வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/4
ஆச்சாரிய பத்திரபாகு (பொ.ஊ.மு. அண். 367 - அண். 298) என்பவர் சமணத்தின் திகம்பரப் பிரிவின் படி, சமணத்தின் இறுதி சுருதகேவலின் (கேள்வி வழியில், அதாவது மறைமுகமாக எல்லாம் அறிந்தவர்) ஆவார். ஆயினும், சுவேதாம்பரப் பிரிவினர், இறுதிச் சுருதகேவலின் ஆச்சாரிய தூலபத்திரர் எனவும் பத்திரபாகு இதனை வெளிப்படுத்துவதைத் தடுத்துவிட்டார் எனவும் கருதுகின்றனர். பிளவுபடாத சைன சங்கத்தின் இறுதி ஆச்சாரியர் ஆவார். இவர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியனின் அகநிலைசார் ஆசிரியராக விளங்கினார்.
பத்திரபாகு புண்டராவர்த்தனத்தில் பிறந்தார். (இப்பகுதி இன்றைய மேற்கு வங்காளத்தின் வட பகுதி மற்றும் வங்காளத்தேசத்தின் வடமேற்குப் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு வங்காளப் பகுதியில் அமைந்துள்ளது.) இக்காலப்பகுதியில், மௌரியர்களின் இரண்டாம் தலைநகராக உச்சைனி விளங்கியது. இவருக்கு ஏழு அகவையாக இருக்கும்போது, கோவர்த்தன மகாமுனி இவரே இறுதி சுருத கேவலியாக இருப்பார் எனக் கண்டு, இவரது துவக்கக் கல்வியை வழங்கும் பொருட்டு இவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். சுவேதாம்பரப் பிரிவின் படி, இவர் பொ.ஊ.மு. 433 இலிருந்து பொ.ஊ.மு. 357 வரை வாழ்ந்துள்ளார். திகம்பரப் பிரிவினர், இவர் பொ.ஊ.மு. 365ல் இறந்தாக முடிவு செய்துள்ளது. நட்டுபாய் சா என்பவர், இவர் பொ.ஊ.மு. 322 இலிருந்து 243 வரை வாழ்ந்ததாக முடிவு செய்துள்ளார்.
மகாவீரரால் மீள ஒழுங்கமைக்கப்பட்ட சமயப் பிரிவின் தலைவரான யசோபத்திரருக்கு (பொ.ஊ.மு. 351-235) இரு முதன்மைச் சீடர்கள் இருந்தனர். ஒருவர் சம்பூதவிசயரும் (பொ.ஊ.மு. 347-257) மற்றையவர் பத்திரபாகுவும் ஆவார். யசோபத்திரரின் மறைவுக்குப் பின், இச் சமயப்பிரிவு இவ்விரு சீடர்களின் தலைமையின் கீழ் இரண்டாகப் பிளவுற்றது.