வாலகில்யர்கள்
வாலகில்யர்கள், கட்டை விரலை விடச் சிறிய உருவமும், பெருந் தவ ஆற்றலும் கொண்ட 60,000 பேர் கொண்ட முனி கூட்டத்தவர்கள் ஆவார். வானுலகில் சுற்றித்திரியும் இவர்கள் சூரியனின் நண்பர்கள் ஆவர். இவர்கள் கிராது ரிஷியில் புதல்வர்கள்.[1][2] பிரஜாபதியான காசிபர் ஒரு முறை பெரும் வேள்வி செய்கையில், தேவர்களின் தலைவன் இந்திரன், வேள்விக்கான மரக்கட்டைகளுக்காக, ஒரு மிகப் பெரிய மலைக் காட்டையே பெயர்த்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
ஆனால் வாலகில்ய முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உலர்ந்த ஒரு மரத்தின் ஒரு துண்டை சிரமப்பட்டு தூக்கி வருவதைக் கண்ட இந்திரன், வாலகில்ய முனிவர்களைப் பார்த்து நகைத்து விட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், இந்திரனை வெல்லும் ஆற்றல் படைத்த ஒருவன் காசிபர் மூலம் பிறப்பான் என சாபமிட்டார்கள்.
இந்திரன், வாலகில்ய முனிவர்களிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதாலும், பிரம்மா இவ்விடயத்தில் தலையிட்டதன் பேரிலும், காசிபர் - வினதா இணையருக்கு பிறக்கும் கருடன், துவக்கத்தில் இந்திரனுக்கு எதிரியாகவும், பின் நண்பனாகவும் விளங்குவான் என சாபத்தை மாற்றினர்.[3]