விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 14, 2010
உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம். உதாரணமாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து சி) வேறு உயிரினங்களால் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை. சில உயிர்ச்சத்துகளை சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும். இவற்றின் போதுமான அளவிற்கு நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் அவசியம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவியரீதியில் அறியப்பட்டுள்ளது. மேலும்
வீரமணி ஐயர் (1931-2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். தமிழகத்தில் ருக்மணிதேவி அருண்டேலிடம் பரதநாட்டியமும், எம். டி. ராமநாதன், பாபநாசம் சிவன் ஆகியோரிடம் கருநாடக இசையும் பயின்றார். இலங்கையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை, நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் இயற்றினார். 72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும். `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தை பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும். மேலும்..