வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/8
ஆஷஸ் (Ashes) என்பது பழமையான துடுப்பாட்டத் தொடர் ஆகும். தேர்வுத் துடுப்பாட்ட வகையைச் சேர்ந்த இத்தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 1882-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. போட்டிகளின் எண்ணிக்கையில் பல்வேறு மாறுதல்கள் இருந்தாலும் 1998 ஆண்டில் இருந்து ஒரு தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் என்ற அளவில் விளையாடப்பட்டு வருகின்றது. இது ஐக்கிய இராச்சியம் அல்லது ஆத்திரேலியா நாடுகளில் நடைபெறும். ஒருவேளை தொடர் வெற்றி/தோல்வியின்றி சமமாக முடிந்தால் அதற்கு முந்தைய தொடரில் வெற்றி பெற்றிருந்த அணி ஆஷஸ் தாழியைத் தக்கவைத்துக் கொள்ளும்.
1882-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிகையான 'தி ஸ்போர்டிங் டைம்ஸ்', இங்கிலாந்து துடுப்பாட்டம் இறந்துவிட்டது, இங்கிலாந்து துடுப்பாட்டம் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது என இரங்கல் செய்தியாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணித்தலைவராக இருந்த இவோ பிளை அடுத்து வரும் குளிர்காலத்தில் ஆத்திரேலியா சென்று விளையாடவுள்ள தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை வென்று சாம்பலை மீட்டுக் கொண்டுவருவோம் என்று சூளுரைத்தார்.