விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 25, 2012

சமர்கந்து சொகிடிய மொழியில் "கற்கோட்டை" அல்லது "கல் நகரம்" என்றழைக்கப்படும், உசுபெக்கிசுத்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் சமர்கந்து மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான பட்டுப் பாதையின் நடுவில் உள்ள இதன் அமைவிடம் காரணமாகவும் இசுலாமிய அறிவியலின் மிக முதன்மையான தளமாகவும் இருப்பதால் இவ்வூர் புகழ் மிக்கதாயிருக்கின்றது. 14 ஆம் நூற்றாண்டில் சமர்கந்து நகரம் தைமூர்ப் பேரரசின் தலைநகரமாயிருந்தது. தைமூரின் அடக்கத்தலமும் இவ்வூரிலேயே இருக்கிறது. இங்குள்ள புகழ் மிக்க கட்டிடங்களில் பீபி-கானிம் பள்ளிவாசல் குறிப்பிடத் தக்கது. 'ரசிசுத்தான்' என்பது இவ்வூரின் பண்டைய நகர மையமாகும். 2001 ஆம் ஆண்டு, சமர்கந்து - பண்பாடுகளின் கூடல் என்ற தலைப்பில் இவ்வூர் உலக பாரம்பரியக் களமாக யுனெசுக்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. மேலும்...


தொழிற்புரட்சி என்பது 1750-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப, பொருளாதார, நாகரிக மாற்றங்களைக் குறிக்கும். தொழிற்புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவியது. செருமனியில் 1871இல் பேரரசு நிறுவப்பட்ட பின்னரும், அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பின்னரும், உருசியாவில் 1917ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொழிற் புரட்சி தொடங்கியது. இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே உலகெங்கும் தொழிற்சாலை முறை தோன்றியது. இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி மேற்கத்திய நாடுகளில் அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் மற்றும் தொழிற்சாலை, வர்த்தகம் ஆகியவற்றில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும்...