விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 12, 2012
தாய்ப்பாலூட்டல் என்பது பிறந்த குழந்தைக்கு நேரடியாக தாயின் முலையிலிருந்து பால் கொடுக்கப்படும் முறையாகும். குழந்தைகளில் காணப்படும் உறிஞ்சி உண்ணும் தொழிற்பாடு இந்த தாய்ப்பலூட்டலுக்கு உறுதுணையாக உள்ளது. பொதுவாக குழந்தைக்கான வேறு மேலதிக உணவுகளை வழங்காமல் தாய்ப்பாலூட்டல் முறையால் மட்டுமே கிட்டத்தட்ட 6 மாதங்கள் உணவூட்டல் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற போதுமானதாக இருக்கும். குழந்தைக்கு ஆபத்தான மருந்துகள் உட்கொள்ளும் தாய், எய்ட்சு நோயுள்ள தாய், காசநோய் உள்ள தாய் போன்றோர் தாய்ப்பாலூட்டாமல் இருப்பது நல்லது. துறைசார் வல்லுனர்கள் அனைவரும் தாய்ப்பாலூட்டல் மிகவும் நிச்சயமாக நலம் தருவதுதான் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு காலம் தாய்ப்பாலூட்டுவது சிறந்தது, பிறந்த குழந்தைக்கு செயற்கை முறை உணவூட்டல் எபப்டியான இடர்களைத் தரக் கூடியது போன்ற விடயங்களில் வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப்பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், அதன் பின்னர் மேலதிகமாக செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப்பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன. மேலும்...
ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் பகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீபகற்பமாகும். இதன் கடற்கரை அரபிக்கடல் மற்றும் ஏமன் குடாவை எல்லைகளாக கொண்டுள்ளது. சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி, எத்தியோப்பியா ஆகியவை இப்பகுதியில் உள்ள நாடுகள் ஆகும். இப்பகுதி நிலநடுக் கோடுக்கும் கடக ரேகைக்கும் சம தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மலைகள் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு அமைந்ததால் ஏற்பட்ட நில உயர்வு காரணமாக உருவானதாகும். இப்பகுதிக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்குமான வணிகத்தில் வடக்கு சோமாலியா சிறப்பு இடத்தை பிடித்திருந்தது. எகிப்தியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், மெசபடோமியர்கள் ஆகியோர் மதிப்பு மிக்க பொருளாக கருதும் சாம்பிராணி, குங்குமதூபம் மற்றும் மசாலா பொருட்களுக்களை வழங்குபவர்களாக சோமாலிய கடலோடிகளும் வணிகர்களும் திகழ்ந்தனர். இடைக்காலத்தில் இப்பகுதியின் வணிகத்தை பல்வேறு அரசுகள் ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்தின. இப்பகுதியை ஆண்ட அடல் சூல்தானகம் பல இனக்குழுக்கள் கொண்ட முசுலிம் அரசாக திகழ்ந்தது. இது புகழின் உச்சியில் இருந்த போது எத்தியோப்பியா, எரித்திரியா, சிபூட்டி மற்றும் சோமாலியாவின் பெரும் பகுதிகள் இதன் கட்டுப்பாட்டில் இருந்தன. மேலும்...