சிலுவைப் போர்கள்

(சிலுவைப்போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிலுவைப்போர்கள் (Crusades) நடுக்காலத்தில் இலத்தீன் திருச்சபையின் அனுசரணையுடன் இடம்பெற்ற மதம் சார்ந்த போர்களின் தொடராகும். கீழை நடுநிலப்பகுதியில் ஜெருசலேம் உள்ளிட்ட புனித நிலத்தை இஸ்லாமியரிடமிருந்து மீட்பதற்காக இடம்பெற்ற சிலுவைப்போர் இதில் முக்கியமானதாகும். பாகனிய நெறிகளை ஒடுக்குதல், மதநிந்தனையை இல்லாதாக்குதல், உரோமன் கத்தோலிக்க சமயக்குழுக்களிடையேயான போட்டிநிலைமைக்குத் தீர்வு காணுதல் என்பன சிலுவைப்போர்களின் நோக்கங்களில் சிலவாகக் காணப்பட்டன.

1135இல் கிழக்கு நடுநிலத்தின் வரைபடம். யேர்மானியப் பிராங்கியரின் சிலுவை நிலங்கள் குறிகொண்டு காட்டப்ப்ட்டுள்ளன. இஸ்லாமிய செல்யூக் பேரரசு, பாத்திம கலீபகம் என்பன பச்சை நிறத்தில் காட்டப்படுகின்றன.
கிளமர்ண்ட் சபையின் சித்தரிப்பு.1475ஆம் ஆண்டு கால ஓவியம்.

புனித நிலத்தில் இடம்பெற்ற சிலுவைப்போர்கள், 1095-99இல் இடம்பெற்ற முதலாம் சிலுவைப்போரிலிருந்து, 1271 -72 வரை இடம்பெற்ற ஒன்பதாம் சிலுவைப்போர் வரை, பொதுவாக ஒன்பது என்றே இனங்காணப்பட்டிருக்கின்றன. போர்களை முன்னின்று நடத்தியவரைக் கருதி, இத்தொடர்களை ஏழாகவும் குறைத்து நோக்கலாம்.[1]

சொற்பிறப்பியல்

தொகு

சிலுவைப்போர் இடம்பெற்ற காலத்தில் இப்பெயர் வழக்கில் இருக்கவில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே சிலுவையைத் தரித்தோர் என்ற பொருளில் crucesignatus எனும் சொல்லாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] சிலுவைப்போர் என்பதற்கான ஆங்கிலப்பதம் "Croisade" என்ற வடிவில் முதலில் 1575இல் புழக்கத்துக்கு வந்ததாகத் தெரிகின்றது.[2] மத்தியகால இஸ்லாமிய வரலாற்றாளர்கள், சிலுவைப்போர்களை "பிராங்கியப் போர்கள்" என்று அழைத்தார்கள்.[3]

"சிலுவைப்போர்" என்ற சொல்லாடலானது, அதைப் பயன்படுத்துவோரின் நோக்கம் கருதி நான்காகப் பிரித்துப்பார்க்கப்படலாம்.[4] மரபுவாதிகள் ஜெருசலேமையும் திருக்கல்லறையையும் மீட்பதற்காக 1095 முதல் 1291 வரை இடம்பெற்ற கிறிஸ்தவ புனிதப்போர்கள் என்கின்றார்கள்.[5] பன்மைத்துவவாதிகள், அப்போது ஆண்ட பாப்பரசரின் அனுசரணையில் இடம்பெற்ற எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் சிலுவைப்போரே என்கின்றார்கள்.[6][7] பொதுவியலாளர்களின் பார்வையில், இலத்தீன் திருச்சபையுட்ன் தொடர்புடைய அனைத்துப் புனிதப்போர்களும் சிலுவைப்போர்களே. பரப்பியவாதிகள், பொதுமக்களால் நடத்தப்பட்டது என்றவகையில் முதலாம் சிலுவைப்போரை மாத்திரமே அப்பெயர் கொண்டு அழைக்கலாம் என வாதிடுவர்.[4]

சிலுவைப் போர்களின் பங்கேற்றவர்கள் தங்களை புனித பேதுருவின் ஊழியர்கள் (fideles Sancti Petri) அல்லது கிறிஸ்துவின் போர் வீரர்கள் (milites Christi) என்றே அழைத்தனர். திருப்பயணிகளாகவே இவர்கள் தங்களை தாங்களே கருதினர். 1638இல் வெளியான L'Histoire des Croisades என்னும் புத்தகத்திலேயே முதன்முதலில் சிலுவைப் போர்கள் என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது.[8] 1750க்குள் இப்பதம் பல வகைகளில் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் செருமாணியம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றது. மற்ற திருப்பயணிகள் போலவே சிலுவைப் போர் வீரர்களும் புனித திருநாட்டை அடைந்ததும் செய்வதற்காக வேண்டுதல்களை பயணத்துக்கு முன் உறுதிமொழி எடுத்தனர். இத்தகையோர் தங்களின் மேலாடையில் சிலுவையினை சேர்க்க அனுமதிக்கப்பட்டனர். இச்சிலுவையினாலேயே இப்போர் சிலுவைப் போர்கள் என வழங்கலாயிற்று.[9]

இஸ்லாமின் எழுச்சி

தொகு
 
622 வரை 750 இஸ்லாமின் பரவலாக்கம்
  முகம்மது நபியின் கீழ் இஸ்லாம் பரவுதல், 622–632
  ராசிதீன் கலீபாக்கள் காலத்தில்... 632–661
  உமையா கலீபகம் காலத்தில்... 661–750

நபியவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமானது, 632இல் அவர் மரிக்கும் போது, அரபுத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்திருந்தது. இதன்பின்னர் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் பெரும் போர்களின் மூலம், அரேபிய ஆதிக்கமானது, இந்தியத் துணைக்கண்டம், நடு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் என்று பெரும்பகுதிகளுக்கும் பரவியதுடன், 637இல் இடம்பெற்ற எருசலேம் முற்றுகை மூலம், புனிதபூமியையும் பைசாந்தியப் பேரரசிடமிருந்து கைப்பற்றிக்கொண்டது.[10][11][12] இதையடுத்து கிறித்துவ நாடுகளுக்கும் அரபுலகுக்கும் இடையிலான வணிகம், சகிப்புமை, அரசியல் உறவுகள் அத்தனையும் தளம்பல் நிலையைக் காணத்தொடங்கியது. உதாரணமாக, யெருசலேம் திருக்கல்லறையை பாத்திமிய கலீபாவான அல் ஹாகிம் பினமிர் அல்லாஹ் இடித்ததும், அவனை அடுத்து வந்த கலீபா, அதை மீண்டும் பைசாந்தியப்பேரரசு கட்டிக்கொள்ள அனுமதித்ததையும் குறிப்பிடலாம்..[13] 10ஆம் நூற்றாண்டின் இறுதியில், பைசாந்தியப் பேரரசானது, அப்பகுதியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டது. இக்காலத்தில் அரேபிய, கிறித்துவ உறவுகள் ஓரளவு சுமுகமாக இருந்தாலும், யெருசலேம், சிரியத்துறை என்பவற்றில் தாம் திருப்திகரமாக வாழமுடியவில்லை என்று கிறிஸ்தவ யாத்திரிகர்கள், வணிகர்கள் முறையிடத்தொடங்கி இருந்தார்கள்.[14]

இதே காலத்தில் ஐரோப்பாவிலும் பெரும் நெருக்கடியான நிலைமை தோன்றியிருந்தது. 1054இல் இடம்பெற்ற, பெரும் சமயப்பிளவு என்று அறியப்படும், இலத்தீன் திருச்சபையின் கிழக்குப் பேரரசிலிருந்தான வெளியேற்றம், அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.[15] மேலும் உரோம அரசா அல்லது கத்தோலிக்கத் திருச்சபையா, ஊழியர்களை நியமிப்பதற்கான அதிகாரங்களைக் கொண்டது என்ற விடயம் தொடர்பில், பணியமர்த்தல் சர்ச்சையும் சென்றுகொண்டிருந்தது.[16][17] இத்தகைய திருச்சபை விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியிருந்த பின்னணியிலேயே முஸ்லீம்களிடமிருந்து பலஸ்தீனத்தை மீட்கும் புனிதப்போருக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பங்குகொள்வது, பாவத்தை நீக்கும் ஒரு பரிகாரம் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் வளர்ந்தது.[18]

முதலாம் சிலுவைப்போர்

தொகு
 
முதலாவது சிலுவைப் போரின்போது இடம்பெற்ற அந்தியோக்கியா முற்றுகை. மத்தியகாலச் சிற்றோவியம் ஒன்றிலிருந்து.

1095இல் பைசாந்தியப் பேரரசன் முதலாம் அலெக்சியஸ் கொம்னெனோஸ், திருத்தந்தை இரண்டாம் அர்பனிடம் தனக்கு படையுதவி செய்யுமாற் கோரினான். அனத்தோலியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த துருக்கியரை அகற்றுவது அவனது கோரிக்கைக்கான முக்கியமான காரணமாக இருந்தது.[19] ஓராண்டுக்குப் பிறகு புனிதப்போர் ஒன்றுக்கான தேவையைப் பற்றி, அர்பன் மீண்டும் பிரசங்கம் செய்தார். கிழக்குத் திருச்சபைக்கு உதவுவதன் மூலம், பிளவுண்டிருக்கும் இரு திருச்சபைகளையும் இணைக்கமுடியும் என்ற நம்பிக்கை அர்பனிடம் இருந்ததாலேயே, இந்த உதவிக்கு அவர் உடன்பட்டிருக்கிறார் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.[20] இதேவேளையில் பேதுருவானவர், பெருமளவு ஏழை கிறித்துவர்களிடம் புனிதப்போரொன்றின் தேவைப்பாடு பற்றி, போதனை செய்துகொண்டிருந்தார்.[21] புனிதப்போர் வெடித்தது. யெருசலேத்தில் பெரும்பாலானோர், 'சொர்க்கத்தை அடைந்தார்கள்'.[22] ஐரோப்பாவின் முதலாவது யூத எதிர்ப்புக் கொள்கையின் விளைவு என்று வரலாற்றாய்வாளர் வருணிக்கும் ரைன்லாந்துப் படுகொலை மூலம் யேர்மனியில் யூதர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.[23] அலெக்சியோவின் கோரிக்கையை மீறி நைசியாப் பகுதியைக் கைப்பற்றச் சென்ற புனிதப்போர் படையினர், துருக்கியரிடம் பெருந்தோல்வி அடைந்தனர். இருபதினாயிரம் புனிதப்போராளிகளில், மூவாயிரம் பேர் மாத்திரமே எஞ்சமுடிந்தது.[24]

பிரான்சின் முதலாம் பிலிப்பும், உரோமனின் நான்காம் ஹென்ரி மன்னனும், அர்பனுடன் முரண்பட்டு, சிலுவைப்போரில் பங்குபெற்ற மறுத்தனர். எனினும் பிரான்சு, மேற்கு யேர்மனி, இத்தாலி, கீழ்நாடுகளில் சிலுவைப்போருக்கு அரசவை பிரமுகர்கள் மத்தியிலும் கீழ்த்தட்டு மக்கள் மத்தியிலும் இருந்த வரவேற்பை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இத்தகையோரின் ஆதரவுடன், சுமார் ஒரு இலட்சம் படைவீரர்களுடன் கிளம்பிய படை, பேரரசனின் பலத்த வரவேற்பின் மத்தியில் பைசாந்தியத்தை அடைந்தது. ரம் சுல்தானகத்தின் தலைமையகமாகம் முதலாம் கில்ஜி அர்ஸ்லான் பிரகடனம்செய்திருந்த நைசியாவை மீட்பது, அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது. ஏற்கனவே நடந்த போரில் வென்ற ஆணவத்தில், ஏனைய இஸ்லாமிய அரசுகளின் எச்சரிக்கையையும் மீறி களமிறங்கிய சுல்தான், 1097இல் நைசியாவை சிலுவைப்போராளிகளிடம் பறிகொடுத்தான்.[25]

 
பேதுருவானவர், பெண்கள், வீரர்களை முதலாம் புனிதப்போருக்காக யெருசலேமுக்கு இட்டுச்செல்லும் மத்தியகால ஓவியம்.

அந்தியோக்கியாவைக் கைப்பற்றிய சிலுவைப்போராளிகள், துருக்கியருக்கு பேரழிவை நிகழ்த்தினர்.[26] பாக்தாத் சுல்தானகத்தின் சுல்தான், நிலைமையைப் புரிந்துகொண்டு, அந்நகரை மீட்பதற்காக பெரும்படையை அனுப்பினான். ஏற்கனவே பைசாந்திய்ப் பேரரசின் உதவிகளை இழந்து, பஞ்சத்தாலும் பட்டினியாலும் அந்நகரில் வாழ்ந்துகொண்டிருந்த சிலுவைப்போராளிகள், பாக்தாத் படையிடம் சரணடைய அனுமதி கேட்டனர். அதை மறுத்த பாக்தாத் படையினரிடம் வேறுவழியின்றி மோதிய சிலுவைப்போராளிகள், முற்றுகையை விடுத்து பாக்தாத் படையினரை புறமுதுகிட்டு ஓடச்செய்தனர். இயேசுபிரானின் உடலைத்துளைத்த புனிதவேலை அங்கு தான் கண்டதாக பேதுரு பர்த்தமேலோ கூறியதே அங்கிருந்த போராளிகளுக்கு உற்சாகமூட்டி, பாக்தாத் படையினரை எதிர்த்தோட வைக்கத் தூண்டியதாகச் சொல்லப்படுகின்றது.[27] துருக்கியரிடமிருந்து எருசலேமை பாத்திம எகிப்தியர்கள் பறித்துக்கொண்டதை அறிந்த சிலுவைப்போராளிகளின் ஒரு குழுவினர், அந்தியோக்கியாவை விட்டு, தெற்கே பயணமாயினர்.[28]

போதுமான தகவல்கள் கிடைக்காமையால், சிலுவைப்ப்போராளிகளின் முதலாவது தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அவர்களது விடாமுயற்சியில் இரண்டு முற்றுகைக்குழுக்கள் பிரிந்தன. அவற்றில் ஒன்று 1099 யூலை 15 அன்று நகரின் சுவர்களைத் தகர்த்தது. குடியிருப்பாளர்கள் கொன்றுவீசப்பட்டு, நகரம் போராளிகளின் வசமானது.[29] பின்பு வந்த எகிப்திய விடுதலைப்படையை தோற்கடித்தான் போராளிக்குழுக்களின் ஒரு தளபதியான கோட்பிரே. தம் புனிதப்பயணம் வெற்றிபெற்றதென்று கருதிய பெருமளவு போராளிகள் ஐரோப்பா திரும்பினர். கோட்பிரேயுடன் பாதுகாப்புக்காக 300 வீரர்களும் 2,000 போராளிகளும் மாத்திரம் விட்டுச்சென்றனர்.[30]

இஸ்லாமியரின் சிலுவைப்போர் தோல்வியானது, ஓரளவு அரபு ஆவணங்களில் கிடைத்தாலும், இது பற்றி போதுமான தரவுகள் கிடைப்பதாயில்லை. அரேபிய வரலாற்றாசிரியர்கள், சிலுவைப்போராளிகளை மதம் சார்ந்த போராளிகளாக அன்றி, பைசாந்தியப் பேரரசின் கூலிப்படையினராகவே கணித்தமை இதற்கொரு காரணம் ஆகலாம்.[31] சிரியாவில் சன்னிகளாகவும், எகிப்திய பாத்திம சியாக்களாகவும், துருக்கியில் டமாஸ்கஸ், அலெப்போ ஆகிய ஆட்சியாளர்களிடையேயும் இஸ்லாமிய உலகம் பிரிந்து நின்றமையாலேயே முதலாம் சிலுவைப்போரில் அவர்கள் தோற்றனர் என்று சொல்லப்படுகின்றது.[32]

12ஆம் நூற்றாண்டு

தொகு
 
இரண்டாம் சிலுவைப்ப்போரில் வெற்றி பெற்ற சலாகுத்தீனை சித்தரிக்கும் 20ம் நூற்றாண்டு காலச் சித்திரம்
 
1204இல் கான்ஸ்டண்டினோபில் நகரை சிலுவைப்போராளிகள் கைப்பற்றல்.

12ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், சிலுவைப்போராளிகள், சிறுசிறு குழுக்களாக கீழை நடுநிலத்துக்குப் பயணஞ்செய்வதும், முஸ்லீம்களுடன் போரிடுவதுமாக இருந்தார்கள். அதன் மூன்றாம் பத்தாண்டில் அஞ்சோவின் ஐந்தாம் பல்க்கும், வெனட்டிய சிலுவைப்போராளிகளும், யேர்மனியின் மூன்றாம் கொன்ராட்டும் இணைந்து தேவாலய புனித வீரர்கள் அமைப்பை தோற்றுவித்தனர்.[33] 1128இல் அலெப்போ வீழ்ந்தபோதும், 1144இல் மோசுல் ஆளுநர் இமாட் அட்டின் செங்கியின் வசம் உர்பா நகர் வீழ்ந்ததும், இரண்டாம் சிலுவைப்போரை ஆரம்பிப்பதற்கான காரணங்களாக அமைந்தன.[34][35] பெரிய வெற்றி கிடைக்கவில்லை எனினும் ஏழாம் லூயிஸ் மன்னனும், மூன்றாம் கொண்ராட்டும், சிலுவைப்போராளிகளை பிரான்சு, யேர்மனியிலிருந்து யெருசலேம் மற்றும் டமாஸ்கசுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.[36]

எனினும் ஐபேரிய தீபகற்பத்தில், கிறித்துவர்களுக்கு தொடர்ச்சியான வெற்றி கிடைத்து வந்தது. 1148இல் போர்த்துக்கேய மன்னன் முதலாம் அபொன்சோ லிஸ்பனைக் கைப்பற்றியதுடன், பார்சிலோனிய நான்காம் ரேய்மண்ட் தோர்தோசா நகரைக் கைப்பற்றியதும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.[37] எகிப்தானது, சன்னி முஸ்லீம்களின் பாக்தாத்திலிருந்த அப்பாசியக் கலீபகத்துக்கு வெளியே, சியா பிரிவைச் சேர்ந்த பாத்திமக் கலீபகத்தால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. அரசியல் சதிகளால் 1121இலிருந்து பாத்திமக் கலீபகம் ஆட்டம் காண்த்தொடங்கியது.[38] இது எருசலேத்தின் மூன்றாம் பால்ட்வின்னை எகிப்து மூலம் படையெடுக்கத் தூண்டியதுடன், பலத்த சிரமங்களுக்கு மத்தியில் 160,000 பொன் தினார்களை திறையாகச் செலுத்தி, எகிப்து தன்னை தற்காத்துக்கொண்டது. அப்போது மோசுல் மன்னனாக இருந்த செங்கியின் மகன் நூர் அல்தீன் படைகளை அனுப்பி எகிப்தை மீட்டுக்கொடுத்தான். 1174இல் இறந்த நூர் அல்தீன், சிலுவைப்போர் காலகட்டத்தில் அலெப்போவையும் டமாஸ்கசையும் ஒன்றிணைத்து ஆண்ட முதல் இஸ்லாமிய மன்னனாகக் கருதப்படுகின்றான்.[39] நூர் அல்தீனால் எகிப்துக்கு அனுப்பப்பட்ட சலாகுத்தீன், கீழை நடுநிலத்தின் சக்திவாய்ந்த தன்னாட்சி அமைப்பாக எகிப்தை வளர்த்தெடுத்தான்.[40]

சிரியாவின் பெரும்பகுதியையும் டமாஸ்கசையும் கைப்பற்றிக்கொண்ட அய்யூப்பிய பேரரசர் சலாகுத்தீன், இலத்தீன் கிறித்துவர்களுடனான முதலாவது மோதலில் தோற்றாலும், அவர்களுடன் மோதி வெல்வதை ஒரு பெருங்கனவாகவே கொண்டிருந்தான்.[41] பிரெஞ்சின் லுசிக்னன் கை மன்னன், எருசலேம் வரலாற்றிலேயே மிகப்பெரிய படை ஒன்றை அனுப்பியிருந்தான். சலாகுத்தீனோ, தந்திரத்துடன் நீர்- உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடிய இடமொன்றுக்கு அப்படையை அறைகூவியிருந்தான். அப்போரில் பெருந்தோல்வியுற்ற கிறித்துவர்களிடம், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அமைதியாக வாழ்வது, அல்லது 40 நாட்களுக்குள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்பு - இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி கூறினான். விளைவாக, வெறூம் ஐந்து நாட்களுக்குள் கிறித்துவரின் 1187 அம்முற்றுகை தோல்வியடைந்து, பலஸ்தீனத்தின் பெரும்பகுதி சலாகுத்தீன் வசமானது. திருத்தந்தை மூன்றாம் அர்பன் இத்தோல்வியைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் நோயுற்று இறந்ததாகத் தெரிகிறது.[42] அவரை அடுத்து வந்த திருத்தந்தையான எட்டாம் கிரகோரி, எருசலேத்தைக் கைப்பற்றுவதற்கான மூன்றாம் சிலுவைப்போருக்கு அடிப்படையாக அமைந்த திருத்தந்தையின் ஆணை ஓலையை 1189இல் விடுத்தார். ஏக்கர் நகரில் முன்யோசனையின்றி எருசலேமின் கை மன்னனின் படையும், சலாகுத்தீனின் படையும் முற்றுகையிட்டபோது, இருபடைகளுக்குமே உணவு, நீருக்கு பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதன்போதே சிலுவைப்போரின் மாபெரும் துயர்களில் ஒன்றான, நரமாமிசம் உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.[43]

சிலுவைப்போரின் பிற்காலம்

தொகு
 
பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலத்தீன் - பைசாந்திய பேரரசுகள்.

ஆனால் கீழை நடுநிலத்துக்கான புனிதப்பயணம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. 1212இல் இடம்பெற்ற நான்காம் சிலுவைப்போருக்கு சிறுவரை அனுப்பும் வினோதமான வழக்கம் ஒன்று, மிகப்பரவலாகக் காணப்பட்டது. மூத்தவர்கள் தோற்கும்போது, சிலுவைப்போரில் சிறுவரின் அப்பாவித்தனம் வெல்லும் என்று நம்பப்பட்டது.[44] இதையடுத்து சலாகுத்தீனின் கொடிவழியில் வந்த எகிப்திய, சிரிய மன்னர்களுக்கு எதிரான ஐந்தாம் சிலுவைப்போர் 1217இல் இடம்பெற்றது.எருசலேமின் இரண்டாம் இசபெல்லாவை மணந்துகொண்ட உரோமானியப் பேரரசன் இரண்டாம் பிரடெரிக், , அவனது புகழ்பெற்ற யுத்த தந்திரோபாயங்களுடன் எருசலேம் மீது படையெடுத்து, ஆறாம் சிலுவைப்போரில் வெற்றிபெற்றான். எனினும் சிலுவைப்போர் தொடர்பில் பாப்பரசருடன் முரண்பட்ட அவன், சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டான்.[45] 1244இல் டமாஸ்கசு மன்னனுக்கு பணியாற்றச் சென்ற குவாரெசுமேனியன் கூலிப்படை, கிறித்துவ சிரியக் கூட்டுப்படையை வீழ்த்தி எருசலேமைக் கைப்பற்றியது. அதற்குப் பதிலாக பிரெஞ்சு மன்னன் ஒன்பதாம் லூயிஸ் அனுப்பிய படை ஏழாம் சிலுவைப்போரை நிகழ்த்தியது எனினும், அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.[46]


அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Davies 1997, ப. 358
  2. "Crusade". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  3. Determann 2008, ப. 13
  4. 4.0 4.1 Constable 2001, ப. 12–15
  5. Constable 2001, ப. 12
  6. Riley-Smith 2009, ப. 27
  7. Lock 2006, ப. 172–80
  8. Lock Routledge Companion p. 258
  9. American Heritage Dictionary of the English Language, Fourth Edition, Houghton Mifflin Company, 2009
  10. Wickham 2009, ப. 280
  11. Lock 2006, ப. 4
  12. Hindley 2004, ப. 14
  13. Pringle 1999, ப. 157
  14. Asbridge 2012, ப. 28
  15. Mayer 1988, ப. 2–3
  16. Rubenstein 2011, ப. 18
  17. Cantor 1958, ப. 8–9
  18. Riley-Smith 2005, ப. 8–10
  19. Asbridge 2012, ப. 34
  20. Pierson 2009, ப. 103
  21. Hindley 2004, ப. 20–21
  22. Cohn 1970, ப. 61, 64
  23. Slack 2013, ப. 108–09
  24. Hindley 2004, ப. 23
  25. Asbridge 2012, ப. 52–56
  26. Asbridge 2012, ப. 70–71
  27. Asbridge 2012, ப. 72–82
  28. Asbridge 2012, ப. 146–53
  29. Asbridge 2012, ப. 96–103
  30. Asbridge 2012, ப. 106
  31. Asbridge 2012, ப. 111–13
  32. Asbridge 2012, ப. 114
  33. Lock 2006, ப. 144–45
  34. Riley-Smith 2005, ப. 104–05
  35. Lock 2006, ப. 144
  36. Hindley 2004, ப. 77–85
  37. Hindley 2004, ப. 75–77
  38. Asbridge 2012, ப. 266–68
  39. Asbridge 2012, ப. 272–75
  40. Asbridge 2012, ப. 282–86
  41. Asbridge 2012, ப. 333–36
  42. Asbridge 2012, ப. 367
  43. Asbridge 2012, ப. 424
  44. Asbridge 2012, ப. 533–35
  45. Asbridge 2012, ப. 569
  46. Tyerman 2006, ப. 770–75

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவைப்_போர்கள்&oldid=3937443" இலிருந்து மீள்விக்கப்பட்டது