வலைவாசல்:ஆசியா/தேர்வுக் கட்டுரை/3

இந்தியா

இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.