வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/4
வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். வல்வெட்டித்துறையில் அறியப்பட்ட நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி. பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
பல இலங்கைத் தமிழர்கள் இவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.