விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூலை 6, 2008

சோலைமந்தி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaque என்று அழைக்கப்படுகிறது. இம்மந்தியின் தமிழ்ப் பெயரான "சோலைமந்தி" என்பது அறியப்படாமல், இதன் ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான "சிங்கவால் குரங்கு" என்று தவறாக அழைக்கப்படுகிறது. இவ்விலங்கிற்கு "கருங்குரங்கு" என்றொரு பெயரும் உண்டு.


கணிதத்தில் சூனியம் அல்லது சுழி (zero) என்ற எண் மனித சமூகத்திற்கே பழங்கால இந்தியா அளித்த பரிசு எனக்கொள்ளலாம். மனிதனுடைய வரலாற்றில் பண்பாடு, நாகரிகம் இவைகளின் வளர்ச்சியில் அது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. அதனுடைய இன்னொரு பாகமான இடமதிப்புத் திட்டத்தின் (Positional notation) பிரம்மாண்டப் பயன்பாட்டிற்கும் சுழி என்ற அந்தக் கருத்தே முழுமுதற் காரணம் எனக் கூறலாம். எல்லா எண்களையும் பத்தே குறியீடுகளைக் கொண்டு குறிப்பிட முடியும் என்ற கருத்துதான் தசம இடமதிப்புத்திட்டம். நமக்கு இரண்டு ஆயிரமாண்டுகளாகத் தெரியும் அத்தனை கணிதமும், கணக்கீட்டு முறைகளும் இவ்விரண்டு கருத்துகளினால்தான் முன்னேற்றப் பாதையில் தொடங்கின.


வள்ளுவர் கோட்டம், புகழ் பெற்ற திருக்குறளைத் தமிழுக்குத் தந்த சங்ககாலத் தமிழ்ப் புலவரான திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது தமிழ் நாடு மாநிலத் தலைநகரமான சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு மற்றும் வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.