விக்கிப்பீடியா:புதிய நிருவாகிகளுக்கான அறிவுரை

குறுக்கு வழி:
WP:AFNN
உள்ளச் சமநிலையோடு துடைப்பத்தையும் வாளியையும் கையிலெடுங்கள்...
சிம்மி வேல்சு, பெப்ரவரி 2003

நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் ! உங்களுக்குப் பயன்படக்கூடிய சில அறிவுரைகளை இங்கு காணலாம்:

அடிப்படைகள் தொகு

  • உடனே வலுவான கடவுச் சொல்லாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களது ஒரு தொகுப்பு விக்கிப்பீடியாவின் பலவிடங்களில் சேதம் விளைவிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். உங்கள் கணக்கு, உங்களது அலட்சியத்தாலோ மற்ற காரணத்தாலோ, திருடப்பட்டால், உங்கள் கணக்கு முடக்கப்படுவதோடு நிருவாகநிலையையும் இழக்க நேரிடும். பின்னர் வருந்துவதற்கு முன்னர் பாதுகாப்பாக இருந்து கொள்வது நல்லது.

செயற்பாடு தொகு

  • நிருவாகி நிலை ஓர் வெற்றிக் கோப்பை அல்ல என்பதை நினைவில் வையுங்கள். எனவே பொதுவாக, கடந்த ஆறு மாதங்களாகவோ அல்லது ஒரு வருடமோ பங்களித்தவந்த வண்ணமே தொடருங்கள். ஏதேனும் பிணக்கை சமரசம் செய்ய உங்களால் உதவ முடியும் என்பதும் அத்தகைய பிணக்குகளை தீர்க்கவோ அல்லது கட்டுரையை மேம்படுத்த வழிகாட்டவோ முடியும் என்பதும் உண்மைதான். ஆனால் இத்தகைய சமயங்களில் நீங்கள் நிருவாகியாக இருப்பதை விட உதவுவது உங்களது பட்டறிவும் விக்கி கொள்கைகள் குறித்த அறிதலும் நன்னெறியுமேயாகும். இந்தப் பண்புகள் நீங்கள் நிருவாகியாக நியமிக்கப்படுவதற்கு முன்னரே இருந்தவைதாம். இந்தப் பண்புகள் நிருவாகியில்லாத பிற பயனரிடமும் இருப்பதைக் காணலாம். இந்தப் பண்புகளே உங்களுக்கு முக்கியத்துவத்தையும் மதிப்பையும் தருகின்றன; நிருவாகி நிலையல்ல. சுருங்கச் சொன்னால், நிருவாகியாக இல்லாதபோதும் பட்டறிவும் கொள்கைப் புரிதலும் கொண்டவர்களால் நிருவாகிக்கு இணையாக இத்தகைய நிலைமைகளில் தீர்வு காணவியலும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து உங்கள் கருத்துக்களுகளுக்கு அவர்களது மதிப்பை எதிர்பாருங்கள். நீங்கள் நிருவாகி என்பதால் மற்றவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.
  • நிருவாகிகளுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவற்றைப் பயன்படுத்துமுன் நன்றாகப் பகுத்துணர வேண்டும். இதனால் நிருவாகிகள் காவல்துறை, நீதித்துறை போல கடமையாற்ற வேண்டுமென்பதல்ல. உங்கள் பொறுப்பை காப்பாளர் பணிபோல கருதவும். கட்டிடக் காப்பாளர் கட்டிடத்தின் ஒவ்வொரு அறையின் சாவியையும் வைத்திருப்பார்; அறையை சுத்தம் செய்யவும் பணியாளர் வரும்போது நல்ல சூழல் நிலவுவதை உறுதி செய்யவும் இப்பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் அறைகளின் திறவுகோல்கள் இருப்பதால் பணியாளர்களை அறையில் வைத்துப் பூட்டவும் செய்யலாம் அல்லது விளையாட்டாக அறைக்கலன்களை அப்புறப்படுத்தலாம். அதேபோல நிருவாகிக்கு பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றின் மூலம் பயனர்களை தடை செய்யலாம் அல்லது பக்கங்களை தொகுக்க இயலாவண்ணம் பாதுகாக்கலாம். ஆனால் இந்த அதிகாரங்களை கூடியவரையிலும் நமது பகுத்துணர்வு மூலமாக மட்டுமே பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, விக்கிப்பீடியா கொள்கைகள் மிகத் தெளிவாக குறிப்பிட்டவாறே இந்த அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும். இது பெரும்பாலும் தானியக்கமாக செயற்படுத்தக் கூடியதாக அளவில் இருக்கும். கொள்கைகள் வரையறுக்கபடாத விடயங்களில் வலுவான இணக்க முடிவு கண்டு, சமூகத்தின் முடிவினை நிறைவேற்றுபவராக நிருவாகி இருக்க வேண்டும். ஐயங்கள் எழுந்தால் அவற்றை நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் எழுப்பலாம் அல்லது பிற நிருவாகிகளுடன் ஐஆர்சி தொடர்பில் உரையாடி முடிவெடுக்கலாம். பட்டறிவுள்ள பிற நிருவாகிகளின் அறிவுரையை அல்லது உதவியை நாடத் தயங்காதீர்கள். கவனமாகவும் இராசதந்திரத்துடனும் செயல்படுங்கள்; அதேநேரம் தேவைப்பட்டால் உங்கள் கருவிகளை பயன்படுத்தத் தயாராகவிருங்கள்.
  • நீங்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் செயலெடுப்பதைத் தவிருங்கள். உங்களுக்கு யாரேனும் தொல்லை கொடுத்தால் தொடர்பற்ற நிருவாகியொருவரை உங்களுக்காக சரிசெய்ய துணைக்கழைக்கலாம்.
  • கூடியவரை விக்கிக்கொள்கைகளை எழுதியவாறே கண்டிப்புடன் வழக்கறிஞர் போல செயற்படுத்தாமல் அதன் அடிப்படையைப் புரிந்துகொண்டு நெகிழ்வாக செயலாற்றுங்கள்.
  • நமது கொள்கை, "விதிகளை மீறு" என்பதை முதல்முறை பயன்படுத்துவது நல்லது; புதுப்பயனர்களின் விதிமீறல்களைப் புரிந்துணர்வுடன் அணுகவும். இருப்பினும் நல்லறிஞர்களுக்குமே வழிகாட்டுதல் தேவைப்படும். கொள்கைகளே நம்மை வழிகாட்டுவனவாக இருத்தல் வேண்டும்.