விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 19, 2010

பிடரிக்கோடன் (Tuatara) நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி போன்ற பல்லிகளைப் போலவே தோன்றினாலும், பல்லிகளில் இருந்து வேறுபடும் ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் வரும் விலங்கு. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் பிடரிக்கோடன் குடும்பத்தைச் சேர்ந்த இரு இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை. இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லிகளையும் உள்ளடக்கிய "செதிற்றோல் ஊர்வன" மட்டுமே. இதனால் பல்லி பாம்புகளின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. மேலும்..


பிலைசு பாஸ்கல் (1623-1662) ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் மெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கணித உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும் உய்த்தறிதல் முறையும், கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் நிகழ்தகவு என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான். 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார். இதைத் தவிர தனது 16வது அகவையில் வடிவவியலிலும் பாஸ்கல் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் SI அலகும், கணினி மொழி ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன. மேலும்..