்களில் நடமாடும் சேவைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது குடத்தனை வடக்கில் ஆயுள்வேத மத்திய மருந்தகம் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமராட்சி_கிழக்கு&oldid=3599166" இலிருந்து மீள்விக்கப்பட்டது