வர்ணம் (இசை)

பரதநாட்டியம்
உருப்படிகள்
நடனத்தின் இலட்சணங்கள் நடனத்தின் உட்பிரிவுகள்
உருப்படிகள்
அலாரிப்பு சதீசுவரம்
சப்தம் வர்ணம்
பதம் தில்லானா
விருத்தம் மங்களம்
நடனத்தின் இலட்சணங்கள்
பாவம்
இராகம் தாளம்
நடனத்தின் உட்பிரிவுகள்
நாட்டியம்
நிருத்தம் நிருத்தியம்

வர்ணம் என்னும் பாட்டு வகை பாடல் பயிற்சிக்கும் பாடல் அரங்க நிகழ்ச்சிகளுக்கும் (கச்சேரிகளுக்கும்) பொதுவாக இருக்கும் ஒரு பாடல் வகையாகும். குறிப்பாக இது பாடல் பயிற்சிக்கு மிக முக்கிய உருப்படியாகும். ஏனெனில் இதில் இராகங்களின் இலக்கணங்கள் தெளிவாக அமைந்திருக்கும். தான வர்ணங்கள், கச்சேரிகளின் தொடக்கத்திலேயே பாடப்படுகின்றன. பத வர்ணங்கள், நாட்டிய நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறுகின்றன.

இராகங்களின் சிறப்பியல்பைக் (பாவத்தைக்) காட்டுகின்ற மனதை ஈர்க்கும் (ரஞ்சகப்) பிரயோகங்களை அந்தந்த இராகங்களில் அமைந்துள்ள வர்ணங்களில் காணலாம்.

அங்க வேறுபாடுகள்

தொகு

வர்ணத்தின் பாடல் வரிகள் (சாகித்தியம்) குறைவாகவே காணப்படும். சாகித்தியமானது பக்தி விடயமாக, சிருங்கார விடயமாக, சங்கீதத்தை ஆதரித்த பிரபுக்களைப் பற்றியதாக அமைந்திருக்கும். வர்ணத்தை பூர்வாங்கம், உத்தராங்கம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பூர்வாங்கப் பகுதியில் பல்லவி, அனுபல்லவி, முக்தாயிஸ்வரம் என்னும் அங்கங்களும், உத்தராங்கப் பகுதியில் சரணம், சிட்டை ஸ்வரம் என்பனவும் இடம் பெறும். சரணத்திற்கு உபபல்லவி, எத்துக்கடைப்பல்லவி, சிட்டைப்பல்லவி என்னும் மறு பெயர்களும் உண்டு. சிட்டைச் சுரங்களுக்கு சரண சுரங்கள், எத்துக் கடை சுரங்கள் என்னும் மறு பெயர்கள் உண்டு.

சிட்டை சுரத்தில் ஒரு வரிசைக் கிரமம் அமைந்துள்ளது. சரணத்தை அடுத்து வரும் முதலாவது சிட்டை சுரத்தின் ஸ்வரங்கள் நெடில் சுரங்களாக அமைந்திருக்கும். முதல் 2, 3 சிட்டை சுரங்கள் ஒற்றை ஆவர்த்தனமாகவும் பின்னர் வருபவை 2, 4 ஆவர்த்தனங்களாகவும் அமைந்திருக்கும். சில வர்ணங்களில் மூன்று ஆவர்த்தனங்களைக் கொண்ட சிட்டைச் சுரங்களும் உண்டு.

வர்ணத்தின் வகைகள்

தொகு

இராகமாலிகையாக அமைந்த வர்ணங்களும் உண்டு. இவற்றின் அங்கங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இராகங்களில் அமைந்திருக்கும். வர்ணங்களை அப்பியாசம் செய்வதனால் உருப்படிகளை அழகுபடுத்தி மெருகுடனும், கமகத்துடனும் பாடுவதற்கும், வாசிப்பதற்கும் திறமை உண்டாகின்றது. வர்ணங்களை இயற்றுவதற்கு விஷேட திறமையும் கற்பனா சக்தியும் வேண்டும். வர்ணம் இரு வகைப்படும். அவையாவன:

 1. தான வர்ணம்.
 2. பத வர்ணம்.

தான வர்ணம்

தொகு

தான ஜாதி சஞ்சாரங்களுடன் பிரகசிக்கும் உருப்படியே தான வர்ணம் ஆகும். இவற்றில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்கங்களுக்கு மட்டும் சாகித்தியம் உண்டு. இவற்றை இரண்டு காலங்களிலும் பாடலாம். இவற்றைக் கச்சேரியின் ஆரம்பத்தில் பாட கச்சேரி சீக்கிரம் களை கட்டும். இவை ஆதி, அட, ஜம்பை தாளங்களிலே உண்டு.

தான வர்ணங்களை ஆக்கியோர்

தொகு
 1. பச்சிமிரியம் ஆதியப்பர்
 2. வீணை குப்பையர்
 3. பட்டணம் சுப்பிரமணியய்யர்
 4. டைகர் K. வரதாச்சாரியார்
 5. K. பொன்னைய்யாப்பிள்ளை போன்றோர்.

பத வர்ணம்

தொகு

இது நாட்டிய இசையில் முக்கிய இடம் பெறுகிறது. இவை சௌக்க காலத்திலேயே அமைந்துள்ளன. எனினும் சில மத்திம காலத்திலும் அமைந்துள்ளன. இதன் எல்லா அங்கங்களுக்கும் சாகித்தியம் உண்டு. இது சௌக்கவர்ணம் என்றும் ஆடவர்ணம் என்றும் அழைக்கப்படும். ஸ்வரம் ஆடத் தகுந்ததாகவும் சாகித்தியம் அபிநயத்திற்குத் தகுந்ததாகவும் அமைந்திருக்கும். பெரும்பாலும் ஆதி, ரூபக தாளங்களில் அமைந்திருக்கும். ஜதிகள் உள்ள பத வர்ணங்களும் காணப்படுகிறன. இவை பதஜதி வர்ணங்கள் எனப்படும். தான வர்ணங்களை விட பத வர்ணங்களில் சாகித்தியம் கூடுதலாகக் காணப்படும்.

பத வர்ணங்களை ஆக்கியோர்

தொகு
 1. கோவிந்த ராமையர்
 2. ராமஸ்வாமி தீஷிதர்
 3. பல்லவி சேஷய்யர்
 4. ராமசாமி சிவன்
 5. பாபநாசம் சிவன் முதலியோர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ணம்_(இசை)&oldid=3769633" இலிருந்து மீள்விக்கப்பட்டது