வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு
வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு (Life cycle analysis) என்பது ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருள் அல்லது சேவையினால் சூழலில் ஏற்படும் தாக்கங்களின் மொத்த விளைவை ஆய்வு செய்யும் அல்லது மதிப்பீடு செய்யும் ஒரு முறை ஆகும். இது ஒரு உற்பத்திப் பொருளுக்கும் சூழலுக்கும் இடையே அதன் தோற்றத்தில் இருந்து அழியும் வரையில் இருக்கக்கூடிய தொடர்புகளை ஆராய்ந்து மதிப்பிடுகிறது. இதனை வாழ்க்கை வட்ட மதிப்பீடு என்றும் அழைப்பதுண்டு. இது அப்பொருளை உற்பத்தி செய்வதற்கு மூலப் பொருட்களை நிலத்தில் இருந்து எடுப்பது தொடக்கம் இறுதியில் அப்பொருள் மண்ணுக்கே திரும்பிச் செல்லும் வரையான எல்லாக் கட்டங்களையும் அது கவனத்தில் கொள்கிறது.
இலக்குகளும் நோக்கமும்
தொகுவாழ்க்கை வட்டப் பகுப்பாய்வின் நோக்கம், பொருட்களினாலும் சேவைகளினாலும் சூழலுக்கு ஏற்படக்கூடிய எல்லாக் கேடுகளையும் ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம், குறைந்த கேடுகளை விளைவிக்கக் கூடிய பொருட்களையோ சேவைகளையோ தெரிவு செய்வதற்கு உதவுவது ஆகும். தற்போது இது, பொருள்களுக்கும், சேவைகளுக்கும் பொறுப்பாக அடுத்தடுத்துப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களினால் ஏற்படும் தாக்கங்களை மட்டுமே கணக்கு வைத்துக்கொள்கிறது. இதனால், பொருட்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களினால் ஏற்படும் தாக்கங்கள் கணக்கில் வருகின்ற அதே வேளை அவற்றைப் பயன்படுத்துவதற்கு எடுக்கப்படும் முடிவுகளினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் கணக்கில் வருவதில்லை.
வாழ்க்கை வட்டம் என்பது, மூலப்பொருள் உற்பத்தி, உற்பத்தி, விநியோகம், பயன்பாடு, கழிவகற்றல் என்பவற்றுடன், இடையிடையே உள்ள போக்குவரத்துக் கட்டங்களையும் உட்படுத்திய நியாயமானதும், முழுமையானதுமான மதிப்பீட்டுக்குரிய கட்டங்கள் எல்லாவற்றையும் குறிக்கிறது. இக் கருத்துருவை, ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருளின் சூழல் செயற்திறனின் உகப்புநிலையாக்கத்துக்குப் (optimize) பயன்படுத்துவதோடு, ஒரு நிறுவனத்தின் சூழல் செயற்திறனின் உகப்புநிலையாக்கத்துக்கும் பயன்படுத்தலாம். பொதுவாக மதிப்பிடப்படும் சூழல் பாதிப்புக்களுள், புவி வெப்பமாதல் (பசுங்குடில் வளிமங்கள் உருவாதல்), அமிலமாதல், பனிப்புகை, ஓசோன் படலச் சிதைவு, நச்சுப் பொருட்களினால் ஏற்படும் மாசு, வாழ்சூழல் அழிவு, பாலைவனமாதல், நிலப்பயன்பாடு, கனிமங்களும், பெற்றோலிய எரிபொருட்கள் குறைவடைதல் என்பன அடங்குகின்றன.
நான்கு முதன்மைக் கட்டங்கள்
தொகுஐ.எசு.ஓ 14040, ஐ.எசு.ஓ 14044 ஆகிய தரங்களின்படி, வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு நான்கு கட்டங்களில் செய்யப்படுகிறது. அவை பின்வருமாறு.
- இலக்கு, செயற்பரப்பு ஆகியவற்றின் வரைவிலக்கணம்
- விபரப்பட்டியல் பகுப்பாய்வு.
- தாக்க மதிப்பீடு
- விளக்கம்
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- UNEP/SETAC வாழ்க்கை வட்ட முன்முயற்சிகள் பரணிடப்பட்டது 2009-06-09 at the வந்தவழி இயந்திரம்
- ஐரோப்பிய ஆணையத்தின் வாழ்க்கை வட்டச் சேவைகளின் விபரக்கொத்து, கருவிகள், தரவுத் தளங்கள் என்பன. பரணிடப்பட்டது 2007-12-22 at the வந்தவழி இயந்திரம்
- ஐரோப்பிய ஆணையத்தின் வாழ்க்கை வட்டத் தரவுத்தளம் ELCD (கட்டணம் இல்லை) பரணிடப்பட்டது 2007-12-14 at the வந்தவழி இயந்திரம்
- லைஃப்-சைக்கிள்.ஆர்க் - வாழ்க்கை வட்ட இணையத் தளங்களுக்கும் வளங்களுக்குமான இணைப்புகள்.
- உற்பத்திப்பொருட்கள் இயற்கைமீது தாக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு? பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம்.