விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 15, 2011

தமிழ் விவிலியம் என்பது கிறித்துவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள திருவிவிலியத்தின் தமிழ்ப் பதிப்பு ஆகும். தமிழ்த் திருவிவிலியம் வேதம், வேத புத்தகம், மறைநூல், சத்தியவேதம், வேதாகமம், திருமறைநூல் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறது. விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் செருமானியரான பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க். பழைய ஏற்பாடு முழுமையாக முடிவடையாத பொழுதே சீகன்பால்க் இறந்துவிட்டதால் பெஞ்சமின் சூல்சு என்பவர் அப்பணியைச் செய்து முடித்தார். மேலும் இவர் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியையும் திருத்தினார். இலங்கையில் தமிழ் விவிலியப் பதிப்பு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப்பின் ஆதரவின் கீழ் வெளியானது. திருவிவிலியத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு கத்தோலிக்க கிறித்தவ சபைகள் வெளியிட்ட நூல்கள் மூலம் பிரபலமடைந்தது. அருட்திரு ஞானப்பிரகாசம் தனிப்பட்ட முறையில் முப்பது ஆண்டுகள் உழைத்து விவிலியத்தைத் தமிழில் பெயர்த்தார். அது கொல்கத்தாவில் 1932 இல் அச்சிடப்பட்டது. பழைய, புதிய ஏற்பாடுகளை இக்காலத் தமிழ் நடையில் பெயர்க்கும் பணி 1972இல் தொடங்கி 1995இல் முடிவுற்றன. இப்புதிய மொழிபெயர்ப்பு திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) என்றழைக்கப்படுகிறது. மேலும்..


சலாகுத்தீன் அயூப் (1137-1193) பிரபலமான இசுலாமியப் பேரரசர். இவரது பேரரசு அயூபி பேரரசு என அழைக்கப்படுகின்றது. குர்திய முசுலிமான சலாவுத்தீன், மூன்றாம் சிலுவைப்போர்களில் ஐரோப்பிய - கிறித்தவப் படைகளுக்கு எதிராகப் போரிட்டவர். இப்போர்களில் வெற்றி பெற்று எருசலேமில் இசுலாமியப் பேரரசை ஏற்படுத்திய காரணத்தால், இன்றும் இவர் இசுலாமிய சமூகத்தில் பிரபலமாக உள்ளார். மேலும் இவரது சகிப்புத்தன்மை மற்றும் போர் நெறிமுறைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக உள்ளார். இவரது ஆட்சியின் உச்சத்தில் அயூபிப் பேரரசு எகிப்து, சிரியா, இராக், ஏமன் மற்றும் மேற்கு கரை அரேபிய தீபகறபத்தை உள்ளடக்கியதாக இருந்தது. சலாவுத்தீன் ஒரு மிகப்பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட ஒரு சாதாரணமான மனிதனாகவே எளிமையாக வாழ்ந்தார். தீவிரமான சன்னி இசுலாம் முறையை பின்பற்றிய இவர், மற்ற மதத்தினரையும் மதித்தார். அவர்களின் புனித தலங்களுக்கு பாதுகாப்பும் கொடுத்தார். இவர் ஆக்கிரமிப்பாளர்களை தவிர மற்ற எவர்களையும் தாக்கியதில்லை. அவ்வாறு அவர்களை தாக்கியப்பொழுதும் கூட, அவர்களுக்கு முதலிலேயே சரணடைய பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தார். மேலும் எருசலேம் நகரிலேயே அவர்கள் தங்கிக் கொள்ளவும் அனுமதித்தார். மேலும்..