வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/30
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (One Day International அல்லது ODI) என்பது இரு நாட்டு துடுப்பாட்ட அணிகளுக்கிடையே 50 நிறைவுகளை வரையறையாகக் கொண்டு விளையாடப்படும் ஒரு துடுப்பாட்ட வகையாகும். இது வரையிட்ட ஒருநாள் பன்னாட்டுப் போட்டி எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் நிலையைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒன்று ஒதுக்கப்படுவது உண்டு.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். 1971 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகத் தடைப்படவே, போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டபோது குழுமியிருந்த பார்வையாளருக்காக 8 பந்துகளைக் கொண்ட 40 நிறைவுகளுடன் ஒருநாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி ஜனவரி 5 1971அன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 5 இழப்புகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.