வானமாமலை பெருமாள் கோவில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று
(வானமாமலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவரமங்கை என்னும் வானமாமலை என்று அழைக்கப்படும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலியிலிருந்து நான்குநேரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
வானமாமலை பெருமாள் கோவில்
புவியியல் ஆள்கூற்று:8°29′31″N 77°39′26″E / 8.491910°N 77.657349°E / 8.491910; 77.657349
பெயர்
புராண பெயர்(கள்):நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி
பெயர்:வானமாமலை பெருமாள் கோவில்
அமைவிடம்
ஊர்:நாங்குநேரி, நாங்குநேரி வட்டம்[1]
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தோத்தாத்திரிநாதன்
உற்சவர்:தெய்வநாயகப் பெருமான்
தாயார்:ஸ்ரீதேவி, பூமிதேவி
உற்சவர் தாயார்:ஸ்ரீவரமங்கை
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:சேற்றுத்தாமரை தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை
விமானம்:நந்தவர்த்தன விமானம்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:18-ஆம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, திருவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோம முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும்,[2] அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.[3]

இக்கோயிலில் வானமாமலைப் பெருமாள், திருவரமங்கை தாயார் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[4]

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 8°29'30.9"N, 77°39'26.5"E (அதாவது, 8.491910°N, 77.657349°E) ஆகும்.

தைலக்காப்பு

தொகு

இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைலக்காப்பு சாற்றும் நிகழ்வு நடைபெறும். அந்த எண்ணெயை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணெயை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.

கோயில் தோற்றம் பற்றிய தொன்மவியல்

தொகு

ஆழ்வார் திருநகரியை ஆண்ட மன்னரான காரிக்கு குழந்தேப் பேறு இல்லாததால், திருக்குறுங்குடிக்குச் சென்று வேண்டினார். மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் எப்படிபட்ட குழந்தைவேண்டும் என்று வினவினார். அதற்கு காரி தங்களைப்போன்ற ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்றார். அவ்வறே ஆகும் என உரைத்த நம்பிராயர், இங்கிருந்து கிழக்கே சென்றால் நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தில் எறும்புகள் சாரைசாரையாகச் செல்லும். அதற்கு நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்கொண்டிருப்பான். அந்த இடத்தில் அகழ்ந்தால் வானமாமலை தென்படுவான். அவன் கேட்டதை அருளுவான் என்றார். அதன்படி அந்த இடத்தைக் கண்டறிந்து அங்கே மன்னன் அகழ்ந்தபோது, அங்கே வானமாமலைப் பெருமாள் கிடைத்தார். நாங்குநேரி என்ற அவ்வூரிலேயே அவரை நிலையாட்டி அவருக்கு கோயில்கட்டி அவரை வழிபட்டார். அதன்பிறகு நம்பிராயர் அருளியபடியே காரி மன்னருக்கு மகனாக நம்மாழ்வார் பிறந்தார்.[5]

கோவில்

தொகு

கோவில் கருவறையில் ஆதிசேடன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது.

மேலும் கோயிலில் ஞானப்பிரான், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள், ராமர், கண்ண பிரான், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச் சன்னிகளில் உள்ளனர். குலசேகர மண்டபத்தில் நம்மாழ்வாரைத் தவிர 11 ஆழ்வார்களும், கருவறைப் பிரகாரத்தில் 32 ரிஷிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் உள்ளனர். இத்தலத்தில் உள்ள சேற்றுத் தாமரை தீர்த்தமானது திருப்பாற்கடலின் அம்சமாகவும் சாபம் நீக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

ஸ்ரீவானமாமலை மடம்

தொகு

ஸ்ரீவானமாமலை மடத்துக்கு இதுவே தலைமைப்பீடமாகும். இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் பாடப்பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

பூஜைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] சித்திரை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. ரை மாதம் திருவிழா நடைபெறுகிறது. வைகானசம் ஆகம முறைப்படி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பலன்தரும் பரிகாரத் தலம்: தோல்நோய் போக்கும் எண்ணெய்க் காப்பு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2014.
  3. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  4. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. வே. இசக்கிமுத்து (29 சூன் 2018). "பூமியை அகழ்ந்தால் வானமாமலை". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2018.

வெளி இணைப்புகள்

தொகு