வானுலகம்

வானுலகம் என்பது எது என்பதை மொழியியல் பார்வையில் காண்பது ஒருவகை. இதற்கு வான், வானவன், வானவர் முதலான சொல்லாட்சிகளை அணுகவேண்டியுள்ளது. இவற்றின் வழி வானுலகம் என்பது உயர்ந்த உலகம் எனப் பொருள்படுவதைக் காணமுடிகிறது. இந்த உயர்வை வேதங்கள் கற்பனை உயர்வைக் காட்டுகின்றன. இந்த உலகில் இந்திரன் முதலான தேவர்கள் வாழ்வதாக வேதகால மக்கள் கருதினர். கண்ணில் காணும் ஐம்பூதங்கள் தம் கட்டுக்குள் அடங்காதது கண்டு அவற்றைத் தேவன் என்னும் ஒருவகை உயர்ந்த மனிதனாக்கித் தேவர் என்றனர். மக்கள் வாழும் உலகம் ஒன்று இருப்பது போல, தேவர் வாழும் உலகம் ஒன்றும் இருப்பதாக எண்ணத்தை உயர்த்தினர். இப்படி எண்ணத்தை உயர்த்திய உலகமே வானுலகம்.

சமயக் கருத்தோட்டம்தொகு

பழமையான மதங்களில் இந்து, யூதம், கிறித்தவம், சொராத்தனியம், இசுலாம் ஆகிய மதங்கள் வானுலகம் பற்றிய நம்பிக்கை கொண்டவை. கன்பூசியம், சமணம், பௌத்தம் ஆகிய மதங்கள் வானுலகம் பற்றிய எண்ணத்தை கைவிட்டவை. இமயமலைக்கு மேற்கில் உள்ள மேலைநாடுகளில் தோன்றிய மதங்கள் வானுலகம் பற்றிய நம்பிக்கையுடனும், இமயமலைக்குத் தெற்கிலும், கிழக்கிலும் உள்ள கீழைநாடுகளில் தோன்றிய மதங்கள் வானுலகம் பற்றிய கருத்தில் நாட்டம் காட்டாமலும் இருந்தமை விந்தையாக உள்ளது. கடற்கோளுக்கு இரையாகித், தெற்கில் குமரிக் கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து நாட்டை விரிவாக்கிக்கொண்ட தமிழர்கள் [1] கீழைநாடுகளைப் போல வானுலகம் பற்றிய கருத்தில் நாட்டம் காட்டாதவர்களாக இருந்தனர். [2] [3] மோரியரும், ஆரியரும் சங்ககாலத்தில் தமிழகம் வந்தனர். அவர்களின் கருத்துத் தாக்கத்தால் தமிழர்களிடையே வானுலக நம்பிக்கை வேரூன்றிவிட்டது.

சங்க இலக்கியங்களில் வானுலகம்தொகு

 • வையகம், வானகம் என்பன திருக்குறளில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. [4]
 • வானுலகை மேலுலகம் என்றனர். தானம் வாங்கிக்கொள்வது மேலுலக மாந்தர்க்கு நல்ல வழக்கம். வழங்குவது மண்ணுலக மாந்தர்க்கு இயல்பான வழக்கம். இந்த வழக்கத்துக்கு மாறாக வழங்கிக்கொண்டே இருந்தால் மேலுலகம் கிட்டாது என்ற நிலை வந்தபோதும், மேலுலகை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வழங்கிக்கொண்டே இருப்பது நன்று எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது. நல்லாறு எனினும் கொளல் தீது. மேல் உலகம்
  இல் எனினும் ஈதலே நன்று (திருக்குறள் 222)
 • தாமரைக்கண்ணான் உலகு என்னும் தொடராலும் வானுலகம் குறிப்பிடப்படுகிறது. தன் மனைவியைப் போல வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவன் பிரமன். இவன் வானுலகில் இருந்துகொண்டு மண்ணுலகைப் படைத்தான் என்பர். இதனால் இவன் தாமரைக் கண்ணான். திருமகள் செந்தாமரையில் வீற்றிருப்பவள். தாமரை போன்ற கண்ணை உடையவன். இதனால் 'கண்ணன்' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவன். இவன் உலகம் வைகுந்தம். இது பேரினப மயமானது. இதுவும் 'தாமரைக் கண்ணான் உலகு'. மண்ணுலகம் இன்பமும் துன்பமும் நிறைந்தது. துன்பம் இருந்தால்தானே இன்பத்தை வேறுபாடு கண்டு உணரமுடியும். தன்னை விரும்பும் ஒருத்தியோடு தான் விரும்பி உடலுறவு கொள்வதைக் காட்டிலும், ஊடல் துன்பமும், கூடல் இன்பமும் பெறுவதைக் காட்டிலும் தாமரைக்கண்ணான் உலகு இன்பமானது அன்று - எனத் திருக்குறள் வானுலகை வேறுபடுத்திக் காட்டுகிறது. [5]

இவற்றையும் பார்க்கதொகு

அடிக்குறிப்புதொகு

 1. மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
  மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
  புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
  வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன் (கலித்தொகை 104)
 2. சங்க இலக்கியங்களில் காலத்தால் பிந்தியனவாகத் தெரியவரும் கலித்தொகை, பரிபாடல், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு தெய்வ வழிபாடுகள் இருந்ததற்கான சான்று அருகியுள்ளது.
 3. இக்கொள்கை ஆரியர் வருகைக்கு முன்னர் சிந்துவெளி உள்ளிட்ட இந்தியாவில் இருந்த பழங்குடி மக்களின் கொள்கை என்பதை இந்தியாவில் தோன்றிய சமண, பௌத்த மதக் கோட்பாடுகளால் அறியலாம்.
 4. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
  வானகமும் ஆற்றல் அரிது (திருக்குறள் 101)
 5. தாம் வீழ்வார் துயிலின் இனிதுகொல்
  தாமரைக்கண்ணான் உலகு (திருக்குறள் 1103)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானுலகம்&oldid=1509369" இருந்து மீள்விக்கப்பட்டது