வல்லாண் முல்லை
வல்லாண் முல்லை என்னும் தொடருக்கு வலிமை பெற்ற ஆண்மகனின் இருப்புநிலை என்பது பொருள்.
புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் வல்லாண் முல்லை என்பதும் ஒன்று. இது வாகைத்திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல்கள் 13 உள்ளன. [1]
இலக்கண நூல் விளக்கம்
தொகு- வல்லாண் முல்லையைத் தொல்காப்பியம் இதனை பகைவர் நுழையாமல் காக்கும் வேல்வீரனின் வல்லமையைக் கூறுவது வல்லாண் முல்லை எனக் குறிப்பிடுகிறது. [2]
- புறப்பொருள் வெண்பாமாலை வாகைத்திணையின் 33 துறைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடுகிறது. நல்லாண்மை உடையவனின் குடியையும், ஊரையும் சிறப்பித்துக் கூறுவது ‘வல்லாண் முல்லை’. [3]
வல்லாண்மகன்
தொகு- மான் நெல்லிக்காய் மேயும் பரல்கற்கள் நிறைந்த முற்றம் கொண்டது அவன் ஊர். வெயிலை மிதித்து வில்லால் உழுது வாழ்வது அவன் குடி. அங்கே குடிஞை (போர் முழக்க உடுக்கு) ஒலி கேட்கிறது. பகைவர்களே! நெருங்காதீர். [4]
- கரியும், பரியும் கட்டுத்தறியின்மேல் சினம் கொண்டுள்ளன. சான்றோர் (போர்வீரர்கள்) வெற்றிக்குப் பிறகுதான் உணவு என்கின்றனர். அரசன் கீரஞ்சாத்தன் உண்டபின் சொல்லுங்கள் என்று அவர்களைக் கெஞ்சுகிறான். [5]
- காட்டு யானை விளாம்பழத்தை உருட்டுவதை எயிற்றி தன் மகனுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கிறாள். புலவு தோய்ந்த அம்புகள் அங்கு வேலியாகக் கிடக்கின்றன. [6]
- அவனிடம் இரவலர் சென்றுள்ளர். அவனிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. அவர்களுக்குக் கொடுப்பதற்காக அவன் புறப்பட்டுவிட்டான். [7]
- அவன் மனைவி பனைக்கு விளக்கு. அவன் முனைக்கு வரம்பு (போருக்கு எல்லை கட்டுபவன்). அவனது குடி நடுகல் தெய்வம். [8]
- அதியமான் வீட்டுக் கூரையில் செருகி வைக்கப்படுள்ள ஞெலிகோல் போன்றவன். [9]
- நேற்று அவன் தன் ‘பழவாள்’ ஒன்றைப் பணையம் வைத்து வென்றுவந்தான். இன்று புலவரின் யாழைப் பணையம் வைத்து அதற்காக வென்றுவரச் சென்றுள்ளான். [10]
- புலவர் சொல்கிறார் - எனக்குக் கொடுத்துவிட்டு அவன் முற்றத்தில் கிடக்கிறான். தோலோ, பாயோ எது இருந்தாலும் அவனுக்குக் கொடுங்கள். [11]
வல்லாளன் மனைவி
தொகு- கீரை பறிக்கப்படவில்லை. விறகு எரிக்கப்படவில்லை. மனைவி பசியோடு இருக்கிறாள். ஆனால் அவன் வீட்டில் வாழும் குருவி, மயில் ஆகியனவும். அவன் வீட்டுக்கு வந்த பாணரும் அரிசி உண்டு மகிழ்கின்றனர். [12]
- முன்றில் கஃடு(கள்) சாடி வறிது ஆகவில்லை. முற்றத்தில் காய்ந்த தினையை இதல்(காடைக்குருவி), அறவு(கவுதாரி) ஆகிய பறவைகள் தின்றுவிட்டன. பொழுதும் போய்விட்டது. வேந்தன் விடுத்த தொழிலின் மேல் சென்ற அவர் வந்துவிடுவார். பாண! இருங்கள்! கூண்டிலிருக்கும் முயலைச் சமைத்துத் தருகிறேன். – இது வல்லாண் ஒருவன் மனைவியின் கொடைவண்மை. [13]
- வேலியில் முண்டை, முசுண்டை படர்ந்திருக்கும் முற்றத்து நிழலில் வேட்டுவன் உறங்கிக்கொண்டிருந்தான். மான் வேட்டைக்கு உதவும் அவனது பெண்மானைத் தழுவிப் புணர்ந்து காட்டுமான் விளையாடிக்கொண்டிருந்தது. முற்றத்தில் மான்தோலில் காயவைத்திருந்த தினையை காட்டுக்கோழியும் காடையும் தின்றுகொண்டிந்தன. கணவன் உறக்கத்துக்கும், மான்களின் காதல் விளையாட்டுக்கும் இடையூறு நேருமே என எண்ணி மனையோள் அவற்றை ஓட்டவில்லையாம். [14]
- சுளகு முறத்தில் காயும் கறுப்புத் தோல் களைந்த வெள்ளை எள்ளை புறா உண்ணக் கண்டுகளிக்கும் மனையோளை உடையவன் வல்லாண். [15]
வல்லாளன் மக்கள்
தொகு- கருப்பை(வெள்ளெலி) வரகு அறுத்த வயலில் மேயும்போது சிறுவர் வில்லால் அடிப்பர். அப்போது குறுக்கே பாய்ந்த முயல் அடிபடும். [16]
அடிக்குறிப்பு
தொகு- ↑ 170, 178, 181, 313, 314, 315, 316, 317, 318, 319, 320, 321, 322
- ↑ பெரும்பகை தாங்கும் வேலினானும், அரும்பகை தாங்கும் ஆற்றலானும், புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கம் - தொல்காப்பியம் புறத்திணையியல் 17
- ↑ இல்லும் பதியும் இயல்பும் கூறி, நல்லாண்மையை நயம் மிகுத்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை – 159
- ↑ புறம் 170,
- ↑ புறம் 178,
- ↑ புறம் 181,
- ↑ புறம் 313,
- ↑ புறம் 314
- ↑ புறம் 315,
- ↑ புறம் 316,
- ↑ புறம் 317,
- ↑ புறம் 318,
- ↑ புறம் 319,
- ↑ புறம் 320,
- ↑ புறம் 321,
- ↑ புறம் 322