வட சென்னை குத்துச் சண்டை வரலாறு
1990க்கு முன்புவரை வட சென்னையின் விளையாட்டுகளில் குத்துச்சண்டைக்கு ஒரு முக்கிய இடம் இருந்தது. ஏராளமான பயிற்சி பட்டறைகளும், குத்துச்சண்ணை வீரர்களும் வட சென்னையில் இருந்தனர்.
வரலாறு
தொகுவட சென்னையில் குத்துச்சண்டை போட்டிகள் உருவாக காரணமாக இருந்தவர்கள் பிரித்தானியர் ஆவர். அவர்களிடம் வேலை செய்தவர்களுக்கு இடையில் குத்துச்சண்டை மோதல்களை நடக்கவைத்து பார்த்துவந்தனர். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். மூத்த தலைமுறையினர் தங்கள் அடுத்த தலைமுறையினருக்கு குத்துச்சண்டை நுணுக்கங்களை கற்பித்து களத்தில் இறக்கினர். இதுவே வட சென்னை குத்துச் சண்டை பரம்பரைகள் தோன்ற காரணமாயிற்று.[1]
இன்றைக்கு உள்ள விளையாட்டு சங்கங்கள் போல அக்காலத்தில் பரம்பரைகள் இருந்தன.[2] அவற்றில் குறிப்பிடத்தக்கவை சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, சுண்ணாம்புக் குளம் பரம்பரை, சூளை எல்லப்ப செட்டியார் பரம்பரை போன்றவை ஆகும். இந்த பரம்பரையின் தலை சிறந்த வீரரிடம் குத்துச் சண்டையை கற்றுக் கொண்டவர்கள் அந்தப் பரம்பரையின் வாரிசுகளாக கருதப்பட்டனர். போட்டியில் வீரர்களின் கௌரவத்தைவிட பரம்பரையின் கௌரவம் முதன்மையானதாக இருக்கும். காலப்போக்கில் சுண்ணாம்புக்குளம் பரம்பரை சார்பட்டா பரம்பரையுன் இணைந்துவிட்டது. இதே போல சூளை எல்லப்ப செட்டியார் பரம்பரை இடியப்ப நாயக்கர் பரம்பரையில் இணைந்துவிட்டது.[3] இந்த இரு பரம்பரைகளுமே போட்டிகள் வழக்கொழியும்வரை போட்டிகளில் சண்டையிட்டு வந்தன.
இருபரம்பரையிலும் உச்சத் தலைவரானவர் தகுதிபெற்ற வீரரை தயார்படுத்தி சண்டைக்கு அனுப்பினர். தொடக்கத்தில் பரம்பரைகளுக்கு இடையிலான கௌரவச் சண்டைகளே நடந்தன. இந்த போட்டிகள் ஒரு கட்டத்தில் குத்தகைதாரர் கைகளில் சென்றது. அவர்கள் பப்லிக் பாக்சிங் என்னும் பெயரில் போட்டிகளை ஏற்படு செய்தனர். அதன்பிறகு இது பணம் கொழிக்கும் போட்டியாக மாறியது. வீரர்களுக்கு போட்டியில் கலந்துகொள்ள ஒரு தொகை, வென்றால் ஒரு தொகை என தரப்பட்டது. வெல்கிற வீரர்களுக்கு ஒப்பந்தத் தொகை கூடிக்கொண்டே போகத் தொடங்கியது. இதன்பிறகு வீரர்களுக்கு பணமும் செல்வாக்கும் கிட்டத் தொடங்கின.[1]
ஓப்பந்தம் போட்ட பிறகு போட்டியாளர்களை ஜோடியாக நிறுத்தி ஒளிப்படம் எடுத்தனர். அந்த படத்தை நுண்டறிக்கை, சுவரொட்டி போன்றவற்றில் போட்டு விளம்பரம் செய்தனர். மேலும் துண்டறிக்கைகளில் போட்டியாளர்கள் பற்றிய குறிப்பு, அவர் எவரின் சீடர், எத்தனை போட்டிகளில் இதுவரை வென்றுள்ளார் போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டன. போட்டியைக் காண நுழைவுக் கட்டணம் வசூலிக்கபட்டது. போட்டியில் முதலில் இளைய வீரர்கள் மோதுவர். பின்னர் இறுதியில் மூத்த போட்டியாளர்கள் மோதுவர். இந்த குத்துச்சண்டைகளானது நேரு விளையாட்டரங்கம், சூளை கண்ணப்பர் திடல், தண்டையார் பேட்டை டேப்லெட் மைதானம், மெரீனா கடற்கரை போன்ற இடங்களில் நடத்தப்பட்டன. உலக குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி 1980இல் சென்னை வந்தபோது காட்சிப் போட்டியில் கலந்துகொண்டார்.[4]
போட்டியின் விதிகள் காலத்துக்கு ஏற்ப மாறிவந்துள்ளன. துவக்கத்தில் போட்டியாளர்கள் ஒரே எடையில் இருக்கவேண்டும் என்ற விதி இருக்கவில்லை. பார்க்க சமவலு உள்ளவராக இருந்தாலே மோத விடுவர். இந்நிலையில் 1948இல் ஓரு போட்டிக்கு கல்கத்தாவில் இருந்து ஆங்கிலோ இந்தியரான நாட்டெர்ரி என்ற வீரர் வந்தார். அப்போது சார்பட்டா பரம்பரையின் சிறந்த வீரராக எஸ். ஏ. அருணாச்சலம் இருந்தார். அருணாசலத்தைவிட நாட்டெர்ரி மூன்றுமடங்கு எடை மிக்கவராக இருந்தார். இருவருக்கும் நடந்த குத்துச்சண்டையில் அருணாச்சலம் களத்திலேயே இறந்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மோதுகின்ற இருவரும் குறிப்பிட்ட எடை இருக்கவேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டது.[1]
நாட்டெர்ரியை எதிர்த்து சண்டையிட சார்பட்டா பரம்பரையில் கிட்டடேரி முத்து தயார்படுத்தப்பட்டார். முத்துவுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. போட்டியில் நாட்டெர்ரியை முத்து தோற்கடித்தார். வெள்ளைக்காரரான நாட்டெர்ரியை முத்து வென்ற இந்த வெற்றி மக்களால் கொண்டாடப்பட்டது.[5]
விதிகள்
தொகு1938 வரை குத்துச்சண்டையில் தமிழ் சண்டை என்ற வகையே இருந்தது. இந்த தமிழ் சண்டையில் முகத்தில் மட்டுமே குத்தவேண்டும். வேறு எங்கும் தாக்கக்கூடாது அப்படி தாக்கினால் தாக்கியவர் வெளியேறவேண்டும். பின்னர் ஆங்கிலச் சண்டை என்பது அறிமுகமானது. இதில் தொப்புளுக்கு மேலே எங்கு வேண்டுமானாலும் தாக்கலாம். களமானது 22க்கு 22 அடி கொண்டதாக சதுரமாக இருக்கும். ஒரு சுற்று என்பது மூன்று நிமிடம் கொண்டது. போட்டி மூன்று சுற்றுகள் கொண்டது. இடையில் ஒரு நிமிடம் ஓய்வு. இதற்கிடையில் யார் அதிக குத்துக்களை இடுகிறாரோ அவர் வென்றவர். இருவரும் சம நிலையில் இருந்தால் மேலும் சுற்றுகள் தொடரும். போட்டியில் விதிகளை மீறுபவர்களுக்கு வெள்ளை அட்டை காண்பிக்கப்படும். முரட்டுத்தனமாக விதியை மீறுபவர் களத்திலிருந்து வெளியேற்றபட்டு எதிராள் வென்றதாக அறிவிக்கப்படுவார்.[1]
முடிவு
தொகுபோட்டிகள் நடக்கும்போது தங்கள் விருப்பத்துக்குரியவர் தோற்றுப்போவதை பல சமயங்கள் இரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. அவர்கள் தங்கள் கைகளில் கிடைப்பதைக் கொண்டு அடிதடியில் இறங்கும் நிலை அவ்வப்போது ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில் எட்டியப்ப நாயக்கர் பள்ளித் திடலில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு குத்துச்சண்டை போட்டி நடந்தது. போட்டியை பார்க்க பல ஆயிரம்பேர் கூடி இருந்தனர். அப்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு கும்பல் அரிவாள், கத்தி என பயங்க ஆயுதங்களுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்டது. இதனால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனால் 1989இல் பப்லிக் பாக்சிங் போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.[6]
தற்கால நிலை
தொகுவட சென்னையின் குத்துச்சண்டை பாரம்பரியத்தைக் காக்கும் விதமாக சுமார் 20 பயிற்சி நிலையங்கள் தற்போதும் செயல்பட்டு வருகின்றன.[1]
பரவலர் பண்பாட்டில்
தொகுவட சென்னையின் இந்த பரம்பரைகளுக்கு இடையில் நடந்த மோதல்களை அடிப்படையாக கொண்டு 2021 ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற படம் வெளியானது.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 வெ. நீலகண்டன், (2016). தினகரன் பொங்கல் மலர் 2016. சென்னை: தினகரன். pp. 194–203.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ "வடசென்னை பரம்பரைகளின் பின்னணி!". nakkheeran (in ஆங்கிலம்). 2020-12-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ வெ.நீலகண்டன். "சார்பட்டா பரம்பரை: வடசென்னை குத்துச்சண்டை வரலாறு! - விரிவான தகவல்கள்". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ "வடசென்னையின் விளையாட்டு முகம் குத்துச்சண்டை: சார்பட்டா பரம்பரையினர் பேசும் பாக்ஸிங் வரலாறு". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
- ↑ "Sarpatta Parambarai brings North Madras' boxing memories back in the ring". The Indian Express (in ஆங்கிலம்). 2021-08-13. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ ""சார்பட்டா பரம்பரை" நிழலும்… நிஜமும்! – VIRGO NEWS" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.