விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 16, 2011

ஒன்றிய வாழ்வு (Symbiosis) எனப்படுவது இரு வேறுபட்ட உயிரியல் இனங்களிடையே காணப்படும் இடைவினையினால், அவ்வினங்களின் உறுப்பினராகவுள்ள உயிரினங்கள், நெருக்கமாகவும், நீண்ட காலத்துக்கும் இணைந்து வாழும் முறையாகும். 1877 இல் பெனெட் என்பவர் பாசி-காளான்களிடையே காணப்பட்ட தொடர்பை விளக்க இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார். ஒன்றிய வாழ்வு என்ற பதமானது மிகவும் பரந்த உயிரியல் இடைவினைகளை விளக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இயற்கையில் இந்த ஒன்றிய வாழ்வானது அண்டி வாழ்தல், இணைவாழ்வு அல்லது சமபங்கித்துவம், ஒட்டுண்ணி வாழ்வு எனப் பகுக்கப்படுகின்றது. சில ஒன்றிய வாழ் உயிரினங்களில் அப்படியான வாழ்வு இன்றியமையாததாக இருக்கின்றது. அவ்விரு உயிரினங்களும் தமது வாழ்வுக்கு ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவையாக, ஒன்றுக்கொன்று வாழ்வாதாரமாக இருக்க வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருக்கின்றன. சில பாசி காளான்கள் தனித்தனியாக இருப்பின் வாழும் திறனற்றவையாக இருக்கின்றன. வேறு சில உயிரினங்கள் அமையத்திற்கேற்றபடி ஒன்றிய வாழ்வை மேற்கொண்டு, மாற்றுச் சூழலில் தனித்தியங்கும் பண்பையும் கொண்டிருக்கின்றன. மேலும்..


திவான் பகதூர் சர் ஆற்காடு ராமசாமி முதலியார் (18871976) ஒரு இந்திய வழக்கறிஞரும், அரசியல்வாதியும், ராசதந்திரியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிர்வாகம் மற்றும் ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர். ராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 1918 இல் ராமசாமி முதலியார், டாக்டர் டி. எம். நாயர், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு மூவரடங்கிய குழு ஒன்று இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தது. இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணரல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களது மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கள் ஊக்கமிக்கவையாக அமைந்திருந்தன. மேலும்..