விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 1, 2012

சங்ககாலத் தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியலுக்கு அடுத்து சங்ககாலத் தமிழக நாணயவியலின் பங்கு மிகுதியானது. குறிப்பாக, மூவேந்தர் வழங்கி வந்த முத்திரைக் காசுகளும், அவற்றை உருவாக்க பயன்படுத்திய வார்ப்புக் கூடுகளும் பெருவழுதி நாணயம் (படம்) என்ற பாண்டிய மன்னனின் காசுகளும் சங்ககாலத் தமிழக வரலாற்று நிறுவலில் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர் , குறுநில மன்னர்கள் ஆகியோரின் நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், வேற்று மாநில மன்னர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறியலாம். தமிழகத்தில் கிடைத்த வேற்று நாட்டு மன்னர்களின் நாணயங்களையும் கடலோடிகளின் குறிப்புகளையும் கொண்டு பண்டைய இந்தியாவின் பண்டமாற்று முறைகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கணிக்க முடிகிறது. மேலும்...


ரோஜர் ஃபெடரர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற டென்னிசு வீரர். இவரின் 2009 ஆம் ஆண்டு விம்பிள்டன் ஆறாவது வெற்றி, மொத்தம் ஐந்து முறை தொடர்ந்து விம்பிள்டன் ஒற்றையர் முதல்வனாக வெற்றி பெற்ற பியான் போர்கின் அரிசெயலை முறியடித்து வரலாறு படைத்ததாகும். இதுவரை, ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 16 பெருவெற்றித் தொடர் பட்டங்களை வென்றுள்ளார். தவிர, ஆத்திரேலிய, பிரெஞ்சு, விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஆகிய பெருவெற்றித்தொடர் பட்டங்களை வென்ற ஏழு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 22 முறை பெருவெற்றித்தொடர் இறுதிப் போட்டிகளில் ரோச்யர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை. அதேபோல் தொடர்ச்சியாக 10 முறை பெருவெற்றித்தொடர் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். இத்தகைய அரியசெயல்களால் பெட் எக்ஸ்பிரசு என்றும், சுவிசு மேசுட்ரோ என்றும் அவர் புகழப்படுகிறார். மேலும்...