விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 31, 2007

இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது.

நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வர்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.


ஓட்டன் சமவெளி இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசியப் வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டயார் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது. 1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாகக் காணப்பட்ட ஓட்டன் சமவெளி 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும். இச்சமவெளி அயனமண்டல மழைக்காடுகளாலும் ஈரப்பதனப் புல் நிலங்களாலும் ஆனது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும்.