வார்ப்பிரும்பு

வார்ப்பிரும்பு (Cast iron) இரும்பு அல்லது இரும்புக் கலவையை நீர்மநிலைக்கு மாறுமாறு காய்ச்சி வார்ப்பு அல்லது அச்சுகளில் ஊற்றி திண்மநிலைக்கு குளிர்வித்துப் பெறும் இரும்பு வகை ஆகும். பொதுவாக இது கசடிரும்பு அல்லது பன்றியிரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கலவை மாழையில் உள்ள தனிமங்களால் உடையும்போது இதன் வண்ணம் பாதிப்படைகிறது. வெள்ளை வார்ப்புரும்பில் கார்பைடு துகள்கள் இருப்பதால் விரிசல்களை நேராகச் செல்ல அனுமதிக்கிறது. வெண்கருமை வார்ப்புரும்பு கிராபைட்டு தகடுகளை கொண்டிருப்பதால் விரிசல்களை திசைமாற்றி பல சிறு விரிசல்களை உருவாக்குகிறது.

வார்ப்பிரும்பிலான ஓர் சமையல் கலன்.

இதன் முதன்மை கலவை உறுப்புகளாக கரிமம் (C) மற்றும் சிலிகான் (Si) உள்ளன. கரிமத்தின் பங்கு 2.1 முதல் 4 wt% ஆகவும் மற்றும் சிலிகானின் பங்கு 1 முதல் 3 wt% ஆகவும் உள்ளது. கரிமத்தின் அடக்கம் மிகக் குறைவாக உள்ள இரும்பு எஃகு எனப்படுகிறது. எனவே இவற்றை இரும்பு-கரிமம்-சிலிகான் கலவை மாழையாகக் கருதலாம். இதன் திண்மமாகும் அடிப்படையை இருபொருட்சேர்வை இரும்பு-கரிமம் நிலைமாற்ற வரிவடிவத்திலிருந்து பெறலாம். இந்தக் கலவைகள் பெரும்பாலும் இரும்பு-கரிமம் அமைப்பின் எளிதுருகு புள்ளிக்கு அண்மையில் இருப்பதால் இதன் உருகுநிலை பொதுவாக 1,150 °C (2,100 °F) முதல் 1,200 °C (2,190 °F) வீச்சகளில் உள்ளது. இது கலப்பற்ற இரும்பின் உருகுநிலையை விட 300 °C (572 °F) குறைவாகும்.

மென்றகடாக்கத்தக்க வார்ப்பிரும்பைத் தவிர்த்து பிற வார்ப்பிரும்புகள் நொறுங்கும் தன்மை உடையன. இதன் பண்புகளான குறைந்த உருகுநிலை, நல்ல பாய்மம், வார்க்கத்தக்க தன்மை, சிறந்த இயந்திர வினைமை, உருமாற்ற எதிர்ப்பு மற்றும் தேய்தல் எதிர்ப்பு ஆகியவற்றால் வார்ப்பிரும்பு பல பொறியியல் செயல்பாடுகளுக்கு சிறந்தப் பொருளாக விளங்குகிறது. குறிப்பாக குழாய்கள், இயந்திரங்கள், தானுந்துத் தொழில் உதிரிபாகங்கள் (உருளைத் தலைபாகம், உருளைத் தொகுதி, பல்லிணைப் பெட்டி) ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இது துருவினால் செயலிழப்பதில்லை.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்பிரும்பு&oldid=3228310" இலிருந்து மீள்விக்கப்பட்டது