வானதூதரின் புனித மரியா கோவில்

வானதூதர் மற்றும் மறைச்சாட்சியரின் புனித மரியா பெருங்கோவில் (Basilica of St. Mary of the Angels and the Martyrs) என்பது உரோமை நகரில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் சிறப்பான ஒன்றாகும்[1]. இக்கோவில் சுருக்கமாக வானதூதரின் புனித மரியா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசன் தியோக்ளேசியன் கட்டிய குளியரங்க மாடம் ஒன்று இக்கோவிலின் முகப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

வானதூதர் மற்றும் மறைச்சாட்சியரின் புனித மரியா பெருங்கோவில்
Santa Maria degli Angeli e dei Martiri (இத்தாலியம்)
Beatissimae Virginis et omnium Angelorum et Martyrum (இலத்தீன்)
கோவில் முகப்புத் தோற்றம் (தியோக்ளேசியன் குளியரங்க மாடம்: கி.பி. 3ஆம் நூற்றாண்டு)
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இத்தாலி உரோமை, இத்தாலியா
புவியியல் ஆள்கூறுகள்41°54′11″N 12°29′49″E / 41.90306°N 12.49694°E / 41.90306; 12.49694
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன்
நிலைஇளம் பெருங்கோவில்
தலைமைகர்தினால் வில்லியம் ஹென்றி கீலர்
இணையத்
தளம்
Official website

கோவிலின் அமைப்பு

தொகு
 
கோவிலின் கூரையைத் தாங்கும் இரட்டைத் தூண் தொகுதி

இக்கோவில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த அனைத்து மறைச்சாட்சிகளின் நினைவாக எழுப்பப்பட்டது. 1561ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 27ஆம் நாள் திருத்தந்தை நான்காம் பயஸ் இக்கோவில் "புனித மரியா, அனைத்து வானதூதர், மற்றும் மறைச்சாட்சிகளுக்கு" அர்ப்பணிக்கப்பட்டது என்று அறிவித்தார்.

அதன் பின்னணியாக, சிசிலி நாட்டைச் சார்ந்த அன்டோனியோ டெல் டூக்கா என்னும் துறவி பல்லாண்டுகளாகத் திருத்தந்தையை அணுகி, வானதூதரும் வணக்கம் செலுத்தும் மரியா பெயரில் கோவில் கட்டவேண்டும் என்று எழுப்பிய கோரிக்கை இருந்தது. அத்துறவி பண்டைய உரோமை மன்னன் தியோக்ளேசியன் கட்டியிருந்த புகழ்மிக்க குளியரங்க (The Baths of Diocletian) அழிவிடத்தில் 1541இல் இதுபற்றி ஒரு காட்சி கண்டதாகவும் வரலாறு உண்டு. அக்காட்சியில் மரியாவைச் சூழ்ந்து வானதூதரும் மறைச்சாட்சிகளும் தோன்றியதை டெல் டூக்கா கண்டார். இறுதியில் திருத்தந்தை இரண்டாம் மார்செல்லுஸ் மற்றும் திருத்தந்தை நான்காம் பயஸ் என்போர் ஆட்சிக்காலத்தில் அவர் கண்ட கனவு நிறைவேறியது. தியோக்ளேசியன் குளியரங்க அழிவிடப் பகுதியில் மரியாவுக்குக் கோவில் கட்டப்பட்டது.

தியோக்ளேசியன் கிறித்தவர்களை அடிமைகளாக்கி அவர்களைக் கொண்டு குளியரங்கம் கட்டினார் என்பது பிற்கால மரபு என்பது அறிஞர் கருத்து.

இக்கோவில் மட்டில் தனிக்கவனம் செலுத்திய திருத்தந்தை நான்காம் பயஸ் என்பவரின் கல்லறை இங்கு அமைந்துள்ளது.

தியோக்ளேசியன் கட்டிய குளியரங்கம் "குயிரினால் குன்றம்" (Quirinal Hill) என்னும் இடத்தில் அழிந்த நிலையில் இருந்தாலும் அதன் கட்டடத் தோற்றம் திடமாகவே இருந்தது. அக்கட்டடப் பகுதியை மாற்றியமைத்து அதை ஒரு கிறித்தவக் கோவிலுக்கு வெளிச்சுவர் போலத் திருத்தும் பணியைப் புகழ்மிக்க மைக்கலாஞ்சலோ என்னும் கலைஞர் 1563-1564இல் மேற்கொண்டார். வயதுமுதிர்ந்த மைக்கலாஞ்சலோ அப்போது புனித பேதுரு பெருங்கோவில் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் 1749இல் லூயிஜி வான்விட்டேல்லி என்பவர் அக்கட்டட அமைப்பைச் சற்றே மாற்றினாலும் மைக்கலாஞ்சலோவின் கலைப் பாணி கண்களைக் கவர்கிறது.

கிறித்தவக் கோவில்களுக்கென கட்டப்படுகின்ற வழக்கமான "முகப்புத் தோற்றம்" (facade) இக்கோவிலுக்கு இல்லை. உட்பகுதி "கிரேக்க சிலுவை" அமைப்பில், நாற்புறமும் குவியும் பாணியிலும், நெடுநீள் பகுதிபோல் குறுக்குப் பகுதியும் வெளிப்படும் வகையில் உள்ளது சிறப்பு.


 
உரோமைப் பாணி தூண்கள் கொண்ட குறுக்குப் பகுதி
 
எழும்பி நிற்கும் கோவில் உயர்விடம்
 
உயர்ந்தெழும் கோவில் முகப்பும் இரு நுழைவாயில்களும்: அண்மைத் தோற்றம்

கோவில் எழுந்த வரலாறு

தொகு

இக்கோவிலை வடிவமைக்கும் பணி மைக்கலாஞ்சலோவிடம் ஒப்படைக்கப்பட்டதும், அவர் முன்னாளைய உரோமைக் கட்டட அமைப்பைப் பாதுகாத்து, அதே சமயத்தில் புதிய கட்டடத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். ஏற்கனவே இருந்த கட்டடப் பகுதிகளை இணைத்து, நெடுநீளப்பகுதியைவிட குறுக்குப் பகுதி அதிக இடவெளியை உருவாக்கும் விதத்தில் புதிய கட்டடத்தை எழுப்பியது அக்காலத்தில் புதுமையாகக் கருதப்பட்டது.

மைக்கலாஞ்சலோ தொடங்கிய கட்டடப் பணி அவரது இறப்புக்குப் பின்னும் தொடர்ந்தது. அன்டோனியோ டெல் டூக்கா என்னும் துறவியின் உறவினர் ஜாக்கமோ டெல் டூக்கா அப்பணியை ஆற்றினார்.

18ஆம் நூற்றாண்டில் லூயிஜி வான்விட்டேல்லி (1750) மைக்கலாஞ்சலோ எளிய முறையில் அமைத்த கோவிலின் உட்பகுதியை அக்கால முறைக்கேற்ப அழகுபடுத்தினார். வத்திக்கானில் அமைந்த புனித பேதுரு பெருங்கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட ஓவியங்களை அவற்றிற்குரிய இடங்களில் பதித்தார். இவ்வாறு இக்கோவில் தலைசிறந்ததோர் ஓவியக்கூடமாகவும் திகழ்கிறது. அங்குள்ள ஓவியங்கள் சில:

  • டொமெனிக்கீனோ வரைந்த "புனித செபஸ்தியான் மறைச்சாட்சி மரணம்"
  • பொம்பேயோ பத்தோனி வரைந்த "மாயவித்தை சீமோனின் வீழ்ச்சி" (திருத்தூதர் பணிகள் 8)
  • கார்லோ மராட்டா வரைந்த "இயேசுவின் திருமுழுக்கு"
  • பியேர் சுப்லெயரா வரைந்த "புனித பசீலியு திருப்பலி ஒப்புக்கொடுத்தல்"

இறந்தோர் நினைவு

தொகு

இக்கோவிலில் பல சிறப்புமிக்க கல்லறைகள் உள்ளன. அவற்றுள் சில:

  • சால்வத்தோர் ரோசா
  • கார்லோ மராட்டா
  • அர்மாண்டோ டியாஸ்
  • பவுலோ எமீலியோ தோன் தி ரெவெல்
  • விட்டோரியோ எம்மானுவேலே ஒர்லாண்டோ
  • திருத்தந்தை நான்காம் பயஸ்

இத்தாலிய நாட்டுத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களின் அடக்கச் சடங்குகள் இக்கோவிலில் நிகழ்வது வழக்கம்.

திருமண நிகழ்வுகள்

தொகு

இக்கோவிலில் இத்தாலி நாட்டு மன்னர் மூன்றாம் விட்டோரியோ எம்மானுவேலே என்பவரின் திருமணம் நிகழ்ந்தது. அதுபோலவே மோன்டேனேக்ரோவின் அரசர் நிக்கோலா மோன்டேனேக்ரோ என்பவரின் மகள் எலேனாவின் திருமணமும் இக்கோவிலில் நடைபெற்றது.

காட்சியகம்

தொகு

இத்தாலி நாட்டின் தேசிய காட்சியகத்தின் ஒரு பகுதி இக்கோவிலை அடுத்த முன்னாள் துறவியர் இல்லக் கட்டடத்தில் உள்ளது. இத்தாலிய நாட்டின் ஒருங்கிணைப்போடு அவ்வில்லத்திலிருந்து துறவியர் அகற்றப்பட்டனர். அது இராணுவக் கூடமானது. இறுதியில் உரோமை மறைமாவட்டப் பொறுப்பில் வந்தது.

இத்தாலி நாட்டு மன்னர் மூன்றாம் விட்டோரியோ எம்மானுவேலே என்பவரின் திருமணம் இக்கோவிலில் நிகழ்ந்ததிலிருந்து, அக்கோவில் நாட்டுடைமை ஆனது.

இளம் பெருங்கோவில் நிலை

தொகு

1920, சூலை 20ஆம் நாள் திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் இக்கோவிலை இளம் பெருங்கோவில் (minor basilica) நிலைக்கு உயர்த்தினார்.

கோவிலில் அமைந்த காலங்காட்டும் புவிச்சுற்றுக்கோடு

தொகு

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் என்பவர் வானவியல், கணிதம், அகழ்வியல், வரலாறு, மெய்யியல் போன்ற துறைகளில் வல்லுநரான பிரான்செஸ்கோ பியாங்கீனி என்பவரிடம் ஒரு தனிப்பொறுப்பை ஒப்படைத்தார். வானதூதரின் புனித மரியா கோவிலில் சூரியக் கடிகார வகை சார்ந்த காலங்காட்டும் ஒரு புவிச்சுற்றுக்கோடு (meridian line) உருவாக்குவதே அப்பொறுப்பு.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை பியாங்கீனி 1702இல் முடித்தார். காலங்காட்டும் புவிச்சுற்றுக்கோட்டினைக் கோவில் தரையில் அமைக்க திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் முடிவுசெய்ததற்குக் காரணங்கள் இவை:

  • 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கிரகோரி நாட்காட்டி துல்லியமானதா என்று கண்டறிதல்;
  • இயேசுவின் உயிர்த்தெழுதல் நாளை ஆண்டுதோறும் சரியாகக் கணித்து முன்னறிவிக்க ஒரு கருவி ஆக்குதல்;
  • பொலோஞ்ஞா நகர் தலைமைக் கோவிலில் ஏற்கனவே காலங்காட்டும் புவிச்சுற்றுக்கோடு உருவாக்கப்பட்டிருந்ததால், அதையும் விஞ்சும் அளவில் உரோமை நகருக்கு அணியாக விளங்கும் புவிச்சுற்றுக்கோடு அமைத்தல்.
 
பியாங்கீனி உருவாக்கிய காலங்காட்டும் புவிச்சுற்றுக்கோடு வரைபடம் (1703). வலது புறம் சூரியக் கதிர் நண்பகலில் புவிச்சுற்றுக்கோட்டில் விழுதல்
 
அக்டோபர் மாத இறுதியில் காலை 11:54இல் புவிச்சுற்றுக்கோட்டில் விழுந்து தெரிகின்ற சூரிய படிமம்

சூரியக் கடிகாரத்தை "வானதூதரின் புனித மரியா கோவிலில்" அமைப்பதற்குக் காரணங்களாக இருந்தவை இவை:

  • கோவில் கட்டப்பட்ட "தியோக்ளேசியன் குளியரங்கம்" உரோமையரின் பிற குளியரங்கங்களைப் போல ஏற்கனவே தெற்கு நோக்கிக் கட்டப்பட்டிருந்தது. எனவே, சூரிய ஒளி தடையின்றி எப்போதும் அங்கு விழும்.
  • தியோக்ளேசியன் குளியரங்கச் சுவர்கள் மிக உயரமாக, நீள்வாக்கில் கட்டப்பட்டிருந்ததால், வானத்தில் சூரியன் தன் ஆண்டுப் பயணத்தைத் தொடர்வதைத் துல்லியமாகக் கணித்திட அது ஒரு நீள்கோடுபோல அமைந்தது.
  • பண்டைய குளியரங்கச் சுவர்கள் தரையில் ஏற்கனவே உறுதியாக இறுகியிருந்ததால் அவற்றின்மேல் வைக்கப்பட்ட அளவைக் கருவிகள் இடம் பெயராவண்ணம் உறுதியாய் இருப்பது எளிதாயிற்று.
  • தியோக்ளேசியன் ஆட்சியில் கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். அம்மன்னன் கட்டிய குளியரங்கப் பகுதியில் கிறித்தவ நாட்காட்டி அளவையை நிறுவியதன் வழியாக, பண்டைய நாட்காட்டிகள் வழக்கொழிந்தன என்று அடையாள முறையில் காட்ட முடிந்தது.

காலத்தைக் கணித்த முறை

தொகு

பியாங்கீனி உருவாக்கிய சூரியக் கடிகாரம் செயல்படும் முறை இது: உரோமை நகர் அமைந்துள்ள புவிச்சுற்றுக்கோடு 12° 30' கிழக்காகச் செல்கிறது. சரியாக நண்பகல் நேரத்தில் ஒவ்வொரு நாளும் சூரிய ஒளி கோவில் சுவரில் அமைந்த ஒரு சிறு துளை வழியாக அக்கோட்டின்மேல் விழும். உரோமை நகர் நடு ஐரோப்பிய நேரக் கணிப்புக் கொண்டுள்ளதால் அக்டோபர் இறுதியில் காலை 11:54இலிருந்து பெப்ருவரியில் 12:24 வரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் "சூரிய நண்பகல்" (solar noon) நிகழலாம். கோடைகால கதிர்த்திருப்பம் (summer solstice - சூன் 21) ஏற்படும்போது சூரியன் வானில் நேர் மேலாக இருப்பதால் அப்போது சூரிய ஒளி புவிச்சுற்றுக்கோட்டின் மேல் சுவருக்கு மிக அண்மையில் விழும். ஆனால் குளிர்கால கதிர்த்திருப்பம் (winter solstice திசம்பர் 21) ஏற்படும்போது சூரிய ஒளி புவிச்சுற்றுக்கோட்டின் மேல் சுவருக்கு மிகத் தொலையில் விழும்.

வசந்த கால மற்றும் இலையுதிர்கால சம இரவுபகல் (equinox) ஏற்படும்போது சூரிய ஒளி புவிச்சுற்றுக்கோட்டின் இரு எல்லைகளுக்கும் நடுப்பட்ட பகுதியில் விழும். புவிச்சுற்றுக்கோட்டின் நீளம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அதற்கேற்ப அதிகத் துல்லியமாக நேரத்தைச் சூரிய ஒளி விழுவதிலிருந்து கணிக்க முடியும். வானதூதரின் புனித மரியா கோவிலில் அமைந்துள்ள புவிச்சுற்றுக்கோட்டின் நீளம் 45 மீட்டர் ஆகும். அது கோவில் தரையில் வெண்கலத்தால் அமைக்கப்பட்டு, ஓரங்களில் மஞ்சள்-வெள்ளை நிறப் பளிங்குக் கரை கொண்டுள்ளது.

சூரிய ஒளி விழுவதைக் கொண்டு நேரம் கணிப்பது தவிர, பியாங்கீனி உருவாக்கிய கருவி விண்மீன்களின் ஓட்டத்தைக் கணிக்கவும் பயன்படுகிறது. இதற்காகக் கோவிலின் கூரையில் துளைகள் அமைக்கப்பட்டுள்ளன. 22 விண்மீன்களின் பெயர்களும் அவற்றின் பயணப் பாதையைக் காட்ட புவிச்சுற்றுக்கோட்டைச் சூழ்ந்து குறிக்கப்பட்டுள்ளன.

இப்புவிச்சுற்றுக்கோடு உருவாக்கப்பட்ட மூன்றாம் நூற்றாண்டு விழாவின்போது (2002) அது புதுப்பிக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற இப்புவிச்சுற்றுக்கோடு இன்றும் செயல்படு நிலையில் உள்ளது.

ஆதாரங்கள்

தொகு