விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 19, 2011

யால தேசிய வனம் இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் ஆகக் கூடிய எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் செல்வதும் பரப்பளவில் இரண்டாவது பெரியதும் ஆகும். ஐந்து பிரிவுகளைக் கொண்ட இவ்வனத்தில் இரண்டு பிரிவுகளே பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. இக்காட்டினை அண்டியதாக வேறு சில காடுகளும் காணப்படுகின்றன. யால தேசிய வனம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. தலைநகர் கொழும்பிலிருந்து 190 மைல் தொலைவில் காணப்படும் இக்காடு மொத்தமாக 979 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இக்காடு அதில் வசிக்கும் ஏராளமான வனவிலங்குகள் தொடர்பில் மிகப் பிரபலமானதாகும். இத்தேசிய வனம் இலங்கை யானைகளினதும் நீரியற் பறவைகளினதும் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. யால தேசிய வனத்தினுள் வாழும் 215 பறவையினங்களுள் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும். உலகில் சிறுத்தைகள் செறிவு மிகக் கூடிய இடங்களுள் இதுவும் ஒன்றாகும். 2004 கடற்கோளினால் இவ்வனத்துக்குப் பெருஞ் சேதங்கள் விளைந்ததுடன் இதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2009-இல் இக்காட்டினுட் பகுதிப் பாதுகாப்பு சிறப்பாக்கப்பட்டது முதல் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது. மேலும்..


1967ஆம் ஆண்டின் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டமன்றத் தேர்தலாகும். இத்தேர்தலில் ஆட்சியிலிருந்த காங்கிரசு கட்சி தோல்வியடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது இதுவே முதன்முறை. 40 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. அன்றுமுதல் இன்றுவரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. அப்போதைய முதல்வர் பக்தவத்சலம், கட்சித் தலைவர் காமராசர் ஆகியோரும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவினர். திமுக தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 14 மாவட்டங்களில் 10இல் தனிப்பெரும்பான்மை பெற்றது. தென்சென்னை தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அண்ணாத்துரை பதவி விலகி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் தமிழகச் சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும்பஞ்சம், திமுக உள்ளிட்ட கட்சிகளின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், திமுக வேட்பாளர் எம்ஜியார் கொலைமுயற்சி முதலியவை எதிர்க்கட்சிக்கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்தன. மேலும்..