வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/26

கபில்தேவ் நிகாஞ்ச் (Kapil Dev Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.

1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அப்போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையானது 2000 ஆம் ஆண்டில் வால்ஸ் என்பவரால் தகர்க்கப்பட்டது. ஓய்வு பெறும் போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை முதலில் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 434 மட்டையாளர்களையும் 5000 ஓட்டங்களையும் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார். இதன்மூலம் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராக ஆனார். மார்ச் 11, 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை தனது புகழவையில் சேர்த்துக் கொண்டது.