வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/10
சர் கார்பீல்டு ஆபர்ன் சோபர்ஸ் (Sir Garfield St Aubrun Sobers) (பிறப்பு: சூலை 28, 1936) என்பவர் 1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரை மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் காரி எனவும் காரி சோபர்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். சிறந்த மட்டையாளரும் திறமைமிக்க களத்தடுப்பாளருமான இவர் அனைத்துக் காலத்திற்குமான துடுப்பாட்ட வரலாற்றின் மிகச்சிறந்த முழுவல்லாளராக அறியப்படுகிறார்.
இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக 93 தேர்வுத் துடுப்பாட்டங்கள் விளையாடி மொத்தம் 8032 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 235 மட்டையாளர்களை வீழ்த்தியுள்ளார். 5000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ள வீரர்களின் வரிசையில் சராசரி அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளார். மொத்தமாக 383 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 28,000 ஓட்டங்களை எடுத்தும் 1,000 மட்டையாளர்களை வீழ்த்தியும் உள்ளார். துடுப்பாட்டத்தில் இவரின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக அரசி இரண்டாம் எலிசபெத் இவருக்கு வீரத்திருத்தகை பட்டத்தை அளித்தார். 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதன் மூலம் பார்படோசின் பத்து தேசிய நாயகர்களுள் ஒருவராக சோபர்ஸ் போற்றப்படுகிறார்.