விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 1, 2013

சோழர் படை என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாக சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார். அவரே கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் தலைவர். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது. மேலும்...


எஸ். ஏ. கணபதி அல்லது மலாயா கணபதி (பிறப்பு:1912 - இறப்பு:மே 4, 1949) என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர். மலாயா கண்டெடுத்த மாபெரும் புரட்சித் தலைவர்களில் ஒருவர். எஸ். ஏ. கணபதி இளம் வயதிலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவரானார். அவரின் சாதனை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கவனத்தையே ஈர்த்தது. எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்கு பெரும் இடையூறுகளாக அமைந்தன. அவரை அனைத்துலகப் பார்வையில் இருந்து அகற்றுவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர். மேலும்...