விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு/கொள்கை வரைவு

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்துப் பயன்பாடு தொடர்பான திட்டமான கொள்கையை வரையறுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன். விக்கிப்பீடியர்கள் தமது கருத்தை விரிவாகக் குறிப்பிடவும். --மதனாகரன் (பேச்சு) 15:17, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன் தொகு

மதனாஹரன் (பேச்சு · பங்களிப்புக்கள்)

உள்ளடக்கத்தில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை இயலுமான வரை தவிர்க்க வேண்டும். அவ்வாறு கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைத் தகுந்த ஒலிபெயர்ப்பு முறைப்படி தமிழ் எழுத்துகளில் எழுதுவதைத் துப்புரவுப் பணியாகக் கருத வேண்டும். அதற்கு எதிர்ப்பு இருக்கக்கூடாது. வழிமாற்றிலும் கட்டுரையின் தொடக்கத்தில் அடைப்பினுள்ளும் கிரந்தப்பெயரைக் குறிப்பிடலாம். ஏன் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தக்கூடாது (சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். பல இடங்களில் இது பற்றி உரையாடப்பட்டுள்ளது.)?

  • கிரந்த எழுத்துகள் (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) தமிழ் நெடுங்கணக்கில் இல்லை.
  • கிரந்த எழுத்துகளுக்கு இலக்கணம் கூற முடியாது (ராஜ்+ஐ=ராஜை, ராஜ்ஜை?, இந்த+ஜோடி=?).
  • தமிழின் ஒலிப்பு முறையைக் கிரந்த எழுத்துகள் சீர்குலைக்கின்றன (ராஜஸ்தான்-இதிலுள்ள தகரத்தை எப்படிப் பலுக்குவது?, பஸ்கால்=Pascal, Pasgal? எப்படிப் பலுக்குவது?).
  • மேற்கூறியதன்படி, கிரந்தத்தைப் பயன்படுத்துவதால் மட்டும் ஒலிப்புத் துல்லியத்தை (அது தேவையுமன்று.) ஏற்படுத்தமுடியாது. Fifth என்பதையோ Zebra என்பதையோ கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி ஒலிப்புத் துல்லியத்துடன் எழுதமுடியாது.
  • மொழியின் இயல்புக்கேற்றவாறு பெயர்கள் திரிவது இயல்பானதே (Exonym). தமிழ் Tamil ஆனதும் இதனால் தான்.
  • பேச்சுவழக்குத் தமிழிலும் கிரந்தம் தவிர்த்துப் பலுக்குவதைக் கவனிக்கலாம்.
  • ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான சொற்களைக் கிரந்தம் நீக்கி எழுதி வந்திருக்கிறோம், வருகிறோம் (விடயம், இலக்குவன், அட்சரம், சாதி, ...). இது புதியதன்று.
  • பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்ட பல தமிழ் இலக்கியங்களில் (எ-டு: கம்பராமாயணம்) கூடக் கிரந்தம் பயன்படுத்தப்படவில்லை.
  • இலங்கையில் பாடசாலைப் பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான அறிவியற் கலைச்சொற்களிலும் பெயர்களிலும் கிரந்தம் பயன்படுத்தப்படவில்லை (Hydrogen-ஐதரசன், Oxygen-ஒட்சிசன், Scandium-காந்தியம், Stoke-தோக்கு, Hess-எசு, Halogen-அலசன், Ester-எசுத்தர், ... ஸகர மெய்க்குப் பதிலாக, சு எழுத்தைப் பயன்படுத்துவது புதியதன்று. இடத்தைப் பொருத்துப் பயன்படுத்த வேண்டும்.).
  • இன்னும் பல உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, இது தமிழ் விக்கிப்பீடியா. --மதனாகரன் (பேச்சு) 15:17, 24 ஆகத்து 2015 (UTC) --07:36, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

விண்ணன் தொகு

Winnan Tirunallur (பேச்சு · பங்களிப்புக்கள்)

தமிழ் விக்கியில் கிரந்தத்தை இயன்றவரை தவிர்க்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், கிரந்த எழுத்துக்கள் சில இடங்களில் கண்டிப்பாக தேவைப்படுகின்றன.

  • கிரந்த எழுத்துக்களை தமிழ் சமூகம் கடந்த 1500 ஆண்டுகளாக தமிழ் மொழியில் பயன்படுத்தி வருகின்றது. இதற்கு சாட்சியங்களாக பல பல்லவர், சோழர், பாண்டியர், சேரர் கால தமிழ் கல்வெட்டுக்களில் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, அவை நமக்கு கிடைத்திருக்கின்றன.
  • எந்தவொரு மொழிக்கும் குறிப்பிட்ட எழுத்துக்களே பயன்பாட்டில் உள்ளன என்பதால் அந்த எழுத்துக்களுக்குள் மட்டுமே அந்நிய மொழிச் சொற்களை எழுத முடியும் என்பதை நாமும் அறிவோம். ஆனால் ஒன்றை தாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் சில மொழிகளில் சில எழுத்துக்கள் இடைக்காலங்களில் சேர்ந்து கொள்கின்றன. அதனை கூடுதல் எழுத்துக்களாக தேவைக்கேற்ப அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆங்கிலத்தில் கூட சில பிரஞ்சு சொற்களை பயன்படுத்துகின்ற போது அதன் diacritic marks இருப்பதை கவனிக்கலாம். ஆங்கிலம் மட்டுமல்ல சீன மொழி, ஜப்பானிய மொழிகளில் கூட அந்நியச் சொற்களை எழுத கூடுதல் எழுத்துக்களை குறிப்பிட்ட சில இடங்களில் பயன்படுத்துகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. தமிழிலும் இடைக்காலங்களில் (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) போன்ற கிரந்த எழுத்துக்கள் இணைத்து பயன்படுத்தபட்டு வருகின்றது. இதில் மிக முக்கியமாக ஸ், ஜ, ஹ ஆகிய எழுத்துக்கள் தற்காலத் தமிழில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. ஷகரம், க்ஷகரம், ஸ்ரீ போன்றைவை அருகி வருகின்றன.
  • தமிழில் கிரந்த எழுத்துக்கள் வேண்டாம் என வெகுசிலர் கூறினாலும் தமிழ் புத்தகங்கள், தமிழ் பத்திரிக்கைகள் முதல் இன்று தமிழ் ஒருங்குறி வரையில் ஜ, ஷ, ஸ, ஹ போன்ற கிரந்த எழுத்துக்களுக்கு இடமளிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கான வாய்ப்புக்களை கணனித் தமிழும் வழங்கியிருக்கின்றது. கணனியில் இந்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்றால் நிச்சயம் யாமும் அதைப் பயன்படுத்தப் போவதில்லை. ஆனால் வாய்ப்பு இருக்கின்றது, தமிழர்கள் பயன்படுத்துகின்றார்கள், தமிழ் இணைய தளங்கள் பயன்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமில்லை இலங்கையிலும் பாடப்புத்தகங்கள், அரசு இணையதளங்கள் என எங்கும் பயன்படுத்தப்பட்டே வருகின்றன.
  • அதே போல தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்களில் பெரும்பான்மையினர் இந்த எழுத்துக்களை அன்றாடம் எதோ ஒரு வகையில் பயன்படுத்தியும் வருகின்றனர்.இந்த எழுத்துக்களை மக்களால் அடையாளம் காணக் கூடியதாகவும், அதை புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இன்றிருக்கின்றது.
  • ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஸ்பெயின், கிருஷ்ணகிரி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என ஏற்கனவே புழக்கத்தில் வந்துவிட்ட சொற்களையே தமிழ்நாடு, கருநாடகம், கேரளம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்களும், தமிழ் ஊடகங்களும் பயன்படுத்துகின்றன. இதனையே நாமும் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் ராஜஸ்தான் என்ற சொல்லை கூகிளில் எழுதி தேடுவோருக்கு அதைப் பற்றிய மேலதிக தகவல்களை விக்கிபீடியா ஊடாக அறிந்து கொள்ள உதவும். அதே சமயம் தனித் தமிழார்வலர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் அடைப்புக்குறிக்குள் இராசத்தான் என்ற தனித்தமிழ் மயப்படுத்திய சொல்லையும் சேர்த்து எழுதலாம்.
  • பிரான்சு, சுவீடன், இராமன், இலங்கை, இலக்குவன், சாதி, கியாழம், சனி போன்ற பெயர்ச்சொற்கள் ஏற்கனவே தமிழ்ப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதால் அவற்றில் நாம் மாற்றம் செய்ய வேண்டியதில்லை. புதிதாக ஏற்கனவே புழக்கத்தில் இல்லாத அந்நியப் பெயர்ச்சொற்களை தமிழில் எழுதும் போது தமிழின் ஒலியமைதி கெடாதவாறு ( இராசச்சுத்தான் போல கொடூரமாக இல்லாமல் ) நல்ல தமிழில் ஒலிமாற்றம் செய்து எழுதலாம். இதில் சிக்கல்கள் எழுகின்ற சமயம் தமிழ் வல்லுநர்கள், தமிழாசிரியர்கள், தமிழாய்வாளர்கள் போன்றோரது மேன்மையான ஆலோசணையை நாடி அவர்களது வழிகாட்டலில் இயங்குவது மேலும் உதவி புரியும்.
  • தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழ் உயர்வானதோ, தாழ்வானதோ என நான் சொல்ல வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழானது இங்குள்ள ஏழரைக் கோடி மக்களாலும், கருநாடகத்தில்லுள்ள 40 லட்சம் தமிழர்களாலும், கேரளத்திலுள்ள 12 லட்சம் தமிழர்களாலும், மலேசியாவிலுள்ள 18 லட்சம் தமிழர்களாலும், சிங்கப்பூரிலுள்ள 2 லட்சம் தமிழர்களாலும், அமெரிக்காவிலுள்ள 2 லட்சம் தமிழர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்களே தமிழ் விக்கிபீடியாவை அதிகளவு நுகர்வோராக இருக்கின்றனர். பொதுமக்களுக்கு புரியும் மொழியில் எழுதுவதில் தவறில்லை. மீண்டும் நான் இங்கு நினைவுப் படுத்த விரும்புவது "விக்கிபீடியா ஒரு அறிவுக் களஞ்சியம், இது மொழியாராய்ச்சிக் கூடம் கிடையாது".
  • எந்த சொல் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றதோ அதனையே விக்கிபீடியா கட்டுரையின் முதன்மை தலைப்பாக இடவேண்டும். குறைந்தளவில் பயன்படுத்தப்படும் சொற்களை அடைப்புக்குறிக்குள் இடவேண்டும். புதிதாக அவரவர் மனம்விரும்பிய வண்ணம் (இராசச்சுத்தான், இடாய்ச்சு) உருவாக்க முன் அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது. இது வெறும் விக்கிபீடியா பயனர்களை மட்டும் அடிப்படையாக கொள்ளலாம், இதற்கு வெளியே இருக்கின்ற எழுத்தாளர்கள், கல்விமான்கள், தமிழ் ஆய்வாளர்கள், ஆசிரியப் பெருமக்கள் போன்றோரிடமும் கருத்துக் கேட்பதே நல்லது, அதுவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும்.
  • எவ்வாறு கிரந்த எழுத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என்பதற்கு உங்களுக்கு உரிமை இருப்பதாக சொல்லுகின்றீர்களோ, அதே உரிமை எழுத்துக்களை தேவையான இடங்களில் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கும் முழு உரிமை இருக்கின்றது என்பதை நான் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக இந்த தமிழ் விக்கிபீடியா செந்தமிழ் விக்கிபீடியா கிடையாது, இது தற்கால பொதுத்தமிழ் விக்கிபீடியா. --Winnan Tirunallur (பேச்சு) 03:35, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இரவி தொகு

பயனர்கள் ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் கிரந்தம் வேண்டும் / வேண்டாம் என்று உரையாடி ஆற்றலை வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பான என்னுடைய கருத்துகளை இன்றிரவுக்குள் பகிர்ந்து கொள்கிறேன். அது வரைப் பொறுத்திருந்து மற்றவர்கள் தொடரக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:25, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு குறித்த மாற்றுக் கருத்துகள் தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க நாட்களில் இருந்தே இருக்கின்றன. அவ்வப்போது இது தொடர்பாக முடிவுறா விவாதங்கள் வந்த போது எல்லாம், இது தொடர்பான வழிகாட்டல்களை உருவாக்கும் அளவு தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் வளரவில்லை என்ற காரணத்தினால் இம்முயற்சியைத் தள்ளிப் போட்டு வந்துள்ளோம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளைக் கடக்கும் போதும் 50,000 கட்டுரைகளைக் கடக்கும் போதும் இம்முயற்சியை மேற்கொள்ளலாம் என்றெண்ணி, சூழல் சீராக இல்லாத காரணத்தால் தள்ளிப் போட்டு வந்துள்ளோம். தற்போதும் அச்சூழலில் பெரிய மாற்றம் இல்லை என்றே கருதுகிறேன்.

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும். கிரந்தம் தவிர்த்து எழுதுவோர், இயன்ற அளவு கிரந்தம் தவிர்ப்போர், பகுதி கிரந்தம் தவிர்த்து சில இடங்களில் கிரந்தம் பயன்படுத்துவோர், கிரந்தம் தவிர்க்காமல் பயன்படுத்துவோர், கிரந்தப் பிரச்சினை பற்றிய எந்த வித நிலைப்பாடும் இல்லாமல் தாங்கள் அறிந்தவாறே எழுதுவோர் என்று பல வகைப்பட்டவர்களும் கூடியே தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் இயங்கி வருகிறோம். சூன், சூலை போன்று சீராக அனைத்து முறைமைச் செய்திகள், வார்ப்புருக்களில் ஒரே பெயரைப் பயன்படுத்த வேண்டிய இடங்கள் தவிர மற்ற இடங்களில் வலுக்கட்டாயமாக கிரந்தம் சேர்த்தோ தவிர்த்தோ எழுதுவதில்லை. இவ்வகைகளில் எழுதுவோர் முதலில் ஒரு வகையாக இருந்து பிறகு மற்றொரு நிலைப்பாட்டை எடுத்தவர்கள் நிறைய பேர். இவ்வகையினர் அனைவரும் இணங்கி ஒன்று கூடி உழைப்பதே நமது வலு.

2006-2012 காலப்பகுதியில் கிரந்தம் தொடர்பான பல சூடான விவாதங்கள், துப்புரவுப் பணிகளில் ஒரு நிலைப்பாட்டை வலியுறுத்த முனைந்தமை உண்மை தான். நானே கூட தனிப்பட்ட அளவில் ஒரு காலக்கட்டத்தில் தீவிர நிலைப்பாடு கொண்டிருந்தவன் தான். எனினும், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் விக்கிப்பீடியாவையும், நாம் இயங்கும் தமிழ்ச் சமூகச் சூழலையும் பிற மொழி விக்கிப்பீடியாக்களையும் கவனித்த பட்டறிவில் சொல்கிறேன். கிரந்தம் வேண்டும், வேண்டாம் என்பது தமிழ்ச் சமூகத்தில் கல் தோன்ற மண் தோன்றா காலத்துச் சிக்கல். இதற்கு விக்கி மூலமாகவோ விக்கியில் மட்டுமோ தீர்வு காண முடியாது. அப்படி முனைவது தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தைப் பிளந்து திட்டத்தை முடக்குவதில் போய் தான் முடியும்.

கிரந்தம் வேண்டும் அல்லது வேண்டாம் என்பது ஒரு மொழி சார்ந்த சிக்கல் மட்டும் அன்று. அது ஒரு சமூகச் சிக்கல். சென்ற நூற்றாண்டில் எழுந்த தனித்தமிழ் இயக்கம் என்பது அரசியல், பண்பாடு என்று பல்வேறு களங்களிலும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்பட்ட இயக்கம். அதனாலேயே வென்றது. அப்போது ஒரு விக்கி இருந்து அதில் நாங்கள் தனித்தமிழில் மட்டும் தான் எழுதுவோம் என்று முயன்றிருந்தால் வெற்றி பெற்றிருக்காது.

நான் எழுதும் கட்டுரைகளில் இயன்ற அளவு நல்ல தமிழில், கிரந்தம் மற்றும் பிற மொழிச் சொற்களைத் தவிர்த்தே எழுதுகிறேன். ஆனால், பிறர் பங்களித்துள்ள கட்டுரைகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் போது வலிந்து கிரந்தம் நீக்குவதில்லை. தற்போது கிரந்தம் கலந்து எழுதும் பல முனைப்பான பங்களிப்பாளர்களும் கூட கிரந்தம் தவிர்த்த கட்டுரைகளில் இவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்வதாலேயே தமிழ் விக்கிப்பீடியா வெற்றிகரமான, ஒற்றுமையான திட்டமாக உள்ளது. இந்த நெகிழ்வு, இணக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு தொடர்வது மிகவும் இன்றியமையாதது.

ஒரு எடுத்துக்காட்டுக்குச் சொல்ல வேண்டும் என்றால், நாம் இலங்கை எதிர் தமிழக வழக்குச் சிக்கல் வரும் போது மிக அருமையாக ஒன்றுக்கு மாற்றான மற்றொரு வழக்கை அடைப்புக்குறிக்குள் இட்டு நகர்கிறோம். இதில் இலங்கை வழக்கத்தைத் தான் முன்னிறுத்த வேண்டும் என்றோ தமிழக வழக்கைத் தான் முன்னிறுத்த வேண்டும் என்றோ பெரும்பான்மை வாதம் பேசத் தொடங்கி இருந்தால் தமிழ் விக்கிப்பீடியா அன்றே அழிந்திருக்கும். இதே போல் இரு நாட்டுச் சூழல் உள்ள உருது விக்கிப்பீடியர்கள், வங்காளி விக்கிப்பீடியர்கள் (சில இடங்களில் மட்டும்) இத்தகைய ஒரு அடைப்புக்குறி ஏற்பாடு கூட இல்லாமல் பக்கத்துக்குப் பக்கம் முரண்பட்டு ஆற்றலை வீணாக்கி வருகிறார்கள். இப்படி ஒரு அடைப்புக்குறி ஏற்பாட்டைப் பற்றிச் சொன்ன போது, "அட, இப்படிக் கூட இச்சிக்கலைத் தீர்கலாமா?" என்று வியந்தார்கள். ஆக, பல சிக்கல்களை இயல்பான புரிந்துணர்வோடு தீர்க்கும் முதிர்ச்சியும், ஆற்றலும் நமக்கு உண்டு. இந்தக் கோணத்திலேயே கிரந்தச் சிக்கலையும் பார்க்கிறேன்.

பல இலட்சக்கணக்கான பக்கங்களில் கிரந்தம் கலந்தே தமிழ் விக்கிப்பீடியா ஆக்கங்கள் இருந்தாலும், அவற்றை நீக்க வேண்டும் என்று எந்த முனைவும் நமக்கு இல்லாவிட்டாலும் தமிழ் விக்கிப்பீடியர்கள் தனித்தமிழ் தாலிபான்கள் என்ற அளவுக்கு வெளியே நமக்கு எதிரான பரப்புரை நடக்கிறது. தமிழ் விக்கிப்பீடியா ஒரு குறிப்பிட்ட வட்டார நடையுடன் இருக்கிறது, திராவிடத்துக்கு எதிராக இருக்கிறது, பார்ப்பனீயத்தை ஆதரிக்கிறது என்பது போன்று ஏகப்பட்ட பிழையான புரிதல்கள், தவறான பரப்புரைகள் உள்ளன. ஏதோ ஒரு வகையில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை, பன்னாட்டுத் தமிழர்களும் ஒன்று கூடி இயங்குவதை, கட்டற்ற அறிவு ஆக்கங்கள் பெருகுவதைச் சகித்துக் கொள்ளாத பல்வேறு எதிர் சக்திகள் வெளியே உள்ளன. இவர்கள் மிக நுணுக்கமாக நமக்கு எதிராக தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வழமையாக வந்திருக்க வேண்டிய பல பங்களிப்பாளர்களைத் தடுத்தும் குழப்பியும் வருகிறார்கள். நாம் இயங்கும் இந்தச் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் விக்கிப்பீடியா பல்வேறு கூட்டு வாய்ப்புகள் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகரும் வேளையில், இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நாம் மொழியார்வத்தில் பொதுத்தமிழ் - செந்தமிழ் - தனித்தமிழ் என்று பேசும் உரையாடல்கள் மிக இலகுவாக இலங்கை எதிர் தமிழ்நாடு என்றோ இந்து / இசுலாமியர் / கிறித்தவர் எதிர் நாத்திகர்கள் என்றோ மடை மாற்றப்படும் அபாயம் உண்டு. இந்த அபாயத்தை உணர்ந்து, வேறு பெரும் பங்களிப்புகள் ஏதும் நல்காமல் எடுத்த எடுப்பில் பல ஆண்டுகளாக கிரந்தப் பிரச்சினை உள்ள பக்கங்களை மட்டுமே குறி வைத்து வம்பளந்து நமது வாயைக் கிளறி ஒற்றுமையக் குலைக்க முனைபவர்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். வம்பளப்பவர்களைப் புறக்கணித்து வழமையான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகளில் ஈடுபடுங்கள்.

கலைக்களஞ்சியத்தில் சீரான நடை இருப்பது முக்கியம் தான். விக்கிப்பீடியாவின் கட்டற்ற ஆக்க உரிமை எந்த ஒரு பக்கத்தையும் திருத்துவதை ஊக்குவிக்கிறது என்பது உண்மை தான். ஆனால், இதை எல்லாவற்றையும் விட முக்கியமானது, நாம் ஒரு சமூகமாக ஒன்று கூடி இயங்கும் போது அதன் பின் உள்ள இயங்கியலையும் உளவியலையும் புரிந்து கொள்வது.

ஒரு பேச்சுக்கு, தமிழ் விக்கிப்பீடியா முழுதும் கிரந்தம் தவிர்க்கிறோம் என்று இறுக்கமான கொள்கை எடுத்து அனைத்து பக்கங்களையும் துப்புரவு செய்கிறோம் என்றால் என்ன ஆகும்? ஏற்கனவே உள்ள பொய்யான பரப்புரை மெய்யாகும். தமிழ் விக்கிப்பீடியாவில் வேறு எந்தப் பிணக்கும் மாற்றுக் கருத்தும் இல்லாமல் மிக அருமையாகப் பங்களித்துக் கொண்டு வரும் பல நல்ல பங்களிப்பாளர்கள் வெளியேறுவது உறுதி.

மாறாக, கட்டாயம் கிரந்தம் கலப்போம் என்ற அழுத்தத்துக்கு இசைந்து கொடுத்தால் தமிழார்வத்தால் உந்தப்பட்டு மட்டுமே பங்களிக்கும் பல முன்னணி பங்களிப்பாளர்களை இழப்போம். வெறுமனே வெளியில் இருந்து விமரிசனம் மட்டும் செய்வோருக்கு இடையில் பல ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதுக் குவித்திருப்போருக்கு முக்கிய உந்துதல் இத்தமிழார்வம் மட்டுமே. இவர்களில் பலர் தமிழ் விக்கிப்பீடியாவுக்குள் நுழையும் போது கிரந்த ஆதரவு அல்லது கிரந்தம் பற்றிய எந்த நிலைப்பாடும் இன்றி வந்து பிறகு காலப்போக்கில் கிரந்தத் தவிர்த்து எழுதத் தொடங்கியவர்கள். எனவே, அனைவரையும் அரவணைத்துப் போவதற்கான களம் இருப்பது மிகவும் இன்றியமையாதது.

விக்கிப்பீடியா முழுக்க தனித்தமிழில் மட்டும் ஒரு இலட்சம் கட்டுரைகள், கிரந்தம் கட்டாயம் கலந்து மட்டும் ஒரு இலட்சம் கட்டுரைகள் என்பதை விட நாம் அனைவரும் இணைந்து பல இலட்சம் கட்டுரைகள் ஆக்கும் ஒற்றுமையுடன் தொடர்ந்து செயல்படுவது மிகவும் அவசியம். ஏனெனில், தமிழின் தொடர்ச்சியைத் தக்க வைக்க நமக்கு இன்னும் பல இலட்சம் விரிவான கட்டுரைகள் தேவை. முதலில் இப்பல இலட்சம் கட்டுரைகளை உருவாக்குவோம். கிரந்தம் கலந்து இருந்தாலும் சரி. கலக்காமல் இருந்தாலும் சரி. அதன் பிறகு, காலப்போக்கில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வெளியே நடக்கும் மொழி சார் மாற்றங்கள் ஒரு சீரான நடையை நோக்கிச் செல்ல உதவும். கிரந்தம் தவிர்த்த தமிழ் வேண்டும் என்று விரும்புவோர் உண்மையில் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டிய களம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வெளியேயே உள்ளது.

 
ராஜஸ்தான் என்று தேடினாலும் கூகுள் இராசத்தான் பக்கத்தைக் காட்டும்

கூகுளில் ராஜஸ்தான் என்று தேடினாலும் இராசத்தான் பக்கம் வரும். வேண்டும் என்றால் அரசநாடு என்ற கூட பெயர் மாற்றிப் பார்க்கலாம் :) விக்கித்தரவின் மூலம் பல்வேறு பக்கங்களின் இணைப்புகளைப் புரிந்து வைத்துள்ள கூகுளுக்கு இப்பெயர் மாற்றங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அன்று. எனவே, நுட்பக் காரணங்களைச் சுட்டி கிரந்தக் கலப்பை ஏற்க முடியாது. பாடநூல்களில் எப்படிப் பெயர் இருந்தாலும் வெகுமக்கள் ஊடகங்கள் கூட தங்களின் ஒரே இதழில் வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டுக்கு, அரியானா, ஹரியானா என்று இரு வேறு முறையில் ஒரே இதழ் குறிப்பிடுவதைக் காணலாம். மராட்டியம், மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா என்று தினத்தந்தியே பல்வேறு விதமாக ஒரு மாநிலப் பெயரைக் குறிப்பிடுவதைக் காணலாம். எனவே, பெயர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதி அரசோ ஊடகங்களோ பாடநூல்களோ மட்டும் தான் இறுதியான ஆதாரம் என்றில்லை. இவற்றுக்குத் தத்தம் மொழிநடையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள இருக்கும் உரிமை மாதம் பல மில்லியன் மக்கள் பார்க்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் உண்டு. மேற்கண்டது போன்ற வாதங்கள் இணையமும் நுட்பமும் மக்கள் ஊடகங்களும் வளர்ந்திருக்கும் காலக்கட்டத்தில் செல்லுபடியாகாதவை.

ஒரு தமிழ் ஆர்வலர் தனித்தமிழ், கிரந்தம் தவிர்த்த தமிழ் எழுத முனைந்தாலும் வெகு மக்கள் ஊடகங்களும் பதிப்பகங்களும் இடம் தராமல் கட்டாயமாக கிரந்தத்தைத் திணிக்கின்றன என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. விக்கிப்பீடியா என்னும் இயக்கமே பல விசயங்களைக் கட்டுடைக்கும் இயக்கம் தான் என்பதால் பொதுத்தமிழ் என்ற பெயரில் சமூகத்தில் ஒரு சிலர் ஏற்படுத்தி வைத்திருக்கும் கட்டுகளைத் தமிழ் நலம் நாடும் தமிழ் விக்கிப்பீடியர் மேல் திணிக்க விட இயலாது. தனித்தமிழுக்கு அடைப்புக்குறியில் மட்டும் தான் இட ஒதுக்கீடு என்று சொல்லும் இந்தப் "பொதுத் தமிழர்கள்" யார்? இலட்சக்கணக்கான பக்கங்களில் கிரந்தம் கலந்து இருந்தாலும் ஒரு சில பக்கங்களில் கூட கிரந்தம் தவிர்த்து இருப்பதைக் கூடச் சகித்துக் கொள்ள முடியாத இந்த "நலம்விரும்பிகள்" யார்? எப்படி இவர்கள் எல்லாம் சொல்லி வைத்தாற் போல் நேரடியாக சர்ச்சைக்குரிய பக்கங்களில் வந்து இறங்குகிறார்கள்? எண்ணிப்பார்க்கலாம் :)

இது உழைப்பவர்களுக்கான உலகம். அவரவர் தத்தம் நிலைப்பாட்டுடன் வழமை போல் ஒன்றுகூடி, இணக்கமான சூழலில் உழைப்போம். எது பொதுத் தமிழ் என்பதை காலம் முடிவெடுக்கும். கிரந்தம் தொடர்பாக எந்த இறுக்கமான கொள்கையும் வழிகாட்டலும் இல்லாமல் நெகிழ்வுத்தன்மையுடன் தொடர்வதே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்லது. --இரவி (பேச்சு) 08:23, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தனித்தமிழுக்கு அடைப்புக்குறியில் மட்டும் தான் இட ஒதுக்கீடு என்று சொல்லும் இந்தப் "பொதுத் தமிழர்கள்" யார்? இலட்சக்கணக்கான பக்கங்களில் கிரந்தம் கலந்து இருந்தாலும் ஒரு சில பக்கங்களில் கூட கிரந்தம் தவிர்த்து இருப்பதைக் கூடச் சகித்துக் கொள்ள முடியாத இந்த "நலம்விரும்பிகள்" யார்? எப்படி இவர்கள் எல்லாம் சொல்லி வைத்தாற் போல் நேரடியாக சர்ச்சைக்குரிய பக்கங்களில் வந்து இறங்குகிறார்கள்? இந்தக் கருத்துக்களை நான் தான் சொல்லியிருந்தேன். இதை எனது பெயரிட்டே தாங்கள் சொல்லியிருக்கலாம். என்னைத் தவிர இங்கு வேறு யாரு கேள்வி எழுப்பியுள்ளார்கள்? அப்படி கும்பலாக யாராவது வந்திருந்தால் அதைப் பற்றி அறிய ஆவலாய் இருக்கின்றேன். ஒரு சில பக்கங்களல்ல ஒரே ஒரு பக்கத்தில் தான் நான் கருத்திட்டேன். அதுவும் ராஜஸ்தான் என்பதை இராசச்சுத்தான் என படுகேவலமான செயற்கைத்தனமான ஒரு மொழியாக்கம் செய்யப்பட்டதை கண்டு மனம் பொறுக்காமலேயே அங்கு விவாதித்தேன். அங்கு ஏற்கனவே பலரும் விவாதித்திருந்த போதும் ஒரு தனிப்பட்ட ஓரிருவர் பரிந்துரைத்த இராசச்சுத்தான் என்ற சொல்லிற்கு மாற்றம் செய்திருந்தமையை நான் அறிந்தேன். அதனையே கேள்விக் கேட்டேன். அதன் பின் பலரும் தமது கருத்தை முன்வைத்து இராசத்தான் என மாற்றியிருக்கின்றனர். ஆனால், எனது கேள்வியை விரும்பாத சிலர் என்னை தடை செய்ததோடு மட்டுமின்றி, வீண் விவாதங்களையும் கொண்டு சென்றனர். அதன் பின்னரே தங்களது தலையீடும் வந்தது. ஆன போதும் தாங்கள் தற்போது வழங்கிய பதிலில் கூட தெளிவில்லாமலேயே இருப்பதோடு, மறைமுகமாக கேள்வி கேட்ட என்னை எதோ ஒரு பெருங்கும்பல் போலவும், வெளியில் பரப்புரை செய்வது போலவும் சொல்வது வருத்தமளிக்கின்றது. இதற்கு முன் இங்கு என்ன அரசியல் இருந்தது என்பதை நானறியேன். அதனால் தங்களின் பதில் என்னை மட்டுமே விரல் சுட்டுவது போன்று எனக்குப் படுகின்றது. ஒருவேளை நான் தான் தவறாக புரிந்து கொண்டேனா தெரியவில்லை. விளங்கிக் கொள்ள காலம் எடுக்கும் என நினைக்கின்றேன். ஆனால் கிரந்தம் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வருவதை நான் ஆதரிக்கின்றேன். இனி காத்திருப்பதை தவிர வேறேதும் சொல்வதற்கில்லை. --Winnan Tirunallur (பேச்சு) 10:42, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]


கூகுளில் ராஜஸ்தான் என்று தேடினாலும் இராசத்தான் பக்கம் வரும். என்பது எந்தளவிற்கு நம்பகமான பதில் என்பதை நானறியேன். விக்கிபீடியாவில் பிரதான தலைப்பு எதுவோ அது தான் தேடற்பொறிகளில் முதன்மை பெறும். ராஜஸ்தான் என கூகிளில் தேடும் போது இராசத்தான் என்ற பக்கம் முதல் பக்கத்தில் வரவில்லை.
பொதுத் தமிழ் என ஒரு சில ஊடகங்கள் ஏற்படுத்திய கட்டை உடைக்க வேண்டும் என்பதில் எனக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் அதிகம் கவலைப்படுவது பள்ளி மாணவர்களைப் பற்றியது. பள்ளி பாடநூல்களில் பயன்படுத்தப்படும் சொற்களை திரிக்காதீர்கள், மாற்றாதீர்கள் என்பது தான். விக்கிபீடியாவை பொழுதுபோக்காக வாசிப்பவர்கள் மிக குறைவே. பெருமளவிலானோர் மாணவர்களே விக்கிபீடியாவை பயன்படுத்துகின்றனர். அதுவும் தமிழ் பள்ளி மாணவர்கள் தான் தமிழ் விக்கிபீடியாவை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு இங்குள்ள சொற்பிரயோகங்கள் மிகவும் அந்நியமாகவும், புரியாதவைகளாகவும் இருக்கின்றன என்பது தான் எனது முதல் கவலை.
இடப்பெயர்களைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஊடகமும் ஒவ்வொரு நடைமுறையைக் கொண்டிருக்கின்ற போது அதில் எதோ ஒன்றை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அது ஏற்கத் தக்கதாய், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும், மகாராஷ்ட்ரா, மஹாராஷ்டிரா என்பதை விட மராட்டியம் என்பது சரியாகப் படுகின்றது. மராட்டியம் என்றாலே மகராஷ்ட்ரா என்பதை பள்ளி மாணவர்கள் அறிகின்றார்கள். ஆனால் ராஜஸ்தான் என்பதை அவர்கள் இராசச்சுத்தான் என அறிவதில்லை. இராசத்தான் என்றால் கூட பரவாயில்லை. ஜெர்மனி என்பதை செருமனி என்றால் கூட ஏற்கலாம், ஆனால் இடாய்ச்சுலாந்து என மொழிமாற்றம் செய்வது அபத்தமாகப் படவில்லையா? இதைத் தான் நான் கேள்வி கேட்கின்றேன். ஹரியானாவை அரியானா என்று சொன்னாலும் பலரும் அறிவார்கள், ஜப்பனை யப்பான் என்றாலும் அறிவார்கள் ஆனால் இடாய்ச்சுலாந்து போன்றவைகளை எத்தனை பேர் அறிவர்.
விக்கிப்பீடியா என்னும் இயக்கமே பல விசயங்களைக் கட்டுடைக்கும் இயக்கம் என்றாலும் கூட அதற்கும் சில நியதிகள் பின்பற்றப்படுகின்றன. ஆங்கில விக்கிபீடியாவில் போய் இந்தியா என்பதை பாரத் என மாற்ற முடியாது, கட்டுடைக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு அவ்வாறு யாரும் செய்ய முற்பட முடியாது. சில நியதிகள் அங்கும் பின்பற்றப் படுகின்றன. புரட்சி செய்வதற்கான தளமாக நான் விக்கிபீடியாவை பார்க்கவில்லை, நான் இதுவரை வாசித்த அவர்களின் நியதிகளையும் நியமங்களையும் விதிகளையும் வைத்துப் பார்க்கின்ற போது ஓரளவு சுதந்திரமும், ஒருங்கிணைந்த அறிவுத் தொக்குப்புமே அவர்களின் பிரதான கொள்கையாக உள்ளது. மற்ற மொழி விக்கிபீடியாவில் புதியக் கலைச்சொற்களை உருவாக்கிப் பார்க்கும் ஆய்வுக் கூடமாக விக்கிபீடியா செயல்படவில்லை. அது ஏற்கனவே புழங்கும் சொற்களை வைத்துக் கொண்டு அறிவுக்கண்ணாடியாகவே பிரதிபலிக்கின்றது. ஆனால் தமிழ் விக்கிபீடியாவில் பலரும் தமது மொழியாராய்ச்சிகளையே மேற்கொண்டு வருகின்றனர் என்பது வருத்தம் தருகின்றது. அது எல்லை கடந்து தனிநபருக்கான விடயமாக மாறும் போது அதை கேள்விக் கேட்கவும் மாற்றக் கோருவதிலும் தவறில்லையே. --Winnan Tirunallur (பேச்சு) 10:55, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தனித்தமிழ் கட்டாயமும் வேண்டாம், கிரந்த பேரபிமானமும் வேண்டாம் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு பொதுநடைமுறையை பின்பற்றுவதே சிறப்பானது. துப்புரவு செய்கின்றேன் என பல இடங்களில் வேண்டுமென்றெ தனித்தமிழ் திணிப்புக்கள் நிகழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. அறிவியல் சார்ந்த கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு புரியா வண்ணம் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதால் யாருக்கு லாபம் என எனக்குத் தெரியவில்லை. வாசிப்பவர்களை கருத்தில் கொள்ளாமல் எழுதினால், யாருக்காக கட்டுரைகள் எழுதப்படுகின்றன என்ற கேள்வி எழுகின்றது. வாசிப்பவர்களுக்கு இதைத் தான் கொடுப்பேன் என தனித்தமிழ் நடைமுறையாளர்களும் கூட கங்கணம் கட்ட முடியாது, கிரந்த பிரியர்களும் கூட மல்லுக்கு நிற்க முடியாது. வாசிப்பவர்களுக்கு எது புரியுமோ அதையே வழங்குவது நல்லது. புரியும் சொல் தமிழ்ச் சொல்லாக இருந்தால் அப்படித் தான் இருக்க வேண்டும் அது நல்லது. அப்படி தமிழ்ச் சொல்லில்லா பட்சத்தில் கிரந்தம் கலந்த தமிழ் நடை என்பதிலும் தவறில்லை. ஆஸ்திரேலியா என்றால் பலருக்கும் புரியும், நியுசீலாந்து என்றாலும் புரியும், ஆனால் இடாய்ச்சுலாந்து என்றால் யாருக்கு புரியும் இங்கு தான் பிசகுகின்றது?! --Winnan Tirunallur (பேச்சு) 11:04, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

விண்ணன் தொகு

எங்கு கிரந்தம் பயன்படுத்தலாம் -

சிறப்பு பெயர்களில் கிரந்தம் தவிர்ப்பது கூடுமானவரை இயலாத காரியம்.

1. அந்நிய மொழியில் அமைந்திருக்கும் சிறப்பு பெயர்களுக்கு ஸ்டீவன், ரோஜர், ஐஸ்வர்யா

2. அந்நிய மொழியில் அமைந்திருக்கும் சிறப்பு இடப் பெயர்களுக்கு ஆஸ்திரேலியா, ஜப்பான், குஜராத், ராஜஸ்தான், பாகிஸ்தான், கிருஷ்ணகிரி

3. தமிழில் ஏற்கனவே புழங்கி வரும் அந்நிய மொழிப் பெயர்களுக்கு ராஜேஷ், விக்கினேஷ், ஆயிஷா, ஹக்கீம்

4. பன்னாட்டளவில் பொதுப்பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அறிவியல் சொற்களுக்கு ஹைட்ரஜன், ஆக்சிஜன், லின்னேயஸ், பாஸ்கல்

5. பிரபலமங்களின் சிறப்பு பெயர்கள் எவ்வாறு அறியப்பட்டனவோ அவ்வாறே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், என்.டி.ஆர், மோகன்தாஸ் காந்தி, ஸ்மிதா

6. தொழில்நிறுவனங்களின் சிறப்பு பெயர்களுக்கு பேஸ்புக், ஹோண்டா, ஹியுண்டாய், வோக்ஸ்வாகன் போன்றவைகளில்.

7. வரலாற்று ஆவணமாக கருதப்படும் சில நூல்களின், இதழிகளின் தலைப்புக்கள் அது எவ்வாறு அச்சிடப்பட்டனவோ அவ்வாறே பயன்படுத்துவது பூமிசாஸ்திரம், மனுஸ்மிருதி,

8. மேற்கோள்கள் காட்டும் போது அவை எவ்வாறு ஆசிரியரால் எழுதப்பட்டிருந்தனவோ அவ்வாறே பயன்படுத்துவது.

9. அந்நிய சொல்லிற்கு ஈடான தமிழ் சொல் இல்லை என்றால்

10. அந்நிய சொல்லிற்கு ஈடான தமிழ் சொல் ஒன்றிருந்தும் அது புழக்கத்தில் இல்லை என்றால் ஜமீந்தார், ஜட்டி

எங்கு கிரந்தம் பயன்படுத்த வேண்டியதில்லை

1. அந்நிய சொல்லிற்கு ஈடான தமிழ் சொல் புழக்கத்தில் இருந்தால் ஜாமீன் - பிணை, தாஸ்தாவேஜூ - ஆவணம்

2. அந்நிய சொல்லில் வழங்கப்படும் இடப் பெயர்களுக்கு இணையான தமிழ் பெயர்கள் இருந்தால் ஸ்ரீரங்கம் - திருவரங்கம், வேதாரண்யம் - திருமறைக்காடு

3. அந்நிய வினைச்சொற்கள் போன் பண்ணி - தொலைப்பேசியில் அழைத்து, வெயிட் பண்ணி - காத்திருந்து

4. அந்நிய ஒலிப்புக்கு நிகராக சொற்சேர்கையில் உருவாகும் ஒலியன்களுக்கு மஹேந்திர - மகேந்திர, மான்ஜி - மாஞ்சி, மோஹன் - மோகன்,

5. பொது இடப்பெயர்களை தமிழாக்கம் செய்யலாம் - பாராளுமன்றம், உணவகம்

6. பொது பொருட்பெயர்களை தமிழாக்கம் செய்யலாம் - கம்ப்யூட்டர் - கணனி, ஸ்டெத்தோஸ்கோப் - இதயத்துடிப்பு மானி

--Winnan Tirunallur (பேச்சு) 10:28, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பாஹிம் தொகு

இங்கு ஏற்புடையதாகத் தோன்றும் பின்வரும் உரைப் பகுதி அ. க. சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்புக் கலை எனும் நூலிலிருந்து பெறப்பட்டது.

எமது முன்னோர் எச்சமயத்தைச் சேர்ந்தவராயினும் தம் தமிழ்ப்பற்றை விடவில்லை. திசைச் சொற்கள் பற்றிய இலக்கண விதியை அவர்கள் கைவிடவில்லை. அவர்கள் எமக்கு அள்ளித்தந்தது, தித்திக்கத் தேன் ஊறும் கனிரசப் பாயசம். ஆனால் நமது இன்றைய கலையுணவென்ன? கழிவு மரக்கறிகளைப் பதம் செய்யாது காய்ச்சி “சாம்பார்” என்பதற்குத் தானும் யோக்கியம் இல்லாத அதற்குப்பாயசம் என்று பெயர் கொடுத்து எம்மையே ஏமாற்றிக்கொள்ளுகிறோம். அவ்வளவுடனும் தான் நாம் திருப்திப்படாது எம்முன்னோர் செய்தனவற்றிலும் திருத்தப்புகுந்து இடர்ப்படுகிறோம். முன்பெல்லாம் Police என்பதற்கு பொலிசார், பொலிசுக்கார்ரன் என்றார்கள். நாமோ இப்போது பொலீஸ் என்று நாக்கு நுனியை மோவாய்க் கட்டைக்குள் அழுத்தி “ஸ்” விடுகிறோம். Advocate என்பதற்கு அப்புக்காத்து என்று தமிழாகச் சொன்னார்கள். நாமோ இப்போது “அட்வகேட்” என்று சொல்லி எமக்கும் பொதுசனங்களுக்குமிடையே ஒரு தடித்த இரும்புத்திரையை இட்டு விடுகிறோம். நாம் பல கருமங்களில் ஆங்கிலேயரைப் பார்த்துக் கண்டபாவனையிற்கொண்டை முடிக்கின்றோம். ஆனால் இக்கருமத்தில் அவர்கள் கையாளும் நல்ல முறையினைப் பின்பற்றத் தயங்குகிறோம். “சுருட்டு”, “கட்டுமரம்”, “சட்டி”, “நீர்கொழும்பு”, “அணைக்கட்டு”, “இஞ்சிவேர்”, “வெற்றிலை”, “மிளகு தண்ணீர்” என்பன தமிழ்ச் சொற்கள். இவற்றை ஆங்கிலன் தனது மொழியில் Churuddu, Kaddumaram, Chaddy, Neercolumbu, Anaikaddu, Inchiver, Vettilai, Milagu Thanneer என்கிறானா? தன்னிடம் இல்லாது தனக்கு வேண்டிய இவற்றை எடுத்துக்கொண்ட அவன் தனது மொழிமரபில் Cheroot, Catamaran, Chatty, Negombo, Anicut, Gingerfer, Betel, Mulligatawny என்கிறான்.
இப்படித்தான் மற்ற மொழியாளரும் செய்ய நாம் மாத்திரம் இன்னும் அடிமைப்புத்தி தடித்திருக்கிறோம்.
... இவ்வாறாகப் புதுக்கருத்துக்கள் பொலிந்துள்ள Commission, Nurse, Hospital, Bus, Fiscal, Warrant போன்ற சொற்களைச் சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் முறையில் கொமிசன், நேசு, ஆசுப்பத்திரி, வசு, பிசுக்கால், விறாந்து என்று திசைச் சொற்களாக்கி தமிழுடன் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் செய்வது பிழையல்ல என்பதே அறிஞரின் அபிப்பிராயம். “கொமிஷன்”, “நர்ஸ்” என்று கூறுவதும் மரபாகாது. இதுபற்றி இன்னொன்றையும் இச்சந்தர்ப்பத்திற் கூறுவது பொருத்தமாகும். அது “ர்” உச்சரிப்புறுத்தல் பற்றியது. ஆங்கிலர் இந்தியாவைக் கைப்பற்றிய அந்தக்காலத்திலே அங்கு தாபிக்கப்பட்ட ஆங்கிலக் கலாசாலைகளுக்கு ஆசிரியர்களாக வந்தவர்களில் அனேகர் இசுக்கோதுலாந்துவாசிகள். அவர்களின் உச்சரிப்பு ஆங்கிலரின் உச்சரிப்புக்கு வித்தியாசமானது. ஆங்கிலப்பதங்களுக்கு இடையில் வரும் r எழுத்துக்களை அவர்கள் உறுத்தி உச்சரிப்பர். Morning (ஆங்கிலரின் சரியான உச்சரிப்பு “மோணிங்”) என்பதற்கு “மோர்ணிங்” என்பர். இப்படியாக r தடித்த இதுக்கோதீய ஆசிரியரிடம் படித்த இந்தியத் தமிழர் சிலர் தம் பத்திரிகைகளிலும் நூல்களிலும் “ர்” ஐப் புகுத்திவிட இலங்கையில் உள்ள எம்மவர் சிலரும் அதனைப் பின்பற்றுகிறார்கள். உச்சரிப்புக்கு முரணான, தமிழ் மரபுக்குப் பொருந்தாத “ர்” உபயோகத்தை திசைமொழிச் சேர்ப்பில் இருந்து நாம் விலக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
... என்றும் மாறா இளமைப்பருவமுடையவள் எங்கள் செந்தமிழ்த்தாய். அவள் எழிலரசி. அது இயற்கையாகவே அவளுக்கு அமைந்துள்ளது. இயற்கை எழிலுடன் பொலியும் அவளுக்குப் பிறமொழிப்பூண்கள் இன்னும் பேரழகு கொடுக்கும்.
ஆனால், மொழிமரபுக்கொவ்வாத பிறமொழிச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது. இயற்கையழகு வாய்ந்த ஒரு அழகிக்கு அலங்காரம் செய்யும் நிலையிற் பிறமொழிக்கலப்பு இருத்தல் வேண்டும். அலங்காரம் செய்வது என்று சொல்லி அவளின் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரணங்களைத் திணித்துவிட்டால் அவளது எழில் உருவம் மறைய அவள் ஒரு “வெகுளி”யாகி விடுவாள்.
... ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ என்னும் கிரந்த எழுத்துக்களும் ௵, ஸ்ரீ முதலிய குறியீடுகளும் தமிழ் இலக்கிலங்களில் இப்போது சில காலமாகப் பெருமளவிற் கையாளப்பட்டுவருகின்றன. இவ்வெழுத்துக்கள் எமது இலக்கிய வளர்ச்சிக்கு இன்றியமையாதன தாமா? இவா இல்லாமல் தமிழ் இயங்க முடியாதா? அவையின்றி நாம் உலகக் கலையுலகிற் சீவிக்க முடியாதா? என்னும் இக்கேள்விகளை ஒரு சாரார் கேட்கின்றனர். இந்தக் கேள்விகளையும் மொழிபெயர்ப்பாளர் சிந்தித்தல் வேண்டும்.
எழுத்துக் குறைவு எந்த மொழிக்கும் உண்டு தான். அதற்காக மற்ற மொழி எழுத்துக்களைக் கடன் வாங்க வேண்டுமா? ஆங்கிலத்திலே எமது ங், ஞ், ழ் முதலியனவற்றுக்கு எழுத்து இல்லை. இதனால் ஆங்கிலர் எங்களுக்குரிய இந்த எழுத்துக்களைக் கடன் வாங்குகிறார்களா? “ஞானப்பிரகாசம்” என்ற சொல்லை ஆங்கிலர் எழுதும்போது அதில் வரும் “ஞ்” உச்சரிப்பின் பொருட்டு “ஞanapragasam” என்று அவர்கள் எழுதுவதுண்டா? அப்படியான ஒரு உச்சரிப்புத் தேவையான இடங்களில் அவர்கள் தங்களுக்குரிய எழுத்துக்களுடனேயே சரிப்படுத்திவிடுகிறார்கள். ஆகவே, கிரந்த எழுத்துக்களைத் தமிழ் இலக்கியங்களில் இருந்து முற்றாக நீக்கிவிட வேண்டும் என்று நாம் மேலே காட்டிய அறிஞரில் ஒரு சாரார் வாதிக்கிறார்கள்.
முன் இருந்த நிலைமை வேறு, இன்றிருக்கும் நிலை வேறு. மொழிபெயர்க்கப்பட முடியாத பல வேற்றுமொழிச் சொற்கள் இப்போது தமிழில் இடம்பெற்று விட்டன. உதாரணமாக, தமிழ் பேசும் இனத்தவராகிய நமது இசிலாமியச் சகோதரர்கள் பல அரபுச் சொற்களைத் தமிழ் இலக்கியங்களிற் சேர்த்திருக்கிறார்கள். இச்சொற்களைத் தனித் தமிழ் எழுத்துக்களில் எழுதினால் சரியான உச்சரிப்புத் தோன்றாது. “அல்ஹாஜ்” என்ற சொல்லை தமிழ் மரபுப்படி கிரந்த எழுத்துக்கள் இன்றி எழுதுவோமானால் “அலுகாசி” அல்லது “அலகாசி” என்று இன்னோரன்னவிதமாக வரும். அது விபரீதத்திற் கொண்டுபோய்விட்டுவிடும். “ஞ்” என்ற உச்சரிப்பையும் “ழ்” என்ற உச்சரிப்பையும் ஆங்கிலத்திற் பெறுவதற்கு முறையே G ஐயும் N ஐயும், Z ஐயும் H ஐயும் இணைக்கும் தன்மையில் எமது எழுத்துக்களை வேற்றுமொழி உச்சரிப்பின் பொருட்டு இணைக்கும் ஒரு ஒழுங்கு முறை எமக்கு இப்போது இல்லை. அப்படியான ஒரு ஒழுங்குமுறையினை நாம் வகுத்துக்கொள்ளும்வரையில் கிரந்த எழுத்துக்களை அறவே புறக்கணிக்க முடியாது என்று சாதிப்பர் இன்னொரு சாரார்.
மேலே காட்டிய இருவித கொள்கையுடையார் கூற்றில் எது கொள்ளத்தக்கது, எது சரி, எது பிழை என்று ஆராய்ச்சி செய்து ஒரு முடிவு காண்பது அரிது. எக்கருமத்திலும் தீவிரப்போக்கு விரும்பத்தக்கதல்ல. பிறமொழிச் சொற்களை நாம் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட, அச்சொற்களைத் தனித் தமிழ் எழுத்துக்களில் எழுதின் அவற்றின் கருத்து தெளிவாக இராது என்று நிச்சயமாகக் காணப்படுமிடத்து கிரந்த எழுத்துக்களை உபயோகித்துக் கொள்ளலாம் என்பதே தக்க அறிஞர் கண்ட முடிபு. ஆனால் கண்டபடி கிரந்த எழுத்துக்களை உபயோகிப்பது விரும்பத்தக்கதல்ல. தவிர்க்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் யாவற்றிலும் அவற்றைத் தவிர்க்கவே வேண்டும்.
--பாஹிம் (பேச்சு) 14:26, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
பொலிஸ், நர்ஸ், ரேடியோ என தமிழர் வாழ்விற்குள் பல அந்நிய மொழிச் சொற்கள் புகுந்த போதெல்லாம் தமிழர்களாகிய நாம் காவல்துரை, செவிலியர், வானொலி என நல்லதமிழ் சொற்களை உருவாக்கினோம். அதனையே தமிழ்நாடு அதன் பாடநூல்களிலும், அரசாணைகளிலும், பல்வேறு தமிழர்கள் தமது செய்தித்தாள்களிலும், புத்தகங்களிலும் பயன்படுத்தினர். இன்று ஒரு சில ஊடகங்கள் வேண்டுமென்றே பொலிஸ், நர்ஸ், ரேடியோ, பகிஷ்கரிப்பு, என அந்நிய சொற்களை பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் மக்கள் பரவலாக காவல்துறை, செவிலியர், வானொலி, புறக்கணிப்பு என நல்ல தமிழை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றேன். பொதுப் பெயர்களை தமிழாக்குவதில் நமக்கு எவ்வித சிரமமுமில்லை. அதே சமயம் தமிழில் பல வடமொழிச் சொற்களும், திசை மொழிச் சொற்களும் நன்கு கலந்துவிட்டன எடுத்துக்காட்டுக்கு சிரமம் என்ற சொல்லே வடமொழிச் சொல் தான், அவற்றை தமிழ் எழுத்துக் கொண்டு எழுதுவதில் நமக்கு எவ்வித இடர்பாடும் வரவில்லை. கடன்வாங்கிய சொற்களை தமிழ் எழுத்தில் எழுதுவதிலோ, தமிழ் எழுத்திற்கு புகாத சொற்களை கைவிட்டு நல்ல தமிழில் சொற்களை படைப்பதிலோ எவ்வித தயக்கமும் கிடையாது. ஆனால் இங்கு சிக்கல் சிறப்பு பெயர்களை தமிழில் எவ்வாறு கையாள்வது என்பது தான். லங்கா என்பதை இலங்கை என தமிழ்படுத்தினோம், கங்கா என்பதை கங்கை என்றாக்கினோம், யமுனா என்பதை யமுனை என்றாக்கினோம் கவனிக்க இயமுனை என்றால் நமக்கு புரியாது, யமுனை என்றால் புரியும் தானே. இங்கு பிரச்சனை தமிழ்ப்படுத்தல்களில் கூட கிடையாது பிரச்சனை புரிதல்களில். ஆனால் ஆஸ்திரேலியா என்பதை ஆத்திரேலியா என்றால் புரிதலில் இடர்பாடு ஏற்படுகின்றது.
இங்கு கருத்தில் மோதிக் கொள்ளும் நாம் யாருமே தமிழறிஞர்கள் கிடையாது, அதற்கான தகைமையும் நம்மிடமில்லை. இன்றைய நவீனத் தமிழில் இருவேறு நடைமுறை கையாளப்படுகின்றது ஒன்று தனித்தமிழ் நடை இதில் கிரந்த எழுத்துக்களை யாரும் பயன்படுத்துவதேயில்லை. மற்றொரு நடை ஜ, ஸ, ஷ, ஹ போன்ற கிரந்த எழுத்துக்களை சிறப்பு பெயர்களுக்கு மட்டும் பயன்படுத்துவோர். நல்லவேளையாக முற்றான கிரந்தப் பயன்பாட்டாளர்கள் இன்று நம்மிடம் இல்லை அது ஒரு காலத்தில் மணிப்பிரவாளமாக இருந்தது இன்று அது மலையாளமாக மாறிவிட்டது. தமிழ் சமூகத்தில் மேற்கூறிய முதல் இருபிரிவினரில் ஓரளவு கிரந்தம் கலந்து தேவையான இடங்களில் எழுதிக் கொள்வோரே மிக அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு புரியும் வண்ணமாகவே கட்டுரைகளை நாம் எழுத வேண்டும். அப்போது தான் அவர்கள் விக்கிபீடியாவிற்கு வந்து வாசிப்பார்கள். அதனூடாக இடையிடையே தனித்தமிழ் சொற்களை நாம் அவர்களுக்கு பரிச்சயப்படுத்த வேண்டும் இது தான் எனது விருப்பமாகப் படுகின்றது.
இன்று தமிழ் விக்கிபீடியாவை எவ்வளவு பேர் பார்வையிடுகின்றனர், அதில் எந்த வயதுக்காரர்கள் அடங்கியிருக்கின்றனர் என்ற விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் என்னளவில் எனக்குத் தெரிந்தவர்கள் மட்டில், பள்ளி மாணவர்களோடு புழங்கியதில் தமிழ் விக்கிபீடியாவை விட ஆங்கில விக்கிபீடியாவை பயன்படுத்துவது தெளிவாக இருப்பதாக கூறிய போது அதிர்ச்சியடைந்தேன். ஏன் என்று வினவிய போது தமிழ் விக்கிபீடியாவில் தகவல்கள் தெளிவின்மை, பயன்படுத்தப்படும் சொற்கள் புரியாமை என பல காரணங்களை அறிய நேர்ந்தது. இதை போக்க வேண்டும், வெகுமக்கள் ஊடகங்கள் ஒரு போக்கை கடைபிடிக்கின்றன என்பதை நானறிவேன். ஆனால் அவற்றிலும் பல மாறுதல்கள் அண்மையக் காலமாக நிகழத் தொடங்கிவிட்டன. காரணம், புதிய எழுத்தாளர்களின் வரவு. சென்ற தலைமுறையினரை விட இவர்கள் அதிகம் செந்தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதுகின்றேன். அவர்கள் யாவரும் தாங்கள் குற்றம்சாட்டுகின்ற இதே தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களிலிருந்து கற்று வந்தவர்கள் தான். பலரும் சென்னையிலிருந்தே புறப்பட்டவர்களும் கூட. எதோ சென்னையில் மட்டுந்தான் ஆங்கிலம் கலந்து பேசுவதாக சொல்லப்படும் தொடர் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை. கோவை முதல் தஞ்சை வரை, ஓசூர் முதல் குமரி வரை, இலங்கை, மலேசியா வாழ் தமிழர்கள் கூட ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனர். இது உலகளாவிய சிக்கல். தமிழ் மட்டுமில்லை கன்னடம், மலையாளம், வங்காள மொழிகள் என ஆங்கிலத்தின் தாக்கம் மிக அதிகம். ஆனால் தமிழர்கள் தமது செந்தமிழையும், கொடுந்தமிழையும் வளப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றனர். ஆண்டுதோறும் புதிய கலைச்சொற்கள் இயல்பாகவே உருவாக்கப்பட்டு வருகின்றன. பேஸ்புக் என்பதை முகநூல் எனவும், டுவிட்டர் என்பதை கீச்சு எனவும், டைம்லைன் என்பதை சந்து எனவும், ஸ்டாட்டஸ் என்பதை நிலைத்தகவல் எனவும் மாற்றி பயன்படுத்தி தமிழகராதிக்குள் புகுத்தியவர்களில் பலரும் இதே அரைகுறை தமிழ்நாட்டு பள்ளிகளில் படித்த இதே அரைகுறை ஆங்கிலம் கலந்து பேசுகின்ற சென்னைத் தமிழர்கள் உட்பட பலரும் தான் என்பதை மறக்கக் கூடாது.
இங்கு இவை எல்லாவற்றையும் விட தமிழ் விக்கிபீடியாவில் நான் கண்ட சிக்கல் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் தொடர்ந்து பல கட்டுரைகளில் ஸ் வருமிடத்தில் எல்லாம் சு போட்டு எழுவது இது தான் சிக்கலே. யகரம் முன்னில் ரகரம் முன்னில் லகரம் முன்னில் இகரமிட்டும் உகரமிட்டும் எழுவது இலக்கணப்படி என்பதை அறிவோம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஏற்கனவே தமிழ் சமூகத்தில் பயன்பட்ட நல்ல தமிழ் சொற்களை பெயர்களுக்கு இடுவதில் ( ஜப்பான் - யப்பான், ஜோன் - யோவான், ஜாக்கப் - யாக்கோபு ) நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எவ்வித அடிப்படையில்லாமல் புதிய இலக்கணக் கொள்கைகளை எங்கிருந்து வகுக்கின்றார்கள் இவர்கள்? அதற்கானே மேற்கோள்கள் எங்கே என்பது தான் எனது வினா? ராஜஸ்தான் என்பதை இராசத்தான் என்பதில் இடர்பாடு இல்லை, ஆனால் இராசச்சுத்தான் என மாற்ற எங்கிருந்து வந்தது அதிகாரம். அதை ஏன் இங்குள்ள நிர்வாகிகள் யாரும் எதிர்கேள்வி கேட்கவில்லை. இன்று இதை நான் கேட்டதற்கு நிர்வாகி தரத்திலுள்ளவர்கள் திட்டமிட்ட விசமி எனவும், உள்ளரசியல் என்பது போல மழுப்பலான ஒரு பதிலை தருவதேனோ? அப்படி என்றால், மறைகளை வேதியர் மட்டுமே ஓத வேண்டும் என்பது போல தமிழ் விக்கிபீடியாவை ஒருசிலர் மட்டுமே நிர்வகிக்கவும், கட்டுபடுத்தவும் வேண்டும் என்ற எழுதப்படாத புரிதல்கள் ஏற்படுத்தப்பட்டு விட்டனவா?!
தமிழ் எழுத்து நடையில் பல்வேறு நடைமுறைகள் காணப்படுகின்றன. பொதுவில் இந்த நடைமுறைகளை எல்லாம் கலந்தே மக்கள் பயன்படுத்துகின்றனர். மக்களிடையே தனித்தமிழ் நடை என தனியாகவோ, கலப்பு நடை என தனியாகவோ ஏதுமில்லை. எல்லாம் கலந்த போக்கில் தான் ஒரு பொதுநடையை நோக்கிப் போகின்றது. அவர்களிடையே கிரந்த்தைத் தான் பயன்படுத்துங்கள் என்றோ, பயன்படுத்தவே கூடாது என்றோ சொல்ல முடியாது. அவ்வளவு ஏன் நானே ஹகரம் என்பதை பயன்படுத்துவே இல்லை, ஆனால் ஜகரம் பயனபடுத்துகின்றேன். ஸ் என்ற எழுத்தையும் பயன்படுத்துகின்றேன் ஏனைய ஸகர எழுத்துக்களுக்கு சகரத்தையே பாவிக்கின்றேன். இது என் தனிப்பட்ட நடைமுறை. ஆனால் இதை பயன்படுத்தவேக் கூடாது என எனக்கு கடிவாளம் போட யாரும் கிடையாது. அத்தகைய அதிகாரம் யாருக்குமே கொடுக்கப்படவில்லை. இங்கு நிர்வாகிகள் பலரும் மறைமுகமாக சொல்ல விழைவது கிரந்தத்தை கைவிட்டால் தொடரலாம், இல்லை என்றால் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தடைசெய்யப்படலாம் என்பதாகவே எனக்குப் படுகின்றது. அவ்வாறான கருத்துக்களை நயமாகவே மேற்பத்திகளில் எனக்களித்திருக்கின்றனர். "reading between lines" என்பதை நானும் அறிவேன். இது தான் உங்களின் தெளிவான பதிலா? அப்படி என்றால் ஒன்று இதிலிருந்து வெளியேற வேண்டி வரும் அல்லது வாய்பொத்தி மௌனியாக எங்கோ ஒரு மூலையில் எதோ ஒரு கட்டுரையை தூர்வாறிக் கொண்டு முதன்மையான கட்டுரைகளில் கைவைக்காமல் காலத்தை ஓட்ட வேண்டும் என்பதாகவே சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.
இதனால் இழப்பு எனக்கில்லை, ஆனால் நாளை எனது மாணவர்களை தமிழ் விக்கிபீடியாவில் பங்களியுங்கள் என எப்படி என்னால் ஊக்குவிக்க முடியும்? அவர்களுக்கும் இதே பிரச்சனைகள் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு? அவர்களும் தமக்குத் தெரிந்த தமிழ் நடைமுறையில் பங்களிக்க வரும் போது அங்கேயும் பல தடைகற்கள் போட்டுபட்டு அந்த நடைமுறை தவறு, தனித்தமிழ் நடைமுறை மட்டுமே இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதான மறைமுக அழுத்தங்கள் கொடுக்கப்படுமா இல்லையா? இதனால் யாருக்கு இழப்பு என்பதை சிந்தித்துப் பாருங்கள். தமிழ் விக்கிபீடியாவில் பல பேரறிஞர்கள் இருக்கக் கூடும், அவர்களுக்கு என்னைவிட நல்ல தமிழ் இலக்கண அறிவும் இருக்கக் கூடும். ஆனால் சாமன்யர்களுக்கு பயன்படாத எந்த இலக்கணங்களையும் வேதங்களையும் வைத்துக் கொண்டு என்ன செய்துவிடப் போகின்றோமோ? சத்தியமாக எனக்குப் புரியவில்லை, புலப்படவில்லை. இத்தனை ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் கட்டுரைகளைக் கூட தமிழ் தாண்ட முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால் இதுவும் ஒருசில காரணங்களே. நம்மை விட இணைய வசதிகளில் குறைந்த, பேசுவோரது எண்ணிக்கை குறைந்த மொழிகள் எல்லாம் லட்சத்தைக் கடந்து மில்லியனைக் கடந்து போகும் போது நாம் சுணங்கிவிட்டமைக்கு காரணம் என்ன? சாமான்யர்களையும் அவர்களது மொழியையும் உள்வாங்காமல் போனதே. சாமான்யர்கள் பங்களிக்க வரும் போதெல்லாம் தேவயைற்ற தடைகற்களைப் போட்டு பக்கச்சார்புள்ளவர்களாக சித்தரித்து சிதறடிக்கப்படுவதால் தான் என நான் நினைக்கின்றேன்.
எப்படியும் இந்தக் கருத்துக்களை எல்லாம் முன் வைத்த என்னை இன்றோ அல்லது என்றோ ஒரு நாள் கறைவைத்து தடைப் போடுவீர்கள் என்பதை நான் உணர்கின்றேன். அதனால், இயன்றால் என்னாலானா பங்களிப்பை எங்கோ ஒரு மூலையில் செய்யப் பார்க்கின்றேன். இல்லை என்றால் வாழ்க்கையில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் பங்களிக்க வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றது அங்கு அதனைச் செய்துவிட்டு போகின்றேன். எனக்கு எவ்வித இழப்போ மனவருத்தமோ கிடையாது. ஆங்கில விக்கிபீடியாவில் பங்களிக்க வேண்டிய கட்டுரைகள் பல உள்ளன, அங்குள்ள மொழிச் சுதந்திரம் அதற்கான வாய்ப்பையும் எனக்குத் தருகின்றது அங்கு பங்களித்துவிட்டு போகின்றேன். எனக்கு எனது கருத்துக்களைத் தர வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றிகள்.--Winnan Tirunallur (பேச்சு) 18:43, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நீச்சல்காரன் தொகு

  1. பெருவாரியான கலைச்செல்வங்கள் தமிழுக்குக் கொண்டுவரும் முன்னரே இத்தகைய இறுக்கமான கொள்கைகள் தேவையா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
  2. இச்சிக்கலில் வெளியேறினார்களா வெளியேற்றப்பட்டார்கள் என்ற குழப்பம் ஒருபுறமிருந்தாலும் தன்னாட்சியான நடைக்காக வெளியேறியவர்களை விட பொதுத்தமிழ் நடைக்கு வெளியேறியவர்களின் எண்ணிக்கை வருத்தமளிக்கின்றன.
  3. கிரந்தம் தவிர்ப்பதன்மூலம் ஏற்படும் நுட்பரீதியான இடர்களும், பொதுவாழ்வில் ஏற்படும் நடைமுறை இடர்களும் பற்றிவிவாதிக்க இது களமில்லை. ஆனால் அடையாளப் பெயர்தவிர்ப்பு, மூலமொழி ஒலிப்பு, சொந்த ஆய்வு போன்ற விக்கியின் தன்னாட்சி நடையைப் புதிதாக எழுதுபவர்கள் மீது திணிக்கப்படும்போது புதுப்பயனர்கள் விரட்டப்படுகிறார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.
  4. பொதுத் தமிழ்நடையில் மாற்றம் வேண்டினால் போராடவேண்டிய தளம் விக்கிக்கு வெளியில் உள்ளது. அதை விக்கிக்குள் கொண்டுவருவதால், கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் சுணக்கம் ஏற்படும்.
  5. இது குழுமத் திட்டம் என்பதால் அனைத்துவிதப் பயனர்களின் அறிவார்ந்த வாதங்களும் ஏற்கவேண்டும். குறைந்தபட்ச மொழிநடை ஏற்பு என்று ஒன்றை வகுத்து அதற்குள் எழுதுபவர்களின் கட்டுரையை மொழிநடைக்காக அடுத்தவர்கள் திருத்தாமல் விட்டாலே நமது ஆற்றலை முக்கியப் பணிக்குச் செலவிட முடியும் என்று எண்ணுகிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:17, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  விருப்பம் --Winnan Tirunallur (பேச்சு) 04:11, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  விருப்பம் --Cangaran (பேச்சு) 10:39, 1 மார்ச் 2018 (UTC)