விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 9, 2012
சென்னை உயர் நீதிமன்றம் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள நீதிமன்றமாகும். 150 ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புடன் விளங்குகின்றது. இந்தியா விடுதலை அடைவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரித்தானிய அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிமுறைமை புரிவர். தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின்படி இதன் நீதி நிர்வாகங்களைச் செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மேலும்...
குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி ஆகும். வரிக்குதிரை, கழுதையைப் போலவே குதிரையும் ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. உலகின் சில பகுதி மக்களின் உணவாகவும் இது இருந்துள்ளது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியாமையாத ஒரு படையாக இருந்துள்ளது. குதிரைகளைக் கொண்டு விளையாட்டுகளும் பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. மிக வேகமாக ஓட வல்ல குதிரைகள் நின்று கொண்டே தூங்கும். குதிரைக் குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்கத் தொடங்கி விடுகின்றன. ஐந்தாண்டுகளில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. குதிரையின் ஆயுள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும். சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 அங்குலம் உயரம் வரை வளரும். கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன. மேலும்...